பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து சகோதர, சகோதரிகள், தாய்மார்கள், கிராமங்களைச் சேர்ந்த எனது விவசாய சகோதர சகோதரிகள் மற்றும் மிக முக்கியமாக, இந்த திட்டத்தில் இணைந்துள்ள எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஏராளமான மக்களை, லட்சக்கணக்கான குடிமக்களை என்னால் பார்க்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரை, முழு தேசமும் எனது குடும்பம், எனவே நீங்கள் அனைவரும் என் குடும்ப உறுப்பினர்கள். இன்று, எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இன்று, வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை 15 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த யாத்திரையை எப்படித் தொடங்குவது, என்ன மாதிரியான முன்னேற்பாடுகளைச் செய்வது என்பதில் ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக, நான் பார்க்கும் செய்தியின்படி, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பயணத்தில் இணைகிறார்கள். அதாவது, இந்த 15 நாட்களில் மட்டும் 'வளர்ச்சியின் ரதம்' முன்னேறியதால், மக்கள் அதன் பெயரை மாற்றியுள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அரசு இதை அறிமுகப்படுத்தியபோது, இது 'வளர்ச்சியின் ரதம்' என்று அழைக்கப்பட்டது, ஆனால் இப்போது மக்கள் இது 'ரதம்' அல்ல, மோடி உத்தரவாதத்தின் வாகனம் என்று கூறுகிறார்கள். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மோடியின் உத்தரவாத வாகனம் என்று நீங்கள் எதை அழைத்தீர்களோ, அதை மோடி எப்போதும் நிறைவேற்றுகிறார் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
சிறிது காலத்திற்கு முன்பு, பல பயனாளிகளுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் எவ்வளவு உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இதுவரை, இந்த மோடியின் உத்தரவாத வாகனம் 12,000 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சென்றடைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், அதில் இணைந்துள்ளனர், விவாதித்துள்ளனர், கேள்விகள் கேட்டுள்ளனர், தங்கள் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளனர், தங்களுக்குத் தேவைப்படும் விஷயங்களுக்கான படிவங்களை நிரப்பியுள்ளனர். முக்கியமாக, தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மோடியின் உத்தரவாத வாகனத்திற்கு அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இன்று, கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூட வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.
'வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை'யில் இளைஞர்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் சேரும் விதம், பல்வேறு இடங்களிலிருந்து காணொலிகளை நான் பார்த்த விதம் ஆகியவை மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கிராமத்தின் கதையை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதை நான் பார்க்கிறேன். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நான் நமோ செயலியில் தினமும் பார்க்கிறேன். இளைஞர்கள் தொடர்ந்து காணொலிகளைப் பதிவேற்றம் செய்து, தங்கள் வேலையைப் பற்றி பரவலாக தெரிவித்து வருகின்றனர். மோடியின் உத்தரவாத வாகனம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சில கிராமங்களில் மக்கள் ஒரு பெரிய தூய்மை இயக்கத்தைத் தொடங்கியதை நான் கண்டேன். அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? ஏனெனில் மோடியின் உத்தரவாத வாகனம் வந்து கொண்டிருந்தது. இந்த உற்சாகமும், அர்ப்பணிப்பும் மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது.
கிராமத்தில் இசைக்கருவிகளை இசைத்து, தீபாவளியைப் போலவே புத்தாடை உடுத்தி மக்கள் மகிழ்வதை நான் பார்த்திருக்கிறேன். மக்களும் அதே உத்வேகத்துடன் பணியாற்றி வருகின்றனர். 'வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை'யைப் பார்க்கும் எவரும் பாரதம் மேலும் முன்னேறிக் கொண்டே இருக்கும் என்று கூறுகிறார்கள். இப்போது, 'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்குவது என்பது 140 கோடி மக்களின் உறுதிப்பாடு. மக்கள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினால், நாடு வளர்ச்சி அடையும். சமீபத்தில் தீபாவளியின் போது மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுத்தல் பிரச்சாரத்தை நடத்தி, உள்ளூர் பொருட்களை வாங்குவதை நான் பார்த்தேன், இதன் விளைவாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டன. இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
நண்பர்களே,
'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தீர்மானம் மோடியின் அல்லது இந்த அரசின் தீர்மானம் அல்ல. அனைவரின் கனவுகளையும் 'அனைவரும் இணைவோம்' என்ற தாரக மந்திரம் மூலம் நிறைவேற்றும் தீர்மானம் இது. அது உங்கள் ஆசைகள் நிறைவேறும் சூழலை உருவாக்க விரும்புகிறது. 'வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை', இதுவரை புறக்கணிக்கப்பட்ட, தங்களைப் பற்றிய தகவல்கள் கூட இல்லாத மக்களுக்கு அரசு திட்டங்களையும் வசதிகளையும் கொண்டு செல்கிறது. அவர்களிடம் தகவல் இருந்தாலும், அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது அவர்களுக்குத் தெரியாது. இன்று நமோ செயலிக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல்களை அனுப்பி வருகின்றனர். பயனாளிகள் விடுபட்ட இடங்களில், அவர்களுக்கும் இப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது, பின்னர் அவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
மோடியின் உத்தரவாத வாகனம் வந்தபோது இரண்டு முக்கியமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் மற்றும் விவசாயத்தை நவீனமயமாக்கும் பணி ஒரு முன்முயற்சியாகும். மற்றொரு முயற்சி சேவை மற்றும் நல்லொழுக்கத்தை விட பெரிய பிரச்சாரம், ஏழை, கீழ் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம் அல்லது பணக்காரர் என இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, யாரும் நோயில் தனது வாழ்க்கையை கழிக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது.
கிராமப்புற சகோதரிகளை 'ட்ரோன் தீதிக்கள்' (ட்ரோன் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற சகோதரிகள்) ஆக்குவதாக செங்கோட்டையில் இருந்து அறிவித்தேன். இவ்வளவு குறுகிய காலத்தில், 10, 11 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்த கிராமப்புற சகோதரிகள் ட்ரோன்களை இயக்கக் கற்றுக்கொண்டதை நான் காண்கிறேன். விவசாயத்தில் ட்ரோன்களை எவ்வாறு பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லிகளை எவ்வாறு தெளிப்பது மற்றும் உரங்களை எவ்வாறு பரப்புவது என்பதை அவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 'நமோ ட்ரோன் தீதி' என்று பெயரிடுகிறேன். ஒவ்வொரு கிராமமும் 'ட்ரோன் தீதி'யை மதிக்கும் சூழலை உருவாக்கும் வகையில் 'நமோ ட்ரோன் தீதி' இன்று தொடங்கப்படுகிறது.
விரைவில், 15 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள், 'நமோ ட்ரோன் தீதி' திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும், மேலும் கிராமங்களில் உள்ள நமது சகோதரிகள் 'நமோ ட்ரோன் தீதி' மூலம் அனைவரின் மரியாதையையும் பெறுவார்கள், இது நம் நாட்டை முன்னோக்கி வழிநடத்தும். நம் சகோதரிகள் ட்ரோன் விமானிகளாக மாற பயிற்சி பெறுவார்கள். சகோதரிகளை தன்னிறைவு அடையச் செய்வதற்கான சுய உதவிக் குழுக்களின் பிரச்சாரத்தின் மூலம், ட்ரோன் திட்டமும் அவர்களுக்கு அதிகாரமளிக்கும். இது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை வழங்கும்.
நண்பர்களே,
இன்று, நாட்டின் 10,000 வது மக்கள் மருந்தக மையத்தின் தொடக்க விழாவும் நடந்துள்ளது, பாபாவின் நிலத்திலிருந்து 10,000 வது மையத்தின் மக்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாடு முழுவதும் பரவியுள்ள இந்த மையங்கள் ஏழை, நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகளை வழங்கும் குறிப்பிடத்தக்க மையங்களாக மாறியுள்ளன. கிராமங்களில் உள்ள மக்களுக்கு இந்த மையங்களின் பெயர்கள் தெரியாது என்பதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு குடிமகனும் அவற்றை மோடியின் மருந்து கடை என்று அன்புடன் அழைக்கிறார்கள். மோடியின் மருந்து கடைக்கு செல்வதாக கூறுகிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பெயரிடலாம், நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், அதாவது நீங்கள் நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், உங்கள் பணத்தையும் சேமிக்க வேண்டும். 25,000 மையங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக துவங்கியுள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகள், விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம், உணவு வழங்குவதையும் ஏழைகளின் கவலைகளைப் போக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலவச ரேஷன் திட்டத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க, நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, நீங்கள் உணவுக்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. சேமித்த பணத்தை உங்கள் மக்கள் நிதி கணக்கில் சேமிக்க வேண்டும். அந்த பணத்தை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்துங்கள். திட்டங்களை உருவாக்குங்கள், பணத்தை வீணாக்கக்கூடாது. இப்போது, 80 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவார்கள். இதன் மூலம் ஏழைகளுக்கு சேமிப்பு கிடைக்கும். இந்த பணத்தை அவர்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக முதலீடு செய்யலாம்.
நமது கிராமங்களில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். நாம் ஒன்றிணைந்து பாரதத்தை வளர்ச்சி அடையச் செய்வோம், நமது நாடு உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் நன்றி!