உயர் அதிகாரிகளே, என் குடும்ப உறுப்பினர்களே!
வாழ்த்துக்கள்!
லட்சத்தீவு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மட்டுப்படுத்தப்பட்டது. கப்பல் போக்குவரத்து முக்கியத் துறையாக இருந்தபோதும், துறைமுக உள்கட்டமைப்பு வளர்ச்சியடையவில்லை. கல்வி, சுகாதாரம் முதல் பெட்ரோல், டீசல் கிடைப்பது வரை பல்வேறு துறைகளில் சவால்கள் காணப்பட்டன. எங்கள் அரசு இப்போது இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக கவனித்து வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. லட்சத்தீவின் முதல் பெட்ரோல், எண்ணெய், உயவு எண்ணெய்க்கான மொத்த சேமிப்பு வசதி கவரட்டி, மினிக்காய் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
கடந்த பத்தாண்டுகளில், அகட்டியில் பல வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக நமது மதிப்புமிக்க மீனவர்களுக்கு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அகட்டி இப்போது ஒரு விமான நிலையம், ஒரு பனிக்கட்டி ஆலையைக் கொண்டுள்ளது. இது கடல் உணவு ஏற்றுமதி, கடல் உணவு பதப்படுத்தும் துறைகளில் சாத்தியக்கூறுகளைக் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் இப்பகுதியில் இருந்து சூரை மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு லட்சத்தீவு மீனவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
பிராந்தியத்தின் மின்சாரம், எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு பெரிய சூரிய மின் நிலையம், விமான எரிபொருள் கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இது உங்கள் அனைவருக்கும் கணிசமான நன்மைகளை வழங்குகிறது. அகட்டி தீவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இப்போது குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அடித்தட்டு மக்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. அகட்டி உட்பட லட்சத்தீவின் விரிவான வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு மனதுடன் அர்ப்பணித்துள்ளது.
உங்கள் அன்பான வரவேற்புக்கும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் திரண்டதற்கும் மனமார்ந்த நன்றி.