வணக்கம்!
மதிப்புமிக்க மத்திய அமைச்சர்களும், பெண்களும், பெருமக்களும் இன்று இங்கு கூடியிருக்கிறீர்கள்!
இன்று, தைரியமான சாஹிப்சாதாக்களின் தியாகத்தை தேசம் நினைவுகூர்கிறது. அவர்களின் அசைக்க முடியாத உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வீரப் புதல்வர் தினத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது முழு தேசமும் சாஹிப்சாதாக்களின் வீரக் கதைகளால் உத்வேகம் பெற்றது.
என் குடும்ப உறுப்பினர்களே,
வீரப்புதல்வர் தினம் இப்போது சர்வதேச அளவிலும் கொண்டாடப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கிரீஸ் போன்ற பல்வேறு நாடுகளில் வீரப்புதல்வர் தினம் தொடர்பான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் உலக சமூகம் பாரதத்தின் துணிச்சலான சாஹிப்சாதாக்களைப் பற்றி ஆழமான புரிதலைப் பெறும். அநீதி மற்றும் ஒடுக்குமுறையின் இருண்ட காலங்களில் கூட, இந்தியர்களாகிய நாம் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் முன்னோர்கள் தங்களுக்காக வாழ்வதை விட இந்த மண்ணுக்காக உயிர் துறப்பதையே தேர்ந்தெடுத்து உயர்ந்த தியாகம் செய்தனர்.
நண்பர்களே,
இன்று, நமது பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம். அடிமை மனப்பான்மையில் இருந்து பாரதம் வெளியே வருகிறது. இன்றைய பாரதம் அதன் மக்கள், திறன்கள் மற்றும் உத்வேகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. சாகிப்சாதாக்களின் தியாகம் சமகால பாரதத்திற்கு ஒரு தேசிய உத்வேகமாக அமைகிறது. பகவான் பிர்சா முண்டா மற்றும் கோவிந்த் குரு ஆகியோரின் தியாகங்களும் முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கின்றன. ஒரு நாடு தமது பாரம்பரியத்தில் பெருமையுடன் முன்னேறும்போது, உலகம் அதை மரியாதையுடன் பார்க்கிறது.
நண்பர்களே
உலகமே இப்போது இந்தியாவை வாய்ப்புகளின் பூமியாக அங்கீகரித்துள்ளது. இந்தியா தற்போது முக்கிய உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் தீவிரமாகப் பங்களிக்கிறது. பொருளாதாரம், அறிவியல், ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் கொள்கை உத்திகள் போன்ற துறைகளில், இந்தியா புதிய உயரங்களை அடைந்து வருகிறது. இது பாரதத்தின் நேரம். அடுத்த 25 ஆண்டுகள் பாரதத்தின் ஆற்றல் உச்சத்தை வெளிப்படுத்தும். இதை அடைவதற்கு நாம் ஐந்து கொள்கைகளைக் கடைப்பிடித்து நமது தேசியத் தன்மையை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கணமும் விலைமதிப்பற்றது. நாம் எந்த நேரத்தையும் வீணாக்க முடியாது.
என் குடும்ப உறுப்பினர்களே,
இன்று, பாரதம் ஒரு முக்கியமான சகாப்தத்தில் தன்னைக் காண்கிறது, வாழ்நாளில் ஒரு முறை வரும் ஒரு சகாப்தம்! இந்த 'அமிர்த காலம்' நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுத்துள்ளது. உலக அளவில் இளம் வயதினரைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட பாரதம் அவ்வளவு இளமையாக இருக்கவில்லை. இது நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லையற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
குதிராம் போஸ், படுகேஷ்வர் தத், கனக்லதா பருவா, ராணி கெய்டின்லியு மற்றும் பாஜி ரவுத் போன்ற நாயகர்கள், நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள். எந்தவொரு இலக்கையும் அடைவதற்கான ஒரு தேசத்தின் திறனை ஊக்குவிக்கும் இணையற்ற உந்துதலுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் உள்ளனர். அதனால்தான் இன்றைய குழந்தைகள் மீதும், இன்றைய இளைஞர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
என் குடும்ப உறுப்பினர்களே,
அடுத்த 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வரும். பாரதத்தின் இளைஞர்கள், எல்லையற்ற கனவுகளைக் கொண்டுள்ளனர். இந்தக் கனவுகளை நனவாக்க, தெளிவான செயல்திட்டம், தெளிவான தொலைநோக்குப் பார்வை, தெளிவான கொள்கை ஆகியவற்றை அரசு வகுத்துள்ளது. அதன் நோக்கங்களில் எந்தக் குறையும் இல்லை. இன்று பாரதம் உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கை 21 ஆம் நூற்றாண்டின் இளைஞர்களிடையே புதிய திறன்களை வளர்க்கும்.
நண்பர்களே
இன்று நமது வீரர்கள் ஒவ்வொரு சர்வதேச விளையாட்டுப் போட்டியிலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கேலோ இந்தியா இயக்கத்தின் கீழ் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் சிறந்த விளையாட்டு வசதிகளைப் பெறுகிறார்கள். வெளிப்படையான தேர்வு முறை மற்றும் நவீனப் பயிற்சிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, கிராமத்து ஏழைகளின் மகன்களும், மகள்களும் மூவர்ணக் கொடியின் மகிமையை உயர்த்தி வருகின்றனர். இளைஞர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது அற்புதமான பலன்களைத் தருகிறது.
நண்பர்களே,
இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது பற்றி பேசும்போது, நமது தேசத்தின் இளைஞர்களே அதில் முதன்மையாகப் பயனடைவார்கள். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களின் ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களை ஒருங்கிணைக்க நாடு தழுவிய இயக்கம் நடந்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் தொடர்பான ஆலோசனைகளை மைகவ் தளத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு அனைத்து இளைஞர்களையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் இளைஞர் சக்தியை ஒரே தளத்தில் கொண்டு வர அரசு மற்றொரு பெரிய தளத்தை, ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு அல்லது தளம் 'மேரா யுவ பாரத்' அதாவது மை பாரத் என்று அழைக்கப்படுகிறது. இந்த முக்கியமான தளம் தேசத்தின் இளம் மகள்கள் மற்றும் மகன்களுக்கான ஒரு பெரிய அமைப்பாக மாறி வருகிறது. அனைத்து இளைஞர்களும் மைபாத் தளத்தில் பதிவு செய்யுமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே,
வீரப்புதல்வர் தினத்தன்று, நாட்டின் அனைத்து இளைஞர்களும் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமான இளைஞர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் சிறந்து விளங்குவார்கள். இந்திய இளைஞர்கள் உடல் பயிற்சி, சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது, மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் மற்றும் போதுமான தூக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
நமது குருமார்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடமான, திறமையான, வலிமையான இளைஞர் படையை உருவாக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம். அனைவரின் முயற்சி என்ற உணர்வாலும் ஒருங்கிணைந்த முயற்சிகளாலும்தான் பாரதம் வளர்ச்சி அடையும். மாபெரும் குரு மரபுக்கும், துணிச்சலான சாஹிப்சாதாக்களுக்கும் அஞ்சலி செலுத்தி எனது உரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!