வாழ்த்துகள்! உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு போன்ற கொண்டாட்டங்களால் தற்போது நாடு முழுவதும் ஒரு பண்டிகை சூழல் பரவியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் உரையாடுவதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். தற்போது, அயோத்தியில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், என் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மிகவும் பின்தங்கிய ஒரு லட்சம் பழங்குடி சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இன்று வீடு கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று முதல் வீடு கட்டும் பணி தொடங்க உள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, வரும் பருவமழைக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த முறை நீங்கள் உங்கள் புதிய வீடுகளில் தீபாவளியைக் கொண்டாடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் சில தினங்களில், ஜனவரி 22-ம் தேதி, பகவான் ராமரை அவரது பிரம்மாண்டமான தெய்வீகக் கோயிலில் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு அழைப்பு வந்ததை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தால் இந்த பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த மகத்தான பணியின் முக்கியத்துவத்தையும், என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பையும் கருத்தில் கொண்டு, விரதம் இருக்க முடிவு செய்து, விழாவுக்கு முன்னதாக 11 நாட்கள் சிறப்பு நோன்பைத் தொடங்கியுள்ளேன்.
நண்பர்களே,
ஏழைகளின் நலனுக்காக 10 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளோம். இந்த தசாப்தத்தில், நாங்கள் ஏழைகளுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள உறுதியான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டவர்களை இன்று மோடி கெளரவிக்கிறார்.
உங்களுக்கு அரசு அணுகலை உறுதி செய்வதும், மிகவும் பின்தங்கிய பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கான அரசுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதும் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் ஆகும். இரண்டே மாதங்களில், பிரதமரின் ஜன்மன் திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை சாதிக்காத சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளன்று இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டதை நான் தெளிவாக நினைவில் கொள்கிறேன். ஏனெனில், எங்கள் அனைவரின் முன்பும் ஒரு பெரிய சவால் இருந்தது. தொலைதூரக் காடுகள், சவாலான மலைப்பகுதிகள், எல்லைப் பகுதிகள், பல தசாப்தங்களாக வளர்ச்சிக்காகக் காத்திருக்கும் பகுதிகள், அரசு இயந்திரம் கூட அடையக் கடினமாக இருந்த இடங்கள் போன்றவற்றில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய பழங்குடி நண்பர்களை, தனிநபர்களை சென்றடைய எங்கள் அரசு இந்த விரிவான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சகோதர சகோதரிகள் வாழும் சவாலான சூழ்நிலைகளை நாட்டில் உள்ள பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். சுத்தமான தண்ணீர் இல்லாததால், பல்வேறு நோய்கள் ஏற்படுகிறன; குறிப்பாகக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் பாம்புகள் மற்றும் பிற வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படுகிறது. அதே நேரத்தில் எரிவாயு இணைப்பு இல்லாததால் சமையலறைகளில் உள்ள எரிபொருட்களில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர். போதிய சாலை வசதி இல்லாததால், கிராமங்களில் போக்குவரத்து சவால்கள் அதிகரித்துள்ளன. ஏழ்மையில் வாடும் எனது பழங்குடி சகோதர, சகோதரிகளை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பது எனது கடமை. இந்தப் பிரச்சாரத்திற்கு ஜன்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது, இனி நீங்கள் விரக்தியுடன் வாழ வேண்டியதில்லை; இப்போது உங்கள் விருப்பம் நிறைவேறும், இதற்காக அரசு உறுதியாகவும் தயாராகவும் உள்ளது. இத்திட்டத்திற்கு அரசு ரூ. 23 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்குகிறது.
நண்பர்களே,
சமுதாயத்தில் யாரும் பின்தங்கிவிடாமல், அரசின் சலுகைகள் அனைவருக்கும் சென்றடையும் போதுதான் நம் நாடு முன்னேற முடியும். நாட்டில் சுமார் 190 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள் வாழ்கின்றனர். இரண்டே மாதங்களில், 80,000-க்கும் மேற்பட்ட மிகவும் பின்தங்கிய பழங்குடி நபர்களை அரசு அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கியது. கூடுதலாக, இந்த சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30,000 விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதியுடன் இணைக்கப்பட்டனர். இந்தப் பிரச்சாரத்தின் போது, இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத 40,000 நண்பர்களும் அடையாளம் காணப்பட்டனர். இப்போது அரசும் அவர்களின் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளது. மேலும், 30,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேளாண் கடன் அட்டைகளும், சுமார் 11,000 பேருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலக் குத்தகைகளும் வழங்கப்பட்டன. அரசின் ஒவ்வொரு திட்டமும் மிகவும் பின்தங்கிய பழங்குடி சகோதர, சகோதரிகளை விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றப்படும் ஓர் உத்தரவாதம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நண்பர்களே,
இந்த நிலையில், மிகவும் பின்தங்கிய பழங்குடி சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வீடு வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. ஒரு லட்சம் பழங்குடிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசு நேரடியாக வீடு கட்டுவதற்கான நிதியை மாற்றியுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 2.5 லட்சம் வழங்குகிறது. உங்களுக்கு வீடு மட்டுமல்ல, மின் இணைப்பும் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் படிக்கவும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும் முடியும். உங்கள் புதிய வீட்டில் எந்த நோயும் உங்களைத் தாக்காத வகையில் சுத்தமான தண்ணீர் வழங்கப்படும். அந்த இணைப்பும் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், சமையல் எரிவாயு இணைப்பும் இருக்கும். இன்று 1 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான நிதி கிடைத்துள்ளது. ஒவ்வொரு பயனாளியும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ஒவ்வொருவரையும் எங்கள் அரசு நிச்சயமாக சென்றடையும். இதை நான் சொல்லும்போது, இது மோடியின் உத்தரவாதம் என்பதை மீண்டும் சொல்கிறேன். வீடு கட்டுவதற்கான நிதியைப் பெற நீங்கள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட தர வேண்டியதில்லை. மத்திய அரசு நிதி வழங்குகிறது, யாராவது பங்கு கேட்டால், அவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்.
மேலும் எங்கள் அரசு நாடு முழுவதும் பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 10 குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்களை நிறுவத் தொடங்கியுள்ளதுது. உங்கள் கெளரவத்தையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்த நாங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!