பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
அனைத்து இளைஞர்கள் மற்றும் உங்களைப் போன்ற தைரியமான இதயங்களின் இந்த உற்சாகம் தேசிய ஒற்றுமை தினத்தின் பெரும் பலமாகும். ஒரு வகையில், ஒரு சிறிய இந்தியாவை என் முன் என்னால் பார்க்க முடிகிறது. வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள் மற்றும் வெவ்வேறு பாரம்பரியங்கள் உள்ளன, ஆனால் இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் ஒற்றுமையின் வலுவான நூலால் இணைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 15, நமது சுதந்திர தினக் கொண்டாட்ட நாளாகவும், ஜனவரி 26 நமது குடியரசு தினத்தைக் கொண்டாடும் நாளாகவும் இருப்பதைப் போலவே, அக்டோபர் 31-ஆம் தேதி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேசியவாதத்தைப் பரப்பும் திருவிழாவாக மாறியுள்ளது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு, ஜனவரி 26-ஆம் தேதி தில்லியின் கடமைப் பாதையில் அணிவகுப்பு மற்றும் அக்டோபர் 31-ஆம் தேதி ஒற்றுமை சிலை அருகே நர்மதா நதிக்கரையில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்வுகள் ஆகியவை தேசிய வளர்ச்சியின் மும்மூர்த்திகளாக மாறியுள்ளன. இன்று இங்கு நடைபெற்ற அணிவகுப்பும், நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவர்ந்துள்ளன. ஏக்தா நகருக்கு வருபவர்கள் இந்தப் பிரம்மாண்டமான சிலையைக் காண்பது மட்டுமல்லாமல், சர்தார் சாகேப்பின் வாழ்க்கை, அவரது தியாகம் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது பங்களிப்பையும் காணலாம். இந்தச் சிலையின் கட்டுமானத்தின் கதையே 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் பிரதிபலிப்பாகும். அதன் கட்டுமானத்திற்காக, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விவசாயிகள் இரும்பு மனிதனின் சிலைக்கு விவசாய கருவிகள் மற்றும் இரும்பை நன்கொடையாக வழங்கினர். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மண்ணைப் பெற்று இங்கு ஒற்றுமைச் சுவர் கட்டப்பட்டது. எவ்வளவு பெரிய எழுச்சி இது! இந்த நன்னாளில், சர்தார் வல்லபாய் படேலின் காலில் விழுந்து வணங்குகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்ப உறுப்பினர்களே,
வரும் 25 ஆண்டுகள், பாரதத்திற்கு இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான 25 ஆண்டுகள். இந்த 25 ஆண்டுகளில் நமது பாரதத்தை வளமாகவும், வளர்ச்சியுடனும் மாற்ற வேண்டும். சர்தார் படேலிடமிருந்து உத்வேகம் பெற்று ஒவ்வொரு இலக்கையும் அடைய வேண்டும்.
இன்று உலகமே பாரதத்தை உற்று நோக்குகிறது. இன்று, இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் உள்ளது. ஜி20 இல் இந்தியாவின் திறனைக் கண்டு உலகம் வியந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறப் போகிறோம் என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத அந்த இடத்தை இன்று பாரதம் சந்திரனில் அடைந்துள்ளது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இன்று, பாரதம், தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இன்று நம் தொழில் வல்லுநர்கள் உலகெங்கிலும் பில்லியன், ட்ரில்லியன் டாலர் நிறுவனங்களை நடத்தி வழிநடத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இன்று உலகின் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் மூவர்ணக் கொடியின் மகிமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். நாட்டின் இளைஞர்கள், மகன்கள் மற்றும் மகள்கள் அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வெல்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
நண்பர்களே,
'அமிர்த காலத்தில்', அடிமை மனப்பான்மையை உதறித் தள்ளி முன்னேற பாரதம் தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டை மேம்படுத்தி, நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறோம். இந்தியா தனது கடற்படைக் கொடியில் இருந்து காலனியத்தின் சின்னத்தை நீக்கியுள்ளது. காலனிய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட தேவையற்ற சட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஐ.பி.சி.க்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதாவும் மாற்றப்பட்டு வருகிறது. ஒரு முறை இந்தியா கேட்டில் ஒரு வெளிநாட்டு பிரதிநிதியின் சிலை இருந்தது; ஆனால் இப்போது அந்த இடத்தில் நேதாஜி சுபாஷின் சிலை நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
நண்பர்களே,
இன்று பாரதத்தால் அடைய முடியாத இலக்கு எதுவும் இல்லை. இந்தியர்களாகிய நாம் ஒன்றாக சாதிக்க முடியாத தீர்மானம் எதுவும் இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில், அனைவரும் முயற்சி செய்யும் போது, முடியாதது எதுவும் இல்லை என்பதை நாடு கண்டுள்ளது. 370-வது சட்டப்பிரிவில் இருந்து காஷ்மீர் விடுபடும் என்று யார் நினைத்திருப்பார்கள்? ஆனால் இன்று காஷ்மீருக்கும் நாட்டிற்கும் இடையிலான 370-வது பிரிவின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சர்தார் சாகேப் எங்கிருந்தாலும், அவர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார், நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இன்று காஷ்மீரின் எனது சகோதர சகோதரிகள் பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து வெளியே வந்து, சுதந்திரக் காற்றை சுவாசித்து, நாட்டின் வளர்ச்சியில் ஒன்றாக நடந்து வருகின்றனர். இந்தப் பக்கத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையும் 5-6 தசாப்தங்களாக கிடப்பில் இருந்தது. அனைவரின் முயற்சியாலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த அணையின் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
நண்பர்களே,
கெவாடியா இவ்வளவு மாறும் என்று 10-15 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைக்கவில்லை. இன்று ஏக்தா நகர் உலகளாவிய பசுமை நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'லைஃப் இயக்கம்' தொடங்கப்பட்ட நகரம் இது. நான் இங்கு வரும் போதெல்லாம் அதன் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும். இன்று இங்கு ஒரு சிறப்பு பாரம்பரிய ரயில் சேர்க்கப்பட உள்ளது, இது ஒரு புதிய சுற்றுலா ஈர்ப்பாக இருக்கும். ஏக்தா நகர் ரயில் நிலையம் மற்றும் அகமதாபாத் இடையே இயங்கும் இந்த ரயில் நமது பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகளின் ஒரு பார்வையைக் கொண்டுள்ளது. இதன் எஞ்சினுக்கு நீராவி எஞ்சின் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இது மின்சாரத்தில் இயங்கும். ஏக்தா நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இனி இங்குள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பஸ், இ-கோல்ப் வண்டி மற்றும் இ-சைக்கிள் ஆகியவற்றுடன் பொது பைக் பகிர்வு முறையும் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள நமது பழங்குடி சகோதர சகோதரிகள் இதன் மூலம் பெரும் பயனைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன.
நண்பர்களே,
பாரதத்தின் உறுதியின் வலிமையையும், இந்தியர்களின் வீரத்தையும், வலிமையையும், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான நமது விருப்பத்தையும் இன்று உலகமே மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாரதத்தின் நம்ப முடியாத மற்றும் இணையற்ற பயணம் இன்று அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
ஆனால் எனதருமை நாட்டுமக்களே,
சில விஷயங்களை நாம் மறக்கக் கூடாது. இன்று உலகம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்துள்ளன. இது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல நாடுகள் இன்று 30-40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பணவீக்கத்தை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலிலும் பாரதம் உலகில் கொடி கட்டிப் பறக்கிறது. சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக கடந்து நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். புதிய சாதனைகளைப் படைத்துள்ளோம், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முன்னோக்கிச் சென்ற கொள்கைகள் மற்றும் முடிவுகளின் தாக்கம் இன்று வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உணரப்படுகிறது. பாரதத்தில் வறுமை குறைந்து வருகிறது. 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தத் திசையில் நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். எனவே இந்தக் காலம் ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் யாரும் செய்யக் கூடாது. நாம் நமது நடவடிக்கைகளில் இருந்து விலகிச் சென்றால், நாமும் நமது இலக்கிலிருந்து விலகிச் செல்வோம். 140 கோடி இந்தியர்கள், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்த கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகக்கூடாது. நாம் எதிர்காலத்தை மனதில் கொண்டு, நமது தீர்மானங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.
என் நாட்டுமக்களே,
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் என்ற முறையில், சர்தார் படேல் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து மிகவும் கண்டிப்புடன் இருந்தார். அவர் ஒரு இரும்பு மனிதர். கடந்த 9 ஆண்டுகளாக, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்குப் பல முனைகளில் இருந்து சவால் விடப்பட்டுள்ளது. ஆனால், இரவு பகல் பாராமல் நமது ராணுவத்தினரின் கடின உழைப்பால், நாட்டின் எதிரிகள் தங்கள் திட்டங்களில் முன்பைப் போல வெற்றி பெற முடியவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லப் பயந்த அந்தக் காலகட்டத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. பண்டிகைக் கூட்டங்கள், சந்தைகள், பொது இடங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து மையங்களையும் குறிவைத்து நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க சதி நடந்தது. குண்டுவெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட பேரழிவையும், குண்டுவெடிப்பால் ஏற்பட்ட பேரழிவையும் மக்கள் பார்த்துள்ளனர். அதன் பிறகு விசாரணை என்ற பெயரில் அன்றைய அரசுகள் மெத்தனம் காட்டியதும் தெரிகிறது. நாடு மீண்டும் அந்தச் சகாப்தத்திற்கு திரும்ப அனுமதிக்கக் கூடாது; உங்கள் முழு சக்தியையும் கொண்டு அதை நிறுத்த வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் குறித்து நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து, புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
தேசிய ஒருமைப்பாட்டிற்கு, நமது வளர்ச்சிப் பயணத்தில் மிகப் பெரிய தடையாக இருப்பது திருப்திப்படுத்தும் அரசியல்தான். பயங்கரவாதத்தையும், அதன் கோரத்தையும், அதன் கொடூரத்தையும், ஒருபோதும் மக்கள் பார்ப்பதில்லை என்பதற்கு பாரதத்தின் கடந்த பல தசாப்தங்கள் ஒரு சாட்சியாகும். மானுடத்தின் எதிரிகளுடன் நிற்கத் தயங்குவதில்லை. பயங்கரவாத நடவடிக்கைகளை விசாரிப்பதைப் புறக்கணித்து, தேச விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கின்றனர். பயங்கரவாதிகளைக் காப்பாற்ற இவர்கள் நீதிமன்றத்தை அணுகும் அளவுக்கு இந்தத் திருப்திப்படுத்தும் கொள்கை மிகவும் ஆபத்தானது. இத்தகைய மனநிலை எந்தச் சமூகத்திற்கும் பயனளிக்காது. இது எந்த நாட்டிற்கும் ஒருபோதும் பயனளிக்காது. ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய சிந்தனைகளிலிருந்து ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு தருணத்திலும், எல்லா நேரங்களிலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே,
தற்போது நாட்டில் தேர்தல் சூழல் நிலவுகிறது. சில மாநிலங்களில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அரசியலை நேர்மறையான வழியில் பயன்படுத்துவதற்கான எந்த வழியையும் காணாத ஒரு மிகப் பெரிய அரசியல் பிரிவு நாட்டில் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த அரசியல் பிரிவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரான இத்தகைய தந்திரோபாயங்களைப் பின்பற்றுகிறது. தங்கள் சுயநலத்திற்காக நாட்டின் ஒற்றுமையை உடைக்க நேர்ந்தாலும், இந்தப் பிரிவினருக்கு அவர்களின் சுயநலமே முக்கியம். எனவே, இந்தச் சவால்களுக்கு மத்தியில், நாட்டு மக்களே, பொதுமக்களே, உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் நாட்டின் ஒற்றுமையைக் காயப்படுத்துவதன் மூலம் தங்கள் அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். இவற்றைப் பற்றி நாடு விழிப்புடன் இருந்தால் மட்டுமே, அதன் வளர்ச்சி இலக்குகளை அடைய முடியும். வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, ஒற்றுமை என்ற தாரக மந்திரத்துடன் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்த ஒற்றுமையை நிலைநாட்ட நாம் தொடர்ந்து நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும். எந்தத் துறையில் இருந்தாலும் 100 சதவீதம் கொடுக்க வேண்டும். வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க இது ஒன்றே சிறந்த வழியாகும். இதைத்தான் சர்தார் சாஹேப் நம் அனைவரிடமும் எதிர்பார்க்கிறார்.
நண்பர்களே,
சர்தார் சாகேப் பற்றிய தேசிய போட்டியும் மைகவ் சேனலில் இன்று தொடங்குகிறது. சர்தார் சாகேப் வினாடி வினா மூலம், நாட்டின் இளைஞர்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.
என் குடும்ப உறுப்பினர்கள்,
நாம் அனைவரும் இந்த தேசிய ஒற்றுமைத் திருநாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவோம். வாழ்க்கையில் ஒற்றுமை என்ற மந்திரத்தின்படி வாழ்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஒற்றுமைக்காக அர்ப்பணித்துக் கொண்டே இருங்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துகள்!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
மிகவும் நன்றி.