பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களே, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, எனது அமைச்சரவை சகா ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த மண்ணின் மைந்தர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களே, எனது தமிழக குடும்ப உறுப்பினர்களே!
வணக்கம்!
2024-ம் ஆண்டு அனைவருக்கும் அமைதியாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 2024-ம் ஆண்டில் எனது முதல் பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவது பெருமை அளிக்கிறது. கிட்டத்தட்ட ரூ. 20,000 கோடி மதிப்பிலான இந்த வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும். சாலை, ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் இந்த திட்டங்கள் தொடங்கப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டங்களில் பல பயணத்தை எளிதாக்குவதோடு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
நண்பர்களே,
2023-ம் ஆண்டின் கடைசி சில வாரங்கள் தமிழகத்தில் பலருக்கு கடினமாக இருந்தது. கன மழையால் சக குடிமக்கள் பலரை இழந்தோம். கணிசமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையைக் கண்டு நான் மிகவும் வருந்தினேன். இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ்நாடு மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்புதான் திரு விஜயகாந்த் அவர்களை இழந்தோம். சினிமா உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் அவர். திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் இதயங்களை வென்றார். ஒரு அரசியல்வாதியாக, அவர் எப்போதும் தேச நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே
இன்று, நான் இங்கு இருக்கும்போது, தமிழ்நாட்டின் மற்றொரு புதல்வர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களையும் நினைவு கூர்கிறேன். நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றியவர் அவர். அவரையும் கடந்த ஆண்டு இழந்தோம்.
எனதருமை தமிழ்க் குடும்ப உறுப்பினர்களே,
அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும் அமிர்த கால சகாப்தம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பாரதத்தைப் பற்றி நான் குறிப்பிடும்போது, அது பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாணங்களை உள்ளடக்கியது. இந்தப் பயணத்தில், தமிழகம் தனித்துவமான இடத்தை வகிக்கிறது. பாரதத்தின் பண்பாட்டுச் செழுமையையும், பாரம்பரியத்தையும் தமிழகம் பறைசாற்றுகிறது. மொழி மற்றும் ஞானத்தின் தொன்மையான களஞ்சியம் இந்த மாநிலத்தில் உள்ளது. திருவள்ளுவர் முதல் சுப்பிரமணிய பாரதி வரை எண்ணற்ற ஞானிகளும் அறிஞர்களும் குறிப்பிடத்தக்க இலக்கியங்களை இயற்றியுள்ளனர். சி.வி.ராமன் முதல் சமகால ஆளுமைகள் வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்திசாலித்தனம் இந்த மண்ணில் இருந்து வெளிப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தமிழக வருகையும் எனக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
திருச்சிராப்பள்ளி நகரம் புகழ்பெற்ற வரலாற்றச் சான்றுகளை தெளிவாகக் காட்டுகிறது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் போன்ற பல்வேறு வம்சத்தினர் பின்பற்றிய நல்லாட்சி மாதிரியை இது பிரதிபலிக்கிறது. பல தமிழ் நண்பர்களுடனான தனிப்பட்ட அறிமுகத்தின் காரணமாக, நான் தமிழ் கலாச்சாரம் குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளேன். உலக அளவில் எங்கு சென்றாலும், தமிழகத்தை பற்றி பேசாமல் இருப்பது கடினம்.
நண்பர்களே
தமிழ்நாட்டிலிருந்து பெறப்பட்ட கலாச்சார உத்வேகத்தை நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் தமிழ்நாட்டின் நல்லாட்சி மாதிரியிலிருந்து உத்வேகம் பெறும் அடையாளமாகும். காசி-தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகள் இதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த இயக்கங்கள் நாடு முழுவதும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளன.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், நவீன உள்கட்டமைப்பில் பாரதம் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், அடித்தட்டு மக்களுக்கான வீட்டுவசதி அல்லது சுகாதாரம் என எதுவாக இருந்தாலும், இந்தியா உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளைச் செய்து வருகிறது. இன்று, இந்தியா உலகளவில் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது ஒரு புதிய நம்பிக்கை ஒளியை வழங்குகிறது. முக்கிய உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து கணிசமான முதலீடுகள் பாரதத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இது தமிழகத்திற்கும் அதன் மக்களுக்கும் நேரடியாக பயனளிக்கிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் முக்கிய தூதராக தமிழகம் உருவெடுத்து வருகிறது.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
மாநில வளர்ச்சியின் மூலம் தேசிய வளர்ச்சி என்ற கோட்பாட்டை நமது அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. கடந்த ஓராண்டில் மத்திய அரசின் 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் 400-க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளனர். தமிழ்நாட்டின் விரைவான வளர்ச்சி, பாரதத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வளர்ச்சி, வர்த்தகம், வணிகம் மற்றும் பொதுமக்களுக்கு வசதியை மேம்படுத்துவதில் போக்குவரத்து இணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வளர்ச்சி உணர்வு இன்று திருச்சியில் தெரிகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், அதன் திறனை மும்மடங்கு அதிகரிக்கும். இது கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் நாட்டின் மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் இணைப்பை மேம்படுத்தும். இது கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கு பயனளிக்கும். அருகிலுள்ள பகுதிகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளையும் வணிகங்களையும் உருவாக்கும். திருச்சி விமான நிலையம் உள்ளூர் கலை, கலாச்சாரம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
தமிழகத்தின் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 5 புதிய திட்டங்கள் இன்று தொடங்கப்படுகின்றன. இந்த முன்முயற்சிகள் பயணம் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் தொழில் மற்றும் உற்பத்தியையும் அதிகரிக்கும். இன்று தொடங்கப்பட்ட சாலைத் திட்டங்கள் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற முக்கியமான இடங்களை இணைக்கின்றன. பக்தி, ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவின் குறிப்பிடத்தக்க மையங்கள் இவை. இதனால் பொதுமக்களும், யாத்ரீகர்களும் பெரிதும் பயனடைவார்கள்.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
கடந்த பத்தாண்டுகளில் துறைமுக மேம்பாட்டில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மீனவர்களின் வாழ்க்கையை மாற்றுவதிலும் நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மீன்வளத்துறைக்கென தனி அமைச்சகம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. கிசான் கடன் அட்டை வசதி முதல் முறையாக மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா மீன்வளத் துறையில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்குகிறது.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட சாலைகள் மூலம் இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் முயற்சியால், பாரதத்தின் துறைமுக திறன் மற்றும் கப்பல் திரும்பும் நேரம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகம் இன்று நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாகும். எங்கள் அரசு அதன் திறனை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. ஜெனரல் கார்கோ பெர்த்-2 மற்றும் கேபிடல் டிரெட்ஜிங் கட்டம்-5 ஆகியவற்றின் தொடக்க விழா தமிழ்நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதி திறன்களை மேம்படுத்தும், குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்கு பயனளிக்கும். அணு உலை மற்றும் எரிவாயு குழாய்கள் தமிழகத்தில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
தற்போது தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதியை முதலீடு செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடியை எங்கள் அரசு ஒதுக்கியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியை விட 2.5 மடங்கு அதிக நிதியை தமிழகத்துக்கு எங்கள் அரசு வழங்கியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க எங்கள் அரசு மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது. அதேபோல், 2014-ம் ஆண்டை விட தமிழகத்தில் ரயில்வேத் துறையை நவீனப்படுத்த 2.5 மடங்கு அதிக முதலீடு செய்துள்ளோம். இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் மத்திய அரசிடமிருந்து இலவச ரேஷன் மற்றும் மருத்துவ வசதிகளைப் பெறுகின்றன. இங்குள்ள மக்களுக்கு வீடுகள், கழிவறைகள், குழாய்-குடிநீர் இணைப்புகள், எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை எங்கள் அரசு வழங்கியுள்ளது.
அன்பான குடும்ப உறுப்பினர்களே,
வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம். தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் திறமை மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. தமிழக இளைஞர்களிடையே புதிய சிந்தனைகளும், உற்சாகமும் உருவாவதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த உற்சாகம் வளர்ந்த பாரதத்திற்கான உந்து சக்தியாக இருக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
வணக்கம்!