அனைவருக்கும் வணக்கம்!
மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பாய்ஸ் அவர்களே, முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மேடையில் உள்ள இதர பிரமுகர்களே.
இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான நமது விவசாய சகோதர சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அவர்களையும் நான் வரவேற்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
சத்ரபதி சிவாஜி மகராஜின் இந்த புனித பூமியை நான் மரியாதையுடன் வணங்குகிறேன். மகாராஷ்டிரத்தின் புதல்வரும், நாட்டின் பெருமைக்குரியவருமான டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
நண்பர்களே,
10 ஆண்டுகளுக்கு முன்பு "தேநீர் பங்க உரையாடல்" நிகழ்ச்சிக்காக நான் யவத்மாலுக்கு வந்தபோது, நீங்கள் என்னை மிகவும் உற்சாகமாக வரவேற்றீர்கள். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300க்கும் மேற்பட்ட இடங்களை நாட்டு மக்கள் கொடுத்தர். பின்னர், 2019 பிப்ரவரியில் மீண்டும் யவத்மாலுக்குப் பயணித்தேன். மீண்டும், நீங்கள் எங்கள் மீது அன்பைப் பொழிந்தீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 350 க்கும் மேற்பட்ட இடங்களை தேசம் வழங்கியது. இப்போது, 2024 தேர்தலுக்கு முன்பு நான் வந்துள்ளேன். இந்த முறை, தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என நம்புகிறேன்!
நண்பர்களே,
நாங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜை ஒரு முன்னுதாரணமாக கருதுபவர்கள். அவர் ஆட்சி செய்து 350 ஆண்டுகள் ஆகிவிட்டன. தேசத்தின் உணர்வையும் சக்தியையும் அவர் முதன்மையாகக் கொண்டிருந்தார். அவர் உயிருடன் இருந்தவரை, இந்த நோக்கத்திற்காக உழைத்தார். அவரைப் போலவே நாமும் தேசத்தைக் கட்டமைக்க வேண்டும், மக்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்பட்டிருக்கிறோம். எனவே, கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்தவை அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் ஆகும். பாரதத்தின் ஒவ்வொரு மூலையையும் மேம்படுத்த நான் உறுதி பூண்டுள்ளேன்.
நண்பர்களே
இன்று, யவத்மாலில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம் மற்றும் அர்ப்பணிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த சாதனைத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மத்தியில் முந்தைய ஆட்சிகளின்போது கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு அரசுத் திட்டப் பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையைப் பாருங்கள். நான் ஒரு பொத்தானை அழுத்தினேன், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 21,000 கோடி ரூபாய் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்குகளை அடைந்துள்ளது. 21,000 கோடி ரூபாய் என்பது சிறிய தொகை அல்ல. இது மோடியின் உத்தரவாதம். முந்தைய அரசு ஆட்சியில் இருந்தபோது, தில்லியில் இருந்து வழங்கப்பட்ட 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளை சென்றடைந்தது. இன்று அந்த நிலை இருந்திருந்தால் நீங்கள் பெற்ற 21,000 கோடியில் 18,000 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆட்சியில் ஏழைகளின் ஒவ்வொரு பைசாவும் அவர்களைச் சென்றடைகிறது. இது மோடியின் உத்தரவாதம். ஒவ்வொரு பயனாளியும் தங்கள் முழு உரிமையைப் பெறுகிறார், ஒவ்வொரு பைசாவும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு செல்கிறது.
நண்பர்களே,
மகாராஷ்டிராவின் விவசாயிகளுக்கு இரட்டை இன்ஜின் அரசின் இரட்டை உத்தரவாதம் உள்ளது. சமீபத்தில், மகாராஷ்டிராவின் விவசாயிகளுக்கு கூடுதலாக 3800 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதாவது, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தில் மகாராஷ்டிரா விவசாயிகள், மாநில அரசு சார்பில் தனியாக ஆண்டுதோறும் 12,000 ரூபாய் உதவித் தொகை பெறுகிறார்கள்.
நண்பர்களே,
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மகாராஷ்டிராவின் விவசாயிகளுக்கு 30,000 கோடி ரூபாயும், யவத்மால் பகுதி விவசாயிகளுக்கு 900 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. இந்த பணம் சிறு விவசாயிகளுக்கு எவ்வளவு பயனளிக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். தற்போது கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 340 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் உள்ள லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும். சில நாட்கள் முன்பாக, நமது கிராமங்களில் தானிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கிடங்குகள் நமது விவசாய கூட்டுறவு சங்கங்களால் நிர்வகிக்கப்படும். இது குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். அவர்கள் தங்கள் விளைபொருட்களை அவசரமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படாது.
நண்பர்களே,
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு கிராமப்புற பொருளாதாரம் வலுவாக இருப்பது முக்கியம். கடந்த 10 ஆண்டுகளாக, கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவர்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். நீரின் முக்கியத்துவத்தைப் பற்றி விதர்பாவை விட வேறு யார் நன்றாக அறிந்திருக்க முடியும்? குடிநீராக இருந்தாலும் சரி, பாசன நீராக இருந்தாலும் சரி, 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் கிராமங்களில் நெருக்கடி இருந்தது. ஆனால், அப்போதைய அரசுக்கு இது குறித்து எந்தக் கவலையும் இருக்கவில்லை. 2014-ம் ஆண்டு வரை நாட்டின் கிராமங்களில் 100 குடும்பங்களில் 15 குடும்பங்கள் மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் பெற்றன. இது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஒரு பெரிய நெருக்கடியாக இருந்தது. இந்த நிலைமையை மாற்றவும், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நெருக்கடியைப் போக்கவும், செங்கோட்டையிலிருந்து 'ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்' என்ற உத்தரவாதத்தை வழங்கினேன். அது மோடியின் உத்தரவாதம். இன்று, 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 100 கிராமப்புற குடும்பங்களில் 75 குடும்பங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் சென்றடைந்துள்ளது. முன்பு மகாராஷ்டிரத்தில் 50 லட்சத்துக்கும் குறைவான குடும்பங்கள் குழாய்கள் மூலம் குடிநீர் பெற்றிருந்த நிலையில், இன்று சுமார் 1.25 கோடி குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால்தான் மோடியின் உத்தரவாதம் நிறைவேற்றப்படக் கூடிய உத்தரவாதம் என்று நாடு சொல்கிறது.
நண்பர்களே,
நாட்டின் விவசாயிகளுக்கு மோடி மற்றொரு உத்தரவாதத்தை அளித்துள்ளார். முந்தைய அரசுகள் பெரிய நீர்ப்பாசன திட்டங்களை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தன. தற்போது அவற்றில் 60க்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களில், மகாராஷ்டிரா 26 திட்டங்களுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. முன்பு நிறுத்தப்பட்ட இந்த 26 திட்டங்களில், 12 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
கிராமங்களின் சகோதரிகளை 'லட்சாதிபதி சகோதரிகள்' ஆக்குவது மோடியின் உத்தரவாதம். இதுவரை நாட்டில் ஒரு கோடி சகோதரிகள் 'லட்சாதிபதிகள்' ஆகியுள்ளனர். இந்த ஆண்டு பட்ஜெட்டில், மூன்று கோடி சகோதரிகளை 'லட்சாதிபதி சகோதரிகள்' ஆக்குவதற்கான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.
நண்பர்களே,
இப்போது, சகோதரிகள் இ-ரிக்ஷாக்களை இயக்குகிறார்கள். விரைவில் அவர்கள் ட்ரோன்களையும் பறக்கவிடுவார்கள். நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் விமானிகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் பிறகு, இந்த சகோதரிகளுக்கு அரசாங்கம் ட்ரோன்களை வழங்கும். அவை விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும்.
நண்பர்களே,
இன்று, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் சிலை திறப்பு விழாவும் இங்கு நடைபெற்றது. அவரது வாழ்க்கை முழுவதையும் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணித்தார். நாம் அனைவரும் பண்டிட் ஜியின் சிந்தனைகளிலிருந்து உத்வேகம் பெறுகிறோம். கடந்த 10 ஆண்டுகள் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இதுவரை கவனிக்கப்படாமல் இருந்தவர்களை மோடி கவனித்து வழிபட்டு வருகிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் இன்னும் வேகமான வளர்ச்சி ஏற்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் விதர்பாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றும். மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் வாழ்த்துகள்.
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
மிக்க நன்றி.