கர்நாடக மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் அரசு மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்கட்டமைப்பு முன்னேற்றம் தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம் கிருஷ்ண ராஜ வாடியார் மற்றும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா ஆகிய இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. இந்த மண்ணில் அவதரித்த இந்த மாபெரும் மனிதர்கள் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய பாதையை வகுத்துத் தந்தார்கள். இது போன்ற ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு, நவீன உள்கட்டமைப்பு பணிகள் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்கட்டமைப்பு, வசதியை அளிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் வருமானத்திற்கான ஆதாரத்தையும் வழங்குகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முதலீடு செய்துள்ளோம். கர்நாடகாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு மற்றும் மைசூருவை நவீன முறையில் இணைப்பது அவசியமாகிறது. பெங்களூரு- மைசூரு விரைவுச் சாலை தற்போது தொடங்கப்பட்டிருப்பதால் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 1.5 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஒட்டுமொத்த பகுதியின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறும்.
ஏழை மக்களுக்கு தரமான வீடு, குடிநீர் குழாய் இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, கிராமங்களுக்கு சாலை வசதிகள், மருத்துவமனைகள், மற்றும் முறையான சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதற்கு பா.ஜ.க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு வளம் பெற்றுள்ளது.
பா.ஜ.க அரசு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அளித்து வருகிறது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ் கர்நாடக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 12,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ. 6000 உதவித் தொகையை வழங்குவதோடு கர்நாடக மாநில அரசு கூடுதலாக ரூ. 4,000 வழங்குகிறது.
கர்நாடகாவின் விரைவான வளர்ச்சிக்கு இரட்டை எஞ்சின் அரசு அவசியம். வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்