பாரத மாதா கி - ஜெ!
பாரத மாதா கி - ஜெ!
வணக்கம்!
இந்த காட்சி உண்மையிலேயே அற்புதமானது. உங்கள் உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இங்கு காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து நீங்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் போலந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டவர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்தியத்தன்மை என்ற உணர்வால் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வரவேற்பை அளித்துள்ளீர்கள். இந்த வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும், போலந்து மக்களுக்கும் நான் நன்றி கூறிகிறேன்.
நண்பர்களே,
கடந்த ஒரு வாரமாக, நீங்கள் அனைவரும் இந்திய ஊடகங்களின் மீது கவனம் செலுத்தினீர்கள். போலந்து மக்களைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. போலந்தைப் பற்றியும் அதிகம் பகிரப்பட்டுள்ளன. 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் போலந்து செல்வதாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியும் வெளியாகி வருகிறது. பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, நான் ஆஸ்திரியா சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்தியப் பிரதமர் சென்று நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுபோன்ற பல நாடுகளுக்குப் பல ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் செல்லவில்லை. ஆனால் இப்போது, சூழ்நிலை வேறு. முன்பு பல ஆண்டுகளாக, அனைத்து நாடுகளிடமும் தூரத்தைப் பராமரிப்பதே பாரதத்தின் கொள்கையாக இருந்தது. அனைத்து நாடுகளுடனும் சமமான நெருக்கத்தைப் பேணுவதே இன்றைய பாரதத்தின் கொள்கையாக உள்ளது. இன்றைய பாரதம் அனைவருடனும் இணைந்திருக்க விரும்புகிறது. இன்றைய பாரதம் அனைவரின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. இன்று உலகம் பாரதத்தை 'விஸ்வ பந்து' (உலகளாவிய நண்பன்) என்று கௌரவிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். நீங்களும் இதை இங்கே அனுபவிக்கிறீர்கள் அல்லவா? என் தகவல் சரியானது தானே?
நண்பர்களே,
எங்களைப் பொறுத்தவரை, இது புவிசார் அரசியல் பற்றியது அல்ல. மதிப்புகள் மற்றும் மரபுகளைப் பற்றியது. வேறு எங்கும் இடமில்லாதவர்களுக்கு, பாரதம் தனது இதயத்திலும், நிலத்திலும் இடம் கொடுத்தது. இது நமது பாரம்பரியம். இதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றனர். பாரதத்தின் இந்த நித்திய உணர்வுக்கு போலந்து சாட்சியாக இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது போலந்து பல இன்னல்களால் சூழப்பட்டபோது, ஆயிரக்கணக்கான போலந்து பெண்களும் குழந்தைகளும் அடைக்கலம் தேடி அலைந்து கொண்டிருந்தபோது, ஜாம் சாஹேப், திக்விஜய் சிங் ரஞ்சித்சிங் ஜடேஜா முன்வந்தார். போலந்து பெண்கள், குழந்தைகளுக்காக சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். முகாமில் இருந்த போலந்து நாட்டுக் குழந்தைகளிடம் ஜாம் சாஹேப் பேசுகையில், நவநகர் மக்கள் எப்படி என்னை 'பாபு' (தந்தை) என்று அழைக்கிறார்களோ, அதேபோல் நானும் உங்கள் 'பாபு'தான் என்று கூறினார்.
நண்பர்களே,
ஜாம் சாஹேப்பின் குடும்பத்தினருடன் எனக்கு நெருங்கிய உறவு உள்ளது. அவர்கள் என் மீது மிகுந்த பாசம் காட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்புகூட தற்போதைய ஜாம் சாஹேப்பை சந்திக்க சென்றிருந்தேன். அவரது அறையில் போலந்து தொடர்பான படம் இன்னும் உள்ளது. ஜாம் சாஹேப் வகுத்துத் தந்த பாதையை போலந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜாம்நகர் உட்பட குஜராத்தில் பேரழிவு தரும் பூகம்பம் ஏற்பட்டபோது, முதலில் உதவ முன்வந்த நாடுகளில் போலந்தும் ஒன்று. போலந்து மக்கள் ஜாம் சாஹிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பாக, டோப்ரே மகாராஜா நினைவிடத்தையும், கோலாப்பூர் நினைவிடத்தையும் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இந்த மறக்க முடியாத தருணத்தில், சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜாம் சாஹேப் நினைவு இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை பாரதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 20 போலந்து இளைஞர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்படுவார்கள். இது போலந்து இளைஞர்களுக்கு பாரதத்தை புரிந்து கொள்ள அதிக வாய்ப்புகளை வழங்கும்.
நண்பர்களே,
இங்குள்ள கோலாப்பூர் நினைவகம் மூலம் போலந்து மக்களால் கோலாப்பூரின் சிறந்த அரச குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது போலந்து மக்கள் மகாராஷ்டிரா மற்றும் மராத்தி கலாச்சாரத்தின் மக்களுக்குச் செலுத்தும் மரியாதை ஆகும். மராத்தி கலாச்சாரத்தில், மனிதநேய நடைமுறைக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் ஈர்க்கப்பட்டு, கோலாப்பூர் அரச குடும்பம் போலந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாலிவாடேயில் தங்குமிடம் அளித்தது. அங்கு ஒரு பெரிய முகாமும் அமைக்கப்பட்டது. போலந்து பெண்களும் குழந்தைகளும் எந்தக் கஷ்டத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக மகாராஷ்டிர மக்கள் இரவு பகலாக உழைத்தனர்.
நண்பர்களே,
இன்று, மான்டே காசினோ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இந்த நினைவகம் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களின் தியாகத்தை நமக்கு நினைவூட்டுகிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியர்கள் தங்கள் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றியுள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டின் பாரதம், அதன் பழங்கால மதிப்புகள் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. இன்று, இந்தியர்கள் உலகிற்கு நிரூபித்த குணங்களுக்காக பாரதத்தை உலகம் அங்கீகரிக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது முயற்சிகளுக்காக அறியப்படுகிறோம். உலகில் நாம் எங்கு சென்றாலும், இந்தியர்களாகிய நாம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வதைக் காண முடிகிறது. தொழில்முனைவோராக இருந்தாலும், பராமரிப்பாளர்களாக இருந்தாலும் அல்லது நமது சேவைத் துறையாக இருந்தாலும், இந்தியர்கள் தங்கள் முயற்சிகள் மூலம் தங்களுக்கும் தங்கள் நாட்டிற்கும் ஒரு நற்பெயரை உருவாக்கி வருகின்றனர். இந்தியர்கள் தங்கள் சிறப்புக்காக உலகெங்கிலும் அங்கீகரிக்கப்படுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும் சரி, இந்திய மருத்துவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் தங்கள் சிறப்பால் ஜொலிக்கிறார்கள்.
நண்பர்களே,
இந்தியர்களின் மற்றொரு அடையாளம் நமது உதவி மனப்பான்மை. உலகின் எந்த நாட்டிலும் நெருக்கடி வரும்போதெல்லாம், உதவிக்கரம் நீட்டும் முதல் நாடு பாரதம்தான். 100 ஆண்டுகளில் மிகப்பெரிய பேரழிவான கொரோனா தாக்கியபோது, 'மனிதநேயம் முதலில்' என்று பாரதம் கூறியது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகளை அனுப்பினோம். உலகின் எந்த மூலையில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும், 'மனிதநேயம் முதலில்' என்பதே பாரதத்தின் தாரக மந்திரம். போராக இருந்தாலும் சரி, 'மனிதநேயம் முதன்மையானது' என்று பாரதம் கூறுகிறது, இந்த உணர்வுடன், பாரதம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவுகிறது.
நண்பர்களே,
பாரதம் புத்தரின் பாரம்பரிய பூமி. புத்தர் என்று வரும்போது, அது அமைதியைப் பற்றியது. போரைப் பற்றியது அல்ல. எனவே, இந்த பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு பாரதம் குரல் கொடுக்கும் நாடாக உள்ளது. பாரதத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. இது போருக்கான காலம் அல்ல. மனிதகுலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஒன்றுபட வேண்டிய நேரம் இது. எனவே, பாரதம் உரையாடலை வலியுறுத்துகிறது.
நண்பர்களே,
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உதவிய விதத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம். நீங்கள் அவர்களுக்கு நன்றாக சேவை செய்தீர்கள். போலந்து அரசாங்கம் எங்கள் மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளைக் கூட தள்ளுபடி செய்தது. போலந்து முழு மனதுடன் எங்கள் குழந்தைகளுக்காக அதன் கதவுகளைத் திறந்தது. இன்றும் கூட, உக்ரைனில் இருந்து திரும்பிய குழந்தைகளை நான் சந்திக்கும்போது, அவர்கள் போலந்து மக்களையும் உங்களையும் மிகவும் பாராட்டுகிறார்கள். எனவே, இன்று நான் உங்கள் அனைவரையும், போலந்து மக்களையும் 140 கோடி இந்தியர்களின் சார்பில் பாராட்டுகிறேன். உங்களை வணங்குகிறேன்.
நண்பர்களே,
பாரதம் - போலந்து இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. ஒரு பெரிய ஒற்றுமை நமது ஜனநாயகம். பாரதம் ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல. அனைவரது பங்கேற்புடன் கூடிய துடிப்பான ஜனநாயகமும் கூட. பாரத மக்கள் ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை அண்மையில் நடந்த தேர்தல்களில் பார்த்தோம். வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் இதுவாகும். சமீபத்தில், ஐரோப்பிய யூனியனிலும் தேர்தல்கள் நடந்தன. அங்கு சுமார் 180 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்தியாவில், சுமார் 640 மில்லியன் வாக்காளர்கள், அதாவது அந்த எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் பங்கேற்றனர். பாரதத்தில் நடந்த இந்தத் தேர்தல்களில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் பங்கேற்றன. சுமார் 8,000 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் மற்றும் 15 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுடன், தேர்தல் நடைபெற்றது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலமாகும். உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த எண்களைக் கேட்கும்போது, ஆச்சரியப்படுகிறார்கள்.
நண்பர்களே,
இந்தியர்களாகிய நமக்கு பன்முகத்தன்மையுடன் எப்படி வாழ்வது என்பதும், அதை எவ்வாறு கொண்டாடுவது என்பதும் தெரியும். அதனால்தான் நாம் எந்த சமூகத்துடனும் எளிதாக இணைந்து செயல்படுகிறோம். போலந்தில், பாரதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. இங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் இது தெளிவாகத் தெரிகிறது. உங்களில் பலர் வார்சா பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தைப் பார்வையிட்டிருப்பீர்கள். அங்கே, பகவத் கீதை மற்றும் உபநிடதங்களின் மேற்கோள்கள் நம் அனைவரையும் வரவேற்கின்றன. தமிழ், சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளைப் படிக்கும் பலர் இங்கு உள்ளனர். இங்குள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் தொடர்பான இருக்கைகளும் உள்ளன. போலந்து மற்றும் இந்தியர்களுக்கும் கபடி மூலம் தொடர்பு உள்ளது. பாரதத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் கபடி விளையாடப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விளையாட்டு பாரதத்தில் இருந்து போலந்து வரை சென்றடைந்தது. போலந்து மக்கள் கபடியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். போலந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பிய கபடி சாம்பியனாக இருந்து வருகிறது. ஆகஸ்ட் 24 முதல் மீண்டும் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது என்றும், முதல் முறையாக போலந்து அதை நடத்துகிறது என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. உங்கள் மூலம் போலந்து கபடி அணிக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
நீங்கள் சமீபத்தில் இங்கு சுதந்திர தின விழாவைக் கொண்டாடினீர்கள். சுதந்திர இயக்கத்தின் போது நமது சுதந்திர போராட்ட வீரர்கள் வளமான பாரதம் தொடர்பான கனவு கண்டனர். இன்று, ஒவ்வொரு இந்தியரும் அந்தக் கனவை நிறைவேற்ற அயராது உழைக்கிறார்கள். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாற பாரதம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நம் நாடு அந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இன்றைய பாரதம் முன்னெப்போதும் இல்லாத அளவில், வேகத்தில், தீர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது. பாரதத்தில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகமும், அளவும் உங்களை பெருமிதம் கொள்ளச் செய்யும். நான் சொல்லட்டுமா? கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 250 மில்லியன் என்பது பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். 10 ஆண்டுகளில், ஏழைகளுக்காக 40 மில்லியன் உறுதியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 30 மில்லியன் வீடுகளை நாங்கள் கட்ட உள்ளோம். இன்று போலந்தில் 14 மில்லியன் குடும்பங்கள் உள்ளன என்றால், பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று புதிய போலந்துகளை நாம் கட்டியுள்ளோம். உள்ளடக்கிய நிதி சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். 10 ஆண்டுகளில், பாரதம் 50 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளை நாங்கள் தொடங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை ஐரோப்பிய யூனியனின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். யுபிஐ மூலம் பாரதத்தில் தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகைக்கு சம்மாக நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனில் உள்ள மொத்த மக்கள் தொகையை விட அதிகமான இந்தியர்கள் அரசிடம் இருந்து 5,00,000 ரூபாய் இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் பிராட்பேண்ட் பயனர்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 940 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மக்கள் தொகையை நீங்கள் கூட்டினால், அது இன்று பிராட்பேண்ட் பயன்படுத்தும் இந்தியாவின் மக்களின் எண்ணிக்கைக்கு சமம். கடந்த பத்தாண்டுகளில், சுமார் 7,00,000 கிலோமீட்டர் கண்ணாடி இழை கேபிள் போடப்பட்டுள்ளது. இது பூமியை எழுபது முறை சுற்றுவதற்குச் சமம். பாரதம் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஜி நெட்வொர்க்குகளைக் கொண்டு வந்துள்ளது. இப்போது, நாங்கள் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் 6ஜி கட்டமைப்புகளை நோக்கிப் பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
பாரதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அளவு பொதுப் போக்குவரத்திலும் கண்கூடாகத் தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் பாரதத்தின் 5 நகரங்களில் மெட்ரோக்கள் செயல்பாட்டில் இருந்தன. இன்று, 20 நகரங்களில் உள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை போலந்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு சம்மாக உள்ளது.
நண்பர்களே,
பாரதம் எது செய்தாலும், அது புதிய சாதனை படைக்கிறது, வரலாறு படைக்கிறது. பாரதம் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதை நீங்கள் பார்த்தீர்கள். அதுவே ஒரு சாதனை தான். ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினம். உங்களுக்கும் தெரியும் அல்லவா? உனக்கு நினைவிருக்கிறதா? இதே நாளில், பாரதம் தனது சந்திரயான் விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியது. வேறு எந்த நாடும் சென்றடையாத இடத்தை பாரதம் அடைந்துள்ளது. அந்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரதம் உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.
நண்பர்களே,
உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு சுமார் 16-17 சதவீதம். ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு முன்பு குறிப்பிடத்தக்கதாக இல்லை. இப்போது, நிலைமை வேகமாக மாறி வருகிறது. உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 2023-ல் 16 சதவீதத்தைத் தாண்டியது. இன்று, ஒவ்வொரு உலகளாவிய நிறுவனமும் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தை கணிக்கின்றன. இவர்கள் ஜோதிடர்கள் அல்ல; அவர்களின் கணக்கீடுகள் புள்ளிவிவரங்கள் மற்றும் கள யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டவை. பாரதம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது வெகு தொலைவில் இல்லை. எனது மூன்றாவது பதவிக்காலத்தில் பாரதம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எனது நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளேன். வரும் ஆண்டுகளில், பாரதத்தின் மிகப்பெரிய பொருளாதார எழுச்சியை உலகம் காணப் போகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு காரணமாக இந்த பத்து ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று நாஸ்காம் மதிப்பிட்டுள்ளது. நாஸ்காம் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆகியவை அடுத்த 3-4 ஆண்டுகளில் பாரத்தின் செயற்கை நுண்ணறிவுச் சந்தை 30-35 சதவீத வேகத்தில் வளரும் என்று மதிப்பிட்டுள்ளன. எல்லா இடங்களிலும் பாரதத்தைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத நேர்மறைக் கருத்து நிலவுகிறது. இன்று, பாரதம், செமிகண்டக்டர் இயக்கம், ஆழ்கடல் இயக்கம், பசுமை ஹைட்ரஜன் இயக்கம், தேசி குவாண்டம் இயக்கம் ஆகியவற்றில் பணியாற்றி வருகிறது. எதிர்காலத்தில் தனது விண்வெளி நிலையத்தை நிறுவவும் பாரதம் தயாராகி வருகிறது. இந்தியாவில் உருவாக்கப்படும் ககன்யானில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு பயணம் செய்வதை நீங்கள் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நண்பர்களே,
பாரத்தின் இன்றைய முழு கவனமும் தரமான உற்பத்தி, தரமான மனிதவளத்தில் உள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு இந்த இரண்டு விஷயங்கள் மிகவும் அவசியமானவை. சமீபத்திய பட்ஜெட்டில், நமது இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். நமது இளைஞர்களில் ஏராளமானோர் கல்விக்காக இங்கு வந்துள்ளனர். பாரதத்தை கல்வி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான முக்கிய மையமாக மாற்றவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
தொழில்நுட்பம், மருத்துவம் அல்லது கல்வி என ஒவ்வொரு துறையிலும் உலகிற்கு திறமையான மனிதவளத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பை பாரதம் ஏற்றுக்கொண்டுள்ளது. சுகாதாரத் துறையிலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நாங்கள் நிறுவியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம். இது தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும்.
நண்பர்களே,
புதுமைப் படைப்புகளும், இளைஞர்களும்தான் பாரதம், போலந்து நாடுகளின் வளர்ச்சிக்கான சக்தியாக உள்ளனர். இன்று நான் உங்களிடம் ஒரு நல்ல செய்தியுடன் வந்துள்ளேன். உங்களைப் போன்ற நண்பர்களுக்கு பயனளிக்கும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பாரதமும் போலந்தும் ஒப்புக் கொண்டுள்ளன.
நண்பர்களே,
பாரதத்தின் ஞானம் உலகளாவியது, பாரதத்தின் பார்வை உலகளாவியது, பாரதத்தின் கலாச்சாரம் உலகளாவியது, பாரதத்தின் கவனிப்பும் கருணையும் உலகளாவியது. "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) என்ற மந்திரத்தை நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நாம் எப்போதும் கருதி வந்திருக்கிறோம். இது இன்று பாரதத்தின் கொள்கைகள், முடிவுகளில் பிரதிபலிக்கிறது. ஜி-20 மாநாட்டின் போது, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று பாரதம் அழைப்பு விடுத்தது. இந்த உணர்வு சிறந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்பு என்ற கருத்துடன் உலகை இணைக்க பாரதம் விரும்புகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்பதை ஆரோக்கியமான உலகத்தின் உத்தரவாதமாக பாரதம் பார்க்கிறது. தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், ஒரே ஆரோக்கியம் என்ற கொள்கை இன்னும் முக்கியமானதாகிவிட்டது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் (Lifestyle for Environment) என்ற நடைமுறையை பாரதம் உலகிற்கு வழங்கியுள்ளது. பாரதத்தில் ஒரு பெரிய இயக்கம் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம். கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் தாய்மார்களின் பெயரில் மரங்களை நட்டு வருகின்றனர், இது பூமித்தாயை பாதுகாக்கிறது.
நண்பர்களே,
பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவது இன்று பாரதத்தின் முன்னுரிமையாகும். வளர்ந்த நாடாகவும், நிகர பூஜ்ஜிய உமிழ்வு நாடாகவும் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வருவது பாரதம். பசுமையான எதிர்காலத்திற்காக 360 டிகிரி அணுகுமுறையில் பாரதம் செயல்பட்டு வருகிறது. பசுமைப் போக்குவரத்து இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை எட்டும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். மின்சார வாகனப் போக்குவரத்தை பாரதம் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இன்று, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார வாகனங்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது. மின்சார வாகன உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக பாரதம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனுக்கான முக்கிய உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்.
நண்பர்களே,
புதிய தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பல இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. பல போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. நான் அதிபர் டூடா மற்றும் பிரதமர் டஸ்க் ஆகியோரை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்புகள் பாரதம் மற்றும் போலந்து இடையேயான சிறந்த கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும். பிரதமர் டஸ்க் பாரதத்தின் நல்ல நண்பர். அவர் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருந்தபோது, நான் அவரை பல முறை சந்தித்தேன்.
நண்பர்களே,
சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குரலில், ஒரே உணர்வுடன் இன்றைய பாரதம் செயல்பட்டு வருகிறது. இன்று, பாரதம் வாய்ப்புகளின் பூமியாக உள்ளது. நீங்களும் பாரதத்தின் வளர்ச்சிக் கதையோடு மேலும் மேலும் இணைய வேண்டும். நீங்கள் பாரதத்தின் சுற்றுலாவின் விளம்பரத் தூதர்களாக ஆக வேண்டும். அதற்கு என்ன பொருள்? அதாவது தாஜ்மஹால் முன் அமர்ந்து உங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். ஒரு விளம்பர தூதராக இருந்து, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து போலந்து குடும்பங்களை இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப வேண்டும். செய்வீர்களா? உங்களின் ஒவ்வொரு முயற்சியும் உங்கள் பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற உதவும்.
நண்பர்களே,
இங்கு வந்திருப்பதற்காகவும், இந்த அற்புதமான வரவேற்புக்காகவும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
பாரத் மாதா கி - ஜெ!
மிக்க நன்றி.