வணக்கம்,
எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஐடியு-வின் பொதுச் செயலாளர் சந்திரசேகர் அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களே, பாரதத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தொலைத் தொடர்பு நிபுணர்களே, புத்தொழில் உலகின் இளம் தொழில்முனைவோரே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே,
அனைவருக்கும் வணக்கம்,
இந்தியா மொபைல் கூட்டமைப்பில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) சக ஊழியர்களுக்கும் நான் சிறப்பு வரவேற்பு அளிக்க விரும்புகிறேன். நீங்கள் முதன்முறையாக இந்த கூட்டத்தை நடத்த பாரதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் முடிவைப் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை, இந்தியா மிகவும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவில் 120 கோடி அல்லது 1200 மில்லியன் செல்போன் பயனாளர்கள், 95 கோடி அல்லது 950 மில்லியன் பேர் இணையதள பயனாளர்களாக உள்ளனர். உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், 40 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்நேரத்தில் நடைபெறுகின்றன. கடைசி மைல் தூரத்தையும் டிஜிட்டல் இணைப்பு எவ்வாறு ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது என்பதை இந்தியா எடுத்துக்காட்டியுள்ளது. உலகளாவிய தொலைத்தொடர்பு தரம் குறித்து விவாதிப்பதற்கும், உலகளாவிய நன்மையாக தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலம் குறித்த விவாதத்திற்கும் இடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள்.
நண்பர்களே,
டபிள்யுடிஎஸ்ஏ மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. உலக தொழில்நுட்ப சிறப்புச் சட்டத்தின் நோக்கம் உலகத் தரத்தில் பணியாற்றுவதாகும். இந்திய மொபைல் காங்கிரஸின் பங்கு சேவைகளுடன் தொடர்புடையது. இந்த நிகழ்ச்சி உலகத் தரத்தையும், சேவைகளையும் ஒரே மேடையில் கொண்டு வருகிறது. தரமான சேவை மற்றும் தரத்தின் மீது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. உலக தொழில்நுட்ப சிறப்புச் சட்டத்தின் அனுபவம் இந்தியாவுக்கு புதிய சக்தியை அளிக்கும்.
நண்பர்களே,
ஒருமித்த கருத்தின் மூலம் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை உலகிற்கு அதிகாரம் அளிப்பதாகவும், இந்தியா மொபைல் காங்கிரஸ் இணைப்பு மூலம் உலகை வலுப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் ஒருமித்த கருத்து மற்றும் இணைப்பு ஆகியவை இணைந்துள்ளன. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் இந்த இணைப்பு அவசியம். வசுதைவ குடும்பகம் என்ற அழியாத செய்தியின் மூலம் இந்தியா வாழ்ந்து வருகிறது. இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற செய்தியை பரப்பியது. உலகை மோதலில் இருந்து வெளியே கொண்டு வருவதிலும், அதை இணைப்பதிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. பண்டைய பட்டுப் பாதையாக இருந்தாலும் சரி, இன்றைய தொழில்நுட்பப் பாதையாக இருந்தாலும் சரி, இந்தியாவின் ஒரே நோக்கம் உலகை இணைப்பதும், முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறப்பதும் தான். இத்தகைய சூழ்நிலையில், டபிள்யு.டி.எஸ்.ஏ மற்றும் ஐ.எம்.சி ஆகியவற்றின் இந்தக் கூட்டாண்மை உள்ளூர் மற்றும் உலக அளவில் ஒன்றிணைந்து ஒரு நாட்டிற்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் நன்மைகளைக் கொண்டு வரும் ஒரு சிறந்த செய்தியாகும்.
நண்பர்களே,
21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பு பயணம் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு ஆய்வுப் பொருளாக உள்ளது. உலகம் முழுவதும் கைபேசி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் தொலைத்தொடர்பு வெறும் இணைப்பு ஊடகமாக மட்டும் இல்லாமல், சமபங்கு மற்றும் வாய்ப்புகளுக்கான ஊடகமாக உள்ளது. தொலைத்தொடர்பு ஒரு ஊடகமாக கிராமங்களுக்கும் நகரங்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. குறைந்த விலை சாதனங்கள், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் பரந்த அளவில் டிஜிட்டல் இணைப்பு, எளிதில் அணுகக்கூடிய தரவு மற்றும் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்பட்டு, நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும் 'டிஜிட்டல் முதலில்' இலக்கு ஆகிய டிஜிட்டல் இந்தியாவின் நான்கு தூண்களாகும்.
நண்பர்களே,
இணைப்பு மற்றும் தொலைத் தொடர்பு சீர்திருத்தங்களில் இந்தியா சாதித்துள்ளது. தொலைதூரப் பழங்குடியினர், மலைப்பாங்கான மற்றும் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான செல்போன் கோபுரங்களின் வலுவான வலைப்பின்னலை நாடு உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்பை உறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் செல்போன் கோபுரங்களின் வலுவான வலைப்பின்னலை அரசு உருவாக்கியுள்ளது. ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் வைஃபை வசதிகளை விரைவாக நிறுவுதல், அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு போன்ற தீவுகளை கடலுக்கடியில் கேபிள்கள் மூலம் இணைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா அமைத்துள்ள கண்ணாடிஇழை கேபிள்களின் தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும். 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா விரைவாக ஏற்றுக்கொள்கிறது. 5 ஜி தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக மாற்றியுள்ளது.
நண்பர்களே,
தரவு செலவுகளைக் குறைப்பதில் இந்தியா முயற்சி மேற்கொள்கிறது. ஒரு ஜிபி தரவு ( டேட்டா) 10 முதல் 20 மடங்கு விலை அதிகமாக உள்ள உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இணையத் தரவின் விலை இப்போது ஒரு ஜிபிக்கு 12 சென்ட் வரை குறைவாக உள்ளது. இன்று, ஒவ்வொரு இந்தியரும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.
நண்பர்களே,
இத்தகைய முயற்சிகள் அனைத்தும் நான்காவது தூணான 'முதலில் டிஜிட்டல் உணர்வு' மூலம் புதிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி, டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது. இந்தத் தளங்களில் புதுமைகள் கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பெற்ற மாற்றம் முக்கியமானது. இது எண்ணற்ற வசதிகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளது. கொவிட்-19 தொற்று பரவலின் போது தேவைப்படுவோருக்கு நிதிப் பரிமாற்றங்கள், வழிகாட்டுதல்களை நிகழ்நேரத் தகவல்தொடர்பு, தடுப்பூசி இயக்கம் மற்றும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை வழங்குதல் போன்ற தடையற்ற செயல்முறைகளை உறுதி செய்வதில் டிஜிட்டல் தளங்களின் பங்கு அளப்பரியது. இந்தியாவின் வெற்றியின் அனுபவத்தை உலக அளவில் பகிர்ந்து கொள்ள தேசம் விரும்புகிறது. இந்தியாவின் டிஜிட்டல் தொகுப்பு உலக அளவில் நலத்திட்டங்களை உயர்த்த முடியும். ஜி-20 தலைமைத்துவத்தின் போது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்தது. நாடு தனது டிபிஐ அறிவை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.
நண்பர்களே,
உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியின் போது பெண்களின் வலைப்பின்னல் முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா தீவிரமாக உழைத்து வருகிறது. ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியபோது இந்த உறுதிமொழி முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தொழில்நுட்பத் தளங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில், தொழில்நுட்பத் துறையை உள்ளடக்கியதாக மாற்றும் இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் விண்வெளிப் பயணங்களில் பெண் விஞ்ஞானிகளின் முக்கிய பங்களிப்பு, இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களில் பெண் இணை நிறுவனர்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஸ்டெம் கல்வியில் பெண் மாணவர்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. தொழில்நுட்ப தலைமைத்துவத்தில் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா உருவாக்கி வருகிறது. விவசாயத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானப் புரட்சியை ஊக்குவிப்பதற்காக அரசின் நமோ ட்ரோன் சகோதரி திட்டம் இந்தியாவின் கிராமங்களைச் சேர்ந்த பெண்களால் வழிநடத்தப்படுகிறது. டிஜிட்டல் விழிப்புணர்வுக்கு வழிவகுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் டிஜிட்டல் வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்டு செல்வதற்காக இந்தியா வங்கி தோழி திட்டத்தையும் தொடங்கியது. இந்தியாவின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் ஆஷா மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கைக்கணினிகள் மற்றும் செயலிகள் மூலம் அனைத்து பணிகளையும் கண்காணித்து வருகின்றனர். பெண் தொழில்முனைவோருக்கான ஆன்லைன் சந்தைப்படுத்துதல் தளமான மஹிளா இ-ஹாத் திட்டத்தையும் இந்தியா நடத்தி வருகிறது. இன்று இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பெண்கள் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறார்கள். வரவிருக்கும் காலங்களில், இந்தியாவின் ஒவ்வொரு மகளும் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் வகையில் இந்தியா தனது நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும்.
நண்பர்களே,
டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானது. ஜி-20 தலைமைப் பொறுப்பின் போது இந்த விஷயத்தை இந்தியா எழுப்பியது. உலகளாவிய நிர்வாகத்தில் இதன் முக்கியத்துவத்தை உலக நிறுவனங்கள் அங்கீகரிக்க வேண்டும். உலகளாவிய நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை உலகளாவிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலக அளவில் தொழில்நுட்பத்தில் 'செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை' என்பதை உருவாக்க வேண்டியது அவசியம். இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதிலும், உலகளாவிய நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையிலும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை. பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொலைத்தொடர்புக்கான பாதுகாப்பான சேனலை உருவாக்குவதில் டபிள்யூ.டி.எஸ்.ஏ பங்கு வகிக்க வேண்டும். "ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், பாதுகாப்பு என்பது ஒரு பின் சிந்தனையாக இருக்க முடியாது. இந்தியாவின் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி ஆகியவை பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. நாடுகளின் பன்முகத்தன்மையை மதிக்கும் நெறிமுறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு தனியுரிமை தரநிலைகள் உள்ளிட்ட உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் எதிர்கால சவால்களுக்கு ஏற்ப தரங்களை உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட பரிமாணம. அவசியம். இன்று அமைக்கப்பட்டுள்ள தரநிலைகள் எதிர்காலத்தின் திசையைத் தீர்மானிக்கும். பாதுகாப்பு, கண்ணியம், சமத்துவம் ஆகிய கொள்கைகள் நமது விவாதங்களின் மையத்தில் இருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் மாற்றத்தில் எந்த நாடும், எந்தப் பிராந்தியமும், எந்தச் சமூகமும் பின்தங்கிவிடக்கூடாது என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். எதிர்காலம் தொழில்நுட்ப ரீதியில் வலுவானதாகவும், புதுமை மற்றும் உள்ளடக்கத்துடன் நெறிமுறை ரீதியாகவும் வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உலகத் தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் இயக்கத்தின் வெற்றிக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!