துவாரகா விரைவுச் சாலையின் 19 கிலோமீட்டர் நீளமுள்ள ஹரியானா பிரிவைத் தொடங்கி வைத்தார்
"2024 ஆம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள், ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன"
"பிரச்சினைகளை சாத்தியங்களாக மாற்றுவது மோடியின் உத்தரவாதம்"
"21 ஆம் நூற்றாண்டு இந்தியா பெரிய பார்வை மற்றும் பெரிய இலக்குகளைக் கொண்ட இந்தியா"
"முன்பு, தாமதங்கள் இருந்தன, இப்போது விநியோகங்கள் உள்ளன. முன்னதாக, தாமதம் இருந்தது, இப்போது வளர்ச்சி உள்ளது"

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே,  முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் அவர்களே, மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் சகாக்கள் நிதின் கட்கரி அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷண் பால் குர்ஜார் அவர்களே, இதர மதிப்புமிக்க விருந்தினர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!

நவீன தொழில்நுட்ப இணைப்பு மூலம் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் இணைந்திருப்பதை திரையில் பார்க்க முடிகிறது.  காலங்கள் மாறிவிட்டன, இந்த நிகழ்ச்சி இப்போது குருகிராமில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.  நவீன இணைப்பை நோக்கி மற்றொரு குறிப்பிடத்தக்க அடியை நாடு எடுத்து வைத்துள்ளது. இன்று துவாரகா விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அதிவேக நெடுஞ்சாலைக்காக 9,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்று முதல், தில்லி - ஹரியானா இடையேயான போக்குவரத்து அனுபவம் என்றென்றும் மிகச் சிறந்ததாக மாறும். இந்த நவீன அதிவேக நெடுஞ்சாலை  தில்லி மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும். இந்த நவீன விரைவுச் சாலைக்காக தில்லி மற்றும் ஹரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

முந்தைய அரசாங்கங்கள் சிறிய திட்டங்களை வடிவமைத்து அதை  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து வந்தன.  அதேசமயம் தற்போதைய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.  2024ம் ஆண்டில்  மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. மிகக் குறுகிய காலத்தில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நான் சொல்வது நானே தொடங்கி வைத்த திட்டங்களைப் பற்றி மட்டுமே. அதையும் தாண்டி எனது அமைச்சர்கள், நமது முதலமைச்சர்கள் தொடங்கிய திட்டங்கள் தனி.

2014 க்கு முந்தைய காலத்தை நினைவில் கொள்ளுங்கள். இன்றும் கூட, நாடு முழுமைக்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான 100-க்கும் மேற்பட்ட திட்டங்கள் ஒரே நாளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. தெற்கில் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்கள், வடக்கில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்கள், கிழக்கில் பீகார் மற்றும் மேற்கு வங்கத்திற்கான திட்டங்கள், மேற்கில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். அமிர்தசரஸ்-பதிண்டா-ஜாம்நகர் வழித்தடத்தின் நீளம் ராஜஸ்தானில் 540 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்படுகிறது. பெங்களூரு சுற்றுவட்டச் சாலை போக்குவரத்து பிரச்சினைகளை கணிசமாகக் குறைக்கும். கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கு முதல் தெற்கு வரை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ஒரு பிரச்சனைக்கும் வாய்ப்புக்கும் உள்ள ஒரே வித்தியாசம் முறபோக்கான சிந்தனைதான். பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றுவது மோடியின் உத்தரவாதம். துவாரகா விரைவுச் சாலையே இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மக்கள் இப்பகுதிக்கு வருவதை ஒரு காலத்தில் தவிர்த்து வந்தனர். வாடகைக் கார் ஓட்டுநர்கள் கூட இங்கு வர மறுப்பார்கள். இந்த முழு பகுதியும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. இருப்பினும், இன்று பல பெரிய நிறுவனங்கள் இங்கு வந்து தங்கள் திட்டங்களில் முதலீடு செய்கின்றன. இந்த பகுதி தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக மாறி வருகிறது. இந்த விரைவுச் சாலை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைப்பை மேம்படுத்தும். இது தில்லிக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு, இங்கு பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்.

 

நண்பர்களே,

துவாரகா விரைவுச் சாலை தில்லி-மும்பை விரைவுச் சாலையுடன் இணையும்போது, அது புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும். மேற்கு இந்தியா முழுவதும் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு புதிய சக்தியை வழங்க இந்த வழித்தடம் வழி வகை செய்யும். இந்த விரைவுச் சாலையை அமைப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக ஹரியானா அரசை, குறிப்பாக முதலமைச்சர் மனோகர் லால் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஹரியானாவின் வளர்ச்சிக்காக மனோகர் லால் அவர்கள் அயராது உழைத்துள்ளார். ஹரியானா மாநில அரசு, வளர்ச்சி அடைந்த ஹரியானா, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அடிப்படைக் கொள்கையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

நண்பர்களே,

21 ஆம் நூற்றாண்டின் பாரதம் மாபெரும் தொலைநோக்குப் பார்வைகளைக் கொண்ட நாடாக உள்ளது. பாரதம் உயர்ந்த இலக்குகளைக் கொண்ட நாடு. இன்றைய பாரதம் முன்னேற்றத்தின் வேகத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் செயல்படுகிறது. நீங்கள் அனைவரும் என்னை நன்கு அறிந்துள்ளீர்கள். என்னைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். என்னால் சிறியதாக சிந்திக்க முடியாது. சாதாரண கனவுகளை என்னால் காண முடியாது.  நான் என்ன செய்ய வேண்டுமோ, அது பிரம்மாண்டமானதாக, பரந்து விரிந்ததாக, விரைவான வேகத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் 2047-ம் ஆண்டுக்குள் பாரதத்தை வளர்ந்த நாடாக பார்க்க விரும்புகிறேன் நண்பர்களே. உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாக்க நான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன்.

 

நண்பர்களே,

இந்த வேகத்தை விரைவுபடுத்த, தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் முழுமையான தொலைநோக்குப் பார்வையுடன் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். பெரிய திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். துவாரகா விரைவுச் சாலை, சுற்றுப்புற விரைவுச் சாலை, கிழக்குப் புறவழி விரைவுச் சாலை அல்லது தில்லி-மீரட் விரைவுச் சாலை என எதுவாக இருந்தாலும், எங்களது அரசு எண்ணற்ற பெரிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இரண்டு வருட கொவிட் கால நெருக்கடிக்கு மத்தியிலும் கூட நாட்டை இவ்வளவு துரிதமாக முன்னோக்கி நகர்த்த எங்களால் முடிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் 230 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ பாதைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜேவரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  இந்த திட்டங்கள் போக்குவரத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், தில்லியில் மாசுபாட்டையும் குறைக்கும்.

நண்பர்களே,

இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதும், நாட்டில் வறுமை ஒழிப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. விரைவுச் சாலைகள் ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்போது, கிராமங்கள் நல்ல சாலைகளால் இணைக்கப்படும். அப்போது எண்ணற்ற புதிய வாய்ப்புகள் கிராமங்களில் உள்ள மக்களின் வீட்டு வாசல்களைச் சென்றடையும். முன்பெல்லாம், கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புதிய வாய்ப்புகளைத் தேடி நகரங்களுக்கு குடிபெயர்வது வழக்கம். ஆனால் இப்போது, குறைந்த செலவில் டேட்டா மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு காரணமாக, கிராமங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மருத்துவமனைகள், கழிப்பறைகள், குழாய் மூலம் குடிநீர், பாதுகாப்பான வீடுகள் ஆகியவை விரைவாக கட்டப்படும்போது, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களால் பரம ஏழைகளும் பயனடைகிறார்கள். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடையும் போது, அது இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான எண்ணற்ற வாய்ப்புகளை அளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மக்களின் இந்த முன்னேற்றத்தால் 11-வது பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து 5-வது பெரிய பொருளாதாரமாக நாம் மாறியுள்ளோம்.

 

நண்பர்களே,

நாட்டில் நடைபெற்று வரும் விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சி, பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றவுள்ளது மட்டுமல்லாமல், ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்க, அதிக எண்ணிக்கையிலான பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தேவை. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற தொழில் துறைகளும் இதனால் பயனடைகின்றன. அவை கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இந்த அதிவேக நெடுஞ்சாலைகளை ஒட்டி இன்று தொழில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. நல்ல சாலைகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தொழில்களையும் ஊக்குவிக்கிறது. இன்று, இளைஞர்கள் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர் என்பதும், நாட்டின் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க வலிமையைப் பெற்று வருகிறது என்பதும் தெளிவாகிறது.

நண்பர்களே,

எதிர்க்கட்சிகளுக்கு இந்த வளர்ச்சிப் பணிகள் பிடிக்கவில்லை. இவை அவர்களின் தூக்கத்தைக் கலைத்துள்ளன.  பணிகளை இவ்வளவு வேகமாக செய்ய முடியுமா என்று அவர்கள் குழம்புகிறார்கள்.  அதனால்தான் தேர்தலுக்காக மோடி இதைச் செய்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளில் நாடு எவ்வளவோ மாறிவிட்டது. இருப்பினும், எதிர்க்கட்சி நண்பர்களின் பார்வை மாறவில்லை. 

 

இன்று, எங்கள் அரசு, புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது. தேர்தல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உரிய காலத்தில் அவற்றை முடிக்கவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.  தேர்தல்கள் நடந்தாலும் இல்லாவிட்டாலும் நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் நடக்கிறதோ இல்லையோ, இன்று நாட்டின் சிறு நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. தேர்தல்கள் நடந்தாலும் இல்லாவிட்டாலும் இன்று நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரி செலுத்துவோரின் பணத்தின் மதிப்பையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடித்துள்ளோம்.

முன்னதாக, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது, உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் நேரத்தில் விவாதிக்கப்படுகிறது. இது புதிய பாரதம் ஆகும். முன்பு, தாமதங்கள் இருந்தன.  இப்போது வேகம் உள்ளது. முன்பு, தள்ளிப்போடுதல் இருந்தது, இப்போது வளர்ச்சி உள்ளது. இன்று, நாட்டில் 9,000 கிலோமீட்டர் அதிவேக வழித்தடங்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சுமார் 4,000 கிலோமீட்டர் அதிவேக வழித்தடங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன. 2014 ம் ஆண்டு வரை, மெட்ரோ வசதிகள் 5 நகரங்களில் மட்டுமே கிடைத்தன. இன்று 21 நகரங்களில் மெட்ரோ வசதிகள் உள்ளன. இந்த திட்டங்களுக்கு விரிவான திட்டமிடல் மற்றும் 24 மணி நேர கடின உழைப்பு தேவை.  அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் மிக வேகமாக இருக்கும். இது மோடியின் உத்தரவாதம்.

 

நண்பர்களே

இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். 2047-ம் ஆண்டுக்குள் நமது நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எனது கனவு.  உங்கள் எதிர்கால சந்ததியினரின் பிரகாசமான எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு எனக்கு உள்ளது. என்னுடன் சொல்லுங்கள் -        

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

மிக்க நன்றி.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi