உலகம் முழுவதிலுமிருந்து வரும் விருந்தினர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், கோவா மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே வணக்கம் !
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டின் மூன்றாவது பதிப்பிற்கு உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். முன்னதாக 2021 ஆம் ஆண்டில் நாம் சந்தித்தபோது, முழு உலகமும் கொரோனா உருவாக்கிய நிச்சயமற்ற தன்மையின் பிடியில் இருந்தது. கொரோனாவுக்கு பிறகு உலகம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது, மாறிவரும் இந்த உலக ஒழுங்கில் முழு உலகமும் புதிய அபிலாஷைகளுடன் பாரதத்தை நோக்கிப் பார்க்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உலகில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. உலகின் முதல் 3 பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா திகழும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலகில் அதிகபட்ச வர்த்தகம் கடல் வழியாக நடைபெறுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கொரோனாவுக்கு பிந்தைய உலகில், இன்று உலகிற்கு நம்பகமான மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலிகள் தேவை. அதனால்தான் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டின் இந்தப் பதிப்பு இன்னும் பொருத்தமானதாக மாறியுள்ளது.
நண்பர்களே,
பாரதத்தின் கடல்சார் திறன் வலுவாக இருந்த போதெல்லாம், நாடும் உலகமும் அதன் மூலம் பெரிதும் பயனடைந்துள்ளன என்பதற்கு வரலாறு சாட்சி. இந்தச் சிந்தனையுடன், இந்தத் துறையை வலுப்படுத்த கடந்த 9-10 ஆண்டுகளாக திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருகிறோம். சமீபத்தில், பாரதத்தின் முன்முயற்சியில், 21 ஆம் நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள கடல்சார் தொழில்துறையை மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாட்டின் போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பட்டுப்பாதை உலகளாவிய வர்த்தகத்திற்கு உத்வேகம் அளித்தது. உலகின் பல நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தப் பாதை அடிப்படையாக அமைந்தது. இப்போது இந்த வரலாற்று வழித்தடம் பிராந்திய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் படத்தையும் மாற்றும். அடுத்த தலைமுறை மெகா துறைமுகங்கள் மற்றும் சர்வதேச கொள்கலன் பரிமாற்ற துறைமுகத்தை நிர்மாணித்தல், தீவு அபிவிருத்தி, உள்நாட்டு நீர்வழிகள், பல்வகை மையங்களை விரிவுபடுத்துதல் போன்ற பல முக்கிய திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வழித்தடம் வணிக செலவுகளைக் குறைக்கும், தளவாட செயல்திறனை அதிகரிக்கும், சுற்றுச்சூழல் சேதத்தை குறைக்கும். மேலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். பாரதத்துடன் இணைவதன் மூலம் முதலீட்டாளர்கள் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற இது ஒரு பெரிய வாய்ப்பாகும்.
நண்பர்களே,
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற இன்றைய பாரதம் பாடுபட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். கடல்சார் உள்கட்டமைப்பின் ஒட்டுமொத்த சூழலையும் வலுப்படுத்த நாம் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் 9-10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 42 மணி நேரமாக இருந்த கொள்கலன் கப்பல்களின் திரும்பும் நேரம் 2023 ஆம் ஆண்டில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. துறைமுக இணைப்பை வலுப்படுத்த, ஆயிரக்கணக்கான கி.மீ., துாரத்திற்கு புதிய சாலைகளை அமைத்துள்ளோம். சாகர்மாலா திட்டத்தின் கீழ் நமது கடலோரப் பகுதியின் உள்கட்டமைப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் வேலை வாய்ப்புகளையும், வாழ்க்கையை எளிதாக்குவதையும் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன.
'செழிப்புக்கான துறைமுகங்கள்', 'முன்னேற்றத்திற்கான துறைமுகங்கள்' என்ற நமது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து களத்தில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், 'உற்பத்தித் திறனுக்கான துறைமுகங்கள்' என்ற தாரக மந்திரத்தையும் நமது பணி முன்னெடுத்துச் சென்றுள்ளது. பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, நமது அரசாங்கம் தளவாடத் துறையை பயனுள்ளதாகவும் திறமையாகவும் மாற்றுகிறது. பாரதம் தனது கடலோரக் கப்பல் போக்குவரத்தையும் நவீனப்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் கடலோர சரக்கு போக்குவரத்து இரட்டிப்பாகியுள்ளது, மேலும் இது மக்களுக்கு செலவு குறைந்த தளவாட விருப்பத்தையும் வழங்குகிறது. உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் வளர்ச்சியால் பாரதத்திலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில், தேசிய நீர்வழிகளில் சரக்கு கையாளுதல் கிட்டத்தட்ட 4 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. நமது முயற்சிகள் காரணமாக, தளவாடப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் பாரதத்தின் மதிப்பீடுகளும் கடந்த 9 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளன.
நண்பர்களே,
கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் துறையிலும் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். நமது உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், பாரதத்தின் திறனுக்கு ஒரு சான்றாகும். அடுத்த பத்தாண்டுகளில் உலகின் முதல் ஐந்து கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். 'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்டு' என்பதே நமது தாரக மந்திரம். கடல்சார் குழுமங்களை மேம்படுத்துவதன் மூலம் கப்பல் கட்டும் பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் நாம் பணியாற்றி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் நாட்டின் பல இடங்களில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் நிலையங்களை அபிவிருத்தி செய்யவுள்ளோம். கப்பல் மறுசுழற்சி துறையில் இந்தியா ஏற்கனவே உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தனது முக்கிய துறைமுகங்களை கார்பன் நடுநிலையாக்க, பாரதம் கடல்சார் துறையில் நிகர பூஜ்ஜிய உத்தியை உருவாக்கி வருகிறது. நீலப் பொருளாதாரம் ஒரு பசுமை கிரகமாக மாறுவதற்கான வழிமுறையாக இருக்கும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
உலகின் மிகப்பெரிய கடல்சார் ஆபரேட்டர்கள் இந்தியாவுக்கு வந்து பாரத்திலிருந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கான பணிகள் பாரதத்தில் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத்தின் நவீன கிஃப்ட் சிட்டி கப்பல் குத்தகையை ஒரு முக்கிய நிதி சேவையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிற கப்பல் குத்தகை நிறுவனங்களையும் கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி.யில் சேருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
நண்பர்களே,
பாரதம் பரந்த கடற்கரை, வலுவான நதிக்கரை சுற்றுச்சூழல் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து கடல்சார் சுற்றுலாவுக்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்குகின்றன. சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரதத்தில் உள்ள லோத்தல் கப்பல் கட்டும் தளம் உலக பாரம்பரிய சின்னமாகும். ஒருவகையில் லோத்தல் கப்பல் போக்குவரத்தின் தொட்டில். இந்த உலக பாரம்பரியத்தை பாதுகாக்க, லோத்தலில் ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகமும் கட்டப்பட்டு வருகிறது. லோத்தல் மும்பையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. லோத்தலை ஒரு முறை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடல்சார் சுற்றுலாவை அதிகரிக்க, உலகின் மிகப்பெரிய நதி கப்பல் சேவையையும் தொடங்கியுள்ளோம். பாரதம் தனது பல்வேறு துறைமுகங்களில் இது தொடர்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையில் புதிய சர்வதேச கப்பல் முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விசாகப்பட்டினம் மற்றும் சென்னையிலும் இதுபோன்ற நவீன கப்பல் முனையங்களை அமைத்துள்ளோம். இந்தியா தனது அதிநவீன உள்கட்டமைப்பு மூலம் உலகளாவிய கப்பல் மையமாக மாறுவதை நோக்கி நகர்கிறது.
வளர்ச்சி, மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் தேவை ஆகியவற்றின் கலவையைக் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பாரதம் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள உங்களைப் போன்ற அனைத்து முதலீட்டாளர்களையும் பாரதத்திற்கு வந்து வளர்ச்சிப் பாதையில் எங்களுடன் சேருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன். நாம் ஒன்றாக நடப்போம்; நாம் ஒன்றாக ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்; மிகவும் நன்றி!