வணக்கம்!
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
இந்தப் பண்டிகை காலத்தில் தெலங்கானாவிற்கும், ஆந்திர பிரதேசத்திற்கும் மிகப்பெரிய பரிசு இன்று அளிக்கப்படுகிறது. தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் இடையே பகிரப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஒரு வகையில் இந்த வந்தே பாரத் விரைவு ரயில் இணைக்கவுள்ளது. இன்று ராணுவ தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் ராணுவத்தைக் கண்டு பெருமை கொள்கிறார்.
நண்பர்களே,
பொங்கல், மாக் பிஹு, மகர சங்கராந்தி மற்றும் உத்தராயன் பண்டிகைகளின் கொண்டாட்டம் எங்கும் காணப்படுகிறது. இந்தப் புதிய ரயில் ஐதராபாத், வாரங்கல், விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களை இணைக்கும். இந்த ரயிலினால் செகந்தராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான பயண தூரமும் குறையும்.
வந்தே பாரத் ரயில், மற்றொரு சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. புதிய இந்தியாவின் உறுதிப்பாடு மற்றும் திறனின் அடையாளமாகவும் இந்த ரயில் விளங்குகிறது. இந்தியா விரும்பும் சிறந்தவற்றின் சின்னமாகவும், தனது குடிமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க விரும்பும் இந்தியாவின் சின்னமாகவும், அடிமைத்தன மனநிலையை உடைத்து தற்சார்பை நோக்கிய இந்தியாவின் சின்னமாகவும் இந்த வந்தே பாரத் விரைவு ரயில் செயல்படுகிறது.
சகோதர, சகோதரிகளே!
கடந்த 7-8 ஆண்டுகளில் நமது அரசு மேற்கொண்ட முன்முயற்சிகளால் அடுத்த 7-8 ஆண்டுகளில் இந்திய ரயில்வே மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கவிருக்கிறது. சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக விஸ்டாடோம் ரயில் பெட்டிகளும், பாரம்பரிய ரயில்களும் தற்போது இயங்கி வருகின்றன. விளைப் பொருட்களை தொலைதூர சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல கிசான் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சரக்கு ரயில்களுக்கான பிரத்தியேக சிறப்பு சரக்கு ரயில் வழித்தட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் விரைவு ரயில், ஒரு முனையில் ஆந்திர பிரதேசத்தையும் மறுமுனையில் தெலங்கானாவையும் இணைக்கிறது. ஆந்திராவில் ரயில் இணைப்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு வேகமாக இந்த மாநிலத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வேகமும் முன்னேற்றமும் மேலும் தொடரும். இந்த நம்பிக்கையோடு பயணிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!