வணக்கம்!
நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற இயக்கம் தொடர்கிறது. இன்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனக் கடிதங்களைப் பெறுவது உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையின் விளைவாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய தேசத்தைக் கட்டியெழுப்பும் நீரோட்டத்தில் இப்போது நீங்கள் சேரப் போகிறீர்கள். மத்திய அரசு ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் பணியாற்றினாலும், நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன், நவம்பர் 26 அன்று, நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. 1949 ஆம் ஆண்டு இதே நாளில் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் அரசியலமைப்பை நாடு ஏற்றுக்கொண்டது. அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியான பாபா சாகேப் அம்பேத்கர், அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்படும் இந்தியாவைக் கனவு கண்டார். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில் சமத்துவக் கொள்கை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டது.
கடந்த, 2014-க்கு முன், சமூகத்தில் பெரும்பகுதியினர், அடிப்படை வசதிகள் இன்றி தவித்தனர். 2014 ஆம் ஆண்டில், தேசம் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்து, அரசை நடத்தும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தபோது, முதலில், அடித்தட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறத் தொடங்கினோம். பல தசாப்தங்களாக அரசிடமிருந்து பல்வேறு திட்டங்களின் பலன்களையோ அல்லது எந்த வசதிகளையோ பெறாத மக்களைத் தேடி அரசு சென்றடைந்தது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து வருகிறோம்.
அரசின் சிந்தனை மற்றும் பணிக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் காரணமாக, நாட்டில் இன்று முன்னெப்போதும் இல்லாத பயன்களைக் காண முடிகிறது. அதிகார வர்க்கமும் ஒன்றுதான்; மக்களும் ஒன்றுதான்; கோப்புகள் ஒரே மாதிரியானவை; வேலை செய்பவர்கள் ஒன்றுதான்; முறையும் அப்படித்தான். ஆனால், நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியதும், ஒட்டுமொத்த நிலைமையும் மாறத் தொடங்கியது. ஒன்றன் பின் ஒன்றாக மிக வேகமாக, வேலை செய்யும் பாணி மாறத் தொடங்கியது; வேலை முறை மாறத் தொடங்கியது; பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு, சாமானிய மக்களின் நலனில் சாதகமான பயன்கள் வெளிப்படத் தொடங்கின.
5 ஆண்டுகளில் நாட்டில் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அரசின் திட்டங்கள் ஏழைகளை சென்றடையும் போது அது எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை ஒவ்வொரு கிராமத்தையும் எவ்வாறு சென்றடைகிறது என்பதை இன்று காலையிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்களைப் போலவே அரசு ஊழியர்களும், அரசின் திட்டங்களை ஏழைகளின் வீட்டு வாசலுக்குக் கொண்டு செல்கின்றனர். அரசுப் பணியில் சேர்ந்த பிறகு, நீங்களும் அதே நோக்கத்துடன், நல்ல எண்ணங்களுடன், அதே அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
மாறிவரும் இன்றைய பாரதத்தில், நீங்கள் அனைவரும் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியைக் காண்கிறீர்கள். நவீன விரைவுச் சாலைகள், நவீன ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நீர்வழிகள் என இன்று நாடு பல லட்சம் கோடி ரூபாயை இத்துறைகளுக்காகச் செலவிடுகிறது. அரசுப் பணத்தை இவ்வளவு செலவழித்து உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் போது, அது மிகவும் இயல்பானது, அது லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நண்பர்களே,
இந்திய அரசின் கொள்கைகளும் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரத்தை இன்று புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. உலகின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து மிகவும் நேர்மறையாக உள்ளன. சமீபத்திய, முதலீட்டு மதிப்பீட்டில் ஓர் உலகளாவிய தலைவர், இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்குத் தனது அங்கீகார முத்திரையைப் பதித்துள்ளார். அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள், அதிக உழைக்கும் வயது மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக தொடரும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையின் வலிமையும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
வரும் காலங்களிலும் இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படும் என்பதற்கு இந்த உண்மைகள் அனைத்தும் சான்று. இது நாட்டின் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. அரசு ஊழியரான உங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. இந்தியாவில் நிகழும் வளர்ச்சியின் பயன்கள் சமுதாயத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பகுதி எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒரு நபரின் இருப்பிடம் எவ்வளவு அணுக முடியாததாக இருந்தாலும், நீங்கள் அவரை சென்றடைய வேண்டும். மத்திய அரசின் ஓர் ஊழியராக, இந்த அணுகுமுறையுடன் நீங்கள் முன்னேறினால் மட்டுமே, வளர்ந்த இந்தியாவின் கனவு நனவாகும்.
மிகவும் நன்றி.