உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜிதின் பிரசாதா அவர்களே, உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து ஜாம்பவான்களே, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு உலகின் அனைத்து கூட்டாளர்களே, பிற புகழ்பெற்ற விருந்தினர்களே, தாய்மார்களே, அனைவருக்கும் வணக்கம்!
செமி அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் நான் சிறப்பான முறையில் வரவேற்கிறேன். உலகளாவிய குறைக்கடத்தி தொழில் தொடர்பான இந்த பிரமாண்டமான நிகழ்வை நடத்தும் உலகின் எட்டாவது நாடு இந்தியாவாகும். இந்தியாவில் இருக்க இது சரியான நேரம் என்று நான் கூற முடியும். நீங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கிறீர்கள். 21-ம் நூற்றாண்டு பாரதத்தில், சிப்புகள் ஒருபோதும் மதிப்பிழக்காது! அது மட்டுமல்ல, இன்றைய பாரதம் உலகிற்கு உறுதியளிக்கிறது - சிப்புகள் மதிப்பிழக்கும் போது, நீங்கள் இந்தியாவுடன் பந்தயம் கட்டலாம்!
நண்பர்களே,
பாரதத்தின் குறைக்கடத்தி தொழிலில் சிறப்பு டையோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே நமது ஆற்றல் இரண்டு திசைகளிலும் உள்ளது. எப்படி என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்? இது மிகவும் சுவாரஸ்யமானது, நீங்கள் முதலீடு செய்து மதிப்பை உருவாக்குகிறீர்கள். இதற்கிடையில், அரசு உங்களுக்கு நிலையான கொள்கைகள் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. உங்கள் குறைக்கடத்தி தொழில் 'ஒருங்கிணைந்த சூழல்கள்' உடன் இணைக்கப்பட்டுள்ளது. பாரதம் உங்களுக்கு ஒரு 'ஒருங்கிணைந்த சூழல் அமைப்பையும்' வழங்குகிறது.
பாரதத்தின் வடிவமைப்பாளர்களின் அளப்பரிய திறமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். வடிவமைப்பு உலகில் 20 சதவீத திறமையாளர்களை இந்தியா கொண்டுள்ளது. அது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. 85,000 தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்களைக் கொண்ட குறைக்கடத்தி பணியாளர்களை நாங்கள் தயார் செய்கிறோம். பாரத்தின் கவனம் அதன் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை குறைக்கடத்தி துறைக்கு தயார்படுத்துவதில் உள்ளது. நேற்றுதான் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த அறக்கட்டளை பாரதத்தின் ஆராய்ச்சி சூழலுக்கு புதிய திசையையும், புதிய சக்தியையும் வழங்கும். மேலும், ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான சிறப்பு ஆராய்ச்சி நிதியத்தையும் பாரத் உருவாக்கியுள்ளது.
நண்பர்களே,
இத்தகைய முயற்சிகள் குறைக்கடத்தி மற்றும் அறிவியல் துறைகளில் புதுமைகளின் நோக்கத்தை பெரிதும் விரிவுபடுத்தும். குறைக் கடத்தி தொடர்பான உள்கட்டமைப்பிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மேலும், உங்களிடம் ஒரு முப்பரிமாண சக்தி உள்ளது - முதலாவது, பாரதத்தின் தற்போதைய சீர்திருத்தவாத அரசு, இரண்டாவதாக, பாரதத்தில் வளர்ந்து வரும் உற்பத்தி தளம், மூன்றாவதாக இந்தியாவின் விருப்ப சந்தை. தொழில்நுட்பத்தின் சுவையை புரிந்து கொள்ளும் சந்தை. உங்களைப் பொறுத்தவரை, முப்பரிமாண சக்தியுடைய குறைக்கடத்தி தொழில் தளம் வேறு எங்கும் கண்டுபிடிக்க இயலாது.
நண்பர்களே,
பாரதத்தின் விருப்பங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகம் மிகவும் தனித்துவமானது. பாரதத்தைப் பொறுத்தவரை, சிப் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல. நம்மைப் பொறுத்தவரை, இது லட்சக்கணக்கான விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு வழியாகும். இன்று, பாரத் சிப்களின் முக்கிய நுகர்வோராக உள்ளது. இந்த சிப்பில் உலகின் சிறந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாரதத்தில் கடைசிக் கோடி விநியோகத்தை உறுதி செய்வதில் இந்த சிறிய சிப் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது உலகின் வலுவான வங்கி அமைப்புகள் கூட தடுமாறியபோது, பாரதத்தில் வங்கிகள் தடையின்றி தொடர்ந்து இயங்கின. பாரதத்தின் யுபிஐ, ரூபே அட்டை, டிஜி லாக்கர் அல்லது டிஜி யாத்ரா என எதுவாக இருந்தாலும், பல்வேறு டிஜிட்டல் தளங்கள் பாரத மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. தற்போது, பாரதம் தற்சார்பு அடைய ஒவ்வொரு துறையிலும் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. தற்போது, பாரதம் ஒரு குறிப்பிடத்தக்க பசுமை மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியாவில் தரவு மையங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் பொருள் உலகளாவிய குறைக்கடத்தி துறையை இயக்குவதில் பாரத் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.
நண்பர்களே,
'சிப்புகள் எங்கே வேண்டுமானாலும் விழட்டும்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, விஷயங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். இன்றைய இளைய மற்றும் விருப்பங்கள் நிறைந்த பாரதம் இந்த மனப்பான்மையைப் பின்பற்றுவதில்லை. பாரத்தின் இன்றைய தாரக மந்திரம் 'இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிப்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது'. அதனால்தான் குறைக்கடத்தி உற்பத்தியை மேம்படுத்த நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி வசதிகளை அமைக்க மத்திய அரசு 50 சதவீத ஆதரவை வழங்குகிறது. இதற்காக மாநில அரசுகளும் கூடுதல் உதவிகளை செய்து வருகின்றன. இந்த கொள்கைகள் காரணமாக, குறுகிய காலத்தில் இந்தத் துறையில் இந்தியாவில் ஏற்கனவே 1.5 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, பல திட்டங்கள் செயல் நடவடிக்கையில் உள்ளன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாரதத்தில் 360 டிகிரி அணுகுமுறையுடன் பணிகள் செய்யப்படுகின்றன. பாரதத்தில் ஒட்டுமொத்த குறைக்கடத்தி விநியோகச் சங்கிலி சூழல் அமைப்பையும் எங்கள் அரசு முன்னெடுத்து வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு என்று இந்த ஆண்டு செங்கோட்டையில் இருந்து நான் குறிப்பிட்டேன். பாரத் ஒரு குறைக்கடத்தி கேந்திரமாக மாற என்ன வேண்டுமானாலும் செய்யும்.
நண்பர்களே,
உள்நாட்டு உற்பத்தி மற்றும் முக்கிய கனிமங்களை வெளிநாடுகளில் கொள்முதல் செய்வதற்கான முக்கியமான கனிம இயக்கத்தை, நாங்கள் சமீபத்தில் அறிவித்தோம். முக்கியமான கனிமங்களுக்கான சுங்க வரி விலக்குகள், சுரங்கத் தொகுதி ஏலங்கள் மற்றும் பலவற்றில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இந்திய விண்வெளி அறிவியல் நிறுவனத்தில் குறைக்கடத்தி ஆராய்ச்சி மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நாங்கள் ஐ.ஐ.டி.களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம், இதனால் எங்கள் பொறியாளர்கள் இன்றைய உயர் தொழில்நுட்ப சிப்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை சிப்களையும் ஆராய்ச்சி செய்கிறார்கள். சர்வதேச ஒத்துழைப்பையும் முன்னெடுத்து வருகிறோம். எண்ணெய் இராஜதந்திரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்; இன்றைய சகாப்தம் சிலிக்கான் இராஜதந்திரம். இந்த ஆண்டு, இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் விநியோகச் சங்கிலி குழுமத்தின் துணைத் தலைவராக பாரத் தேர்ந்தெடுக்கப்பட்டது குவாட் குறைக்கடத்தி விநியோக முன்முயற்சியில் நாங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக இருக்கிறோம், சமீபத்தில் ஜப்பான், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த துறையில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை பாரத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
பாரதத்தின் குறைக்கடத்தி இயக்கம் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பாரதம் ஏன் இதில் கவனம் செலுத்துகிறது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நமது டிஜிட்டல் இந்தியா இயக்கத்தை படிக்க வேண்டும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் குறிக்கோள் நாட்டிற்கு வெளிப்படையான, பயனுள்ள மற்றும் கசிவு இல்லாத நிர்வாகத்தை வழங்குவதாகும்.
இன்று, அதன் பலவித விளைவை நாம் அனுபவித்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக்கு குறைந்த விலையில் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா தேவைப்பட்டது. அதன்படி, தேவையான சீர்திருத்தங்களை அமல்படுத்தி, அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்கினோம். பத்தாண்டுகளுக்கு முன்பு மொபைல் போன்களின் முக்கிய இறக்குமதியாளர்களில் நாமும் இருந்தோம். தற்போது, உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாங்கள் இருக்கிறோம். 5 ஜி கைபேசிகளுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக பாரத் இப்போது உள்ளது என்று சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் 5 ஜி வெளியீட்டைத் தொடங்கினோம். இன்று நாம் எங்கே வந்திருக்கிறோம் என்று பாருங்கள். இன்று, இந்தியாவின் மின்னணுத் துறை 150 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.
எங்கள் இலக்கு இன்னும் பெரியது. இந்த பத்தாண்டின் இறுதிக்குள் எங்கள் மின்னணுத் துறையை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்த விரும்புகிறோம். இதன் மூலம் இந்திய இளைஞர்களுக்கு 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் பாரத்தின் குறைக்கடத்தி துறையும் பெரிதும் பயனடையும். மின்னணு உற்பத்தியில் 100 சதவீதம் இந்தியாவிலேயே செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதன் பொருள் பாரத் குறைக்கடத்தி சிப்புகளை மட்டுமல்ல, அவற்றின் இறுதிப் பொருட்களையும் தயாரிக்கும்.
நண்பர்களே,
பாரதத்தின் குறைக்கடத்தி சூழல் அமைப்பு, உள்நாட்டு சவால்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய சவால்களுக்கும் தீர்வுகளை வழங்குகிறது. வடிவமைப்பு தொடர்பான ஒரு உருவகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த உருவகம் - 'தோல்வியின் ஒற்றைப் புள்ளி'. இந்த குறைபாட்டை தவிர்க்க வடிவமைப்பு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இவை ஒரு கூறுகளை மட்டும் சார்ந்து இல்லை என்பதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.
இந்த பாடம் வடிவமைப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இது நம் வாழ்க்கைக்கு சமமாக பொருந்தும், குறிப்பாக விநியோகச் சங்கிலிகளின் பின்னணியில். கோவிட் அல்லது போர்களாக இருந்தாலும், சமீப காலங்களில் விநியோகச் சங்கிலி இடையூறுகளிலிருந்து எந்தத் தொழிலும் தப்பவில்லை. எனவே, விநியோகச் சங்கிலிகளில் மீட்சி முக்கியமானது. எனவே, பல்வேறு துறைகளில் மீட்சியை உருவாக்கும் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக இந்தியா திகழ்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னுமொரு அம்சத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜனநாயக முறைகள் தொழில்நுட்பத்துடன் இணையும்போது, தொழில்நுட்பத்தின் நேர்மறை ஆற்றல் வலுவடைகிறது. மாறாக, தொழில்நுட்பத்திலிருந்து ஜனநாயக முறைகள் அகற்றப்படும்போது, அது விரைவில் தீங்கு விளைவிக்கும். எனவே, மொபைல் உற்பத்தி, மின்னணு உற்பத்தி அல்லது குறைக்கடத்திகள் எதுவாக இருந்தாலும், எங்கள் கவனம் தெளிவாக உள்ளது. நெருக்கடி காலங்களில் கூட இடைவிடாமல் தொடர்ந்து செயல்படும் ஒரு உலகத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த விஷயத்தில் பாரதத்தின் முயற்சிகளை நீங்கள் வலுப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி!