வணக்கம்!
நகர்ப்புற மேம்பாடு என்ற முக்கியமான தலைப்பிலான பட்ஜெட் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
நாட்டின் விடுதலைக்குப் பின்னர் துரதிருஷ்டவசமாக சில நகரங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் 75 திட்டமிடப்பட்ட நகரங்கள் உருவாக்கப்பட்டிருந்தால் உலகில் இந்தியாவின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும். 21-ம் நூற்றாண்டில் வேகமாக மாறிவரும் இந்தியச் சூழல் அமைப்பில் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் இப்போதைய தேவையாகும்.
புதிய நகரங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள நகரங்களில் சேவைகளை நவீனப்படுத்துதல் ஆகியவை அவசியமானதாகும். இவை இரண்டும் நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய அம்சங்களாகும். கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சி தரநிலைகளுக்கு ரூ. 15,000 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலுக்கு உத்வேகம் அளிக்கும்.
நண்பர்களே,
நகர்ப்புற மேம்பாட்டில் திட்டமிடல் மற்றும் நிர்வாகம் முக்கியப் பங்கு வகிப்பதை உங்களைப் போன்ற வல்லுநர்கள் உணர்ந்திருப்பீர்கள். மோசமான நகர்ப்புறத் திட்டமிடல், முறையான திட்ட அமலாக்கமின்மை போன்றவை தேசத்தின் மேம்பாட்டில் மிகப்பெரிய சவால்களை உருவாக்கும். நகரங்களில் இடவசதி திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நன்கு கவனம் செலுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநிலங்களில் நகர்ப்புறத் திட்டமிடல் சூழலை எவ்வாறு வலுப்படுத்துவது, நகர்ப்புறத் திட்டமிடலில் தனியார் துறையில் உள்ள நிபுணத்துவத்தை எவ்வாறு பயன்படுத்துவது, நகர்ப்புறத் திட்டமிடலில் உயர்திறன் மையத்தை உருவாக்கி திட்டமிடல் நடைமுறைகளை புதிய உச்சத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது ஆகிய மூன்று அம்சங்கள் குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நகர்ப்புறத் திட்டமிடலை முறையாக மேற்கொண்டால் மட்டுமே மாநில அரசுகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்ற முடியும். அமிர்தகாலத்தில் நகர்ப்புறத் திட்டமிடல்தான் நமது நகரங்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்பதுடன் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும். நமது நகரங்கள் பருவநிலை மீட்சித்தன்மையுடன் கூடியதாகவும், நீர்வளப் பாதுகாப்பு கொண்டதாகவும் அமைய சிறந்த திட்டமிடல் அவசியம்.
நண்பர்களே,
நகர்ப்புறத் திட்டமிடல் வல்லுநர்கள் புதிய சிந்தனைகளுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பூகோளத் தகவல்முறை அமைப்பு அடிப்படையிலான திட்டமிடல், பல்வேறு வகைகளைக் கொண்ட திட்டமிடல் அணுகுமுறைகள், திறன் வாய்ந்த மனிதவளம் மற்றும் திறன் கட்டமைப்பு ஆகியவற்றில் வல்லுநர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களது நிபுணத்துவம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகம் தேவை. இது அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
போக்குவரத்து திட்டமிடல் என்பது நகரங்களின் மேம்பாட்டில் மிக முக்கிய தூண். நமது நகரங்களில் போக்குவரத்து வசதிகள் தடையற்றதாக இருக்க வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் மெட்ரோ ரயில் இணைப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. தற்போதைய அரசு பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ கட்டமைப்புகளில் பல்வேறு நாடுகளை விஞ்சி இந்தியா முன்னணி வகிக்கிறது. மெட்ரோ ரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம். கடைசி மைல் வரைப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும். நகரங்களில் சாலைகளை அகலப்படுத்துதல், பசுமைப் போக்குவரத்து, மேம்பாலங்கள் அமைப்பது, இணைப்பு மேம்பாடு ஆகியவை போக்குவரத்து திட்டமிடலின் போது, முக்கிய அம்சங்களாக சேர்க்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
சுழற்சிப் பொருளாதாரத்தை நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய அடிப்படையாக இந்தியா உருவாக்கி வருகிறது. பேட்டரிக் கழிவுகள், மின்சாரக் கழிவுகள், வாகனக் கழிவுகள், டயர் கழிவுகள் போன்றவை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான டன்கள் நகர்ப்புறங்களில் உருவாகி வருகின்றன. 2014-ம் ஆண்டில் நகர்ப்புறக் கழிவுகளில் 14 முதல் 15 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. தற்போது 75 சதவீதக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் முன்பே எடுக்கப்பட்டிருந்தால் நாட்டில் உள்ள நகரங்களின் நுழைவுப் பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்திருக்காது.
நகரங்களில் உள்ள குப்பைக் குவியல்களை கழிவு மறுசுழற்சி செய்து நகரங்களை குப்பைகள் அற்றதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மறுசுழற்சிக்கான ஏராளமான வாய்ப்புகள் பல்வேறு தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும். இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். கழிவுகள் மேலாண்மைக்கான திறன்களை தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டும்.
அம்ருத் திட்டத்தின் வெற்றியை அடுத்து இத்திட்டத்தின் 2-வது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது நகரங்களில் தூய்மையானக் குடிநீர் கிடைப்பதற்கு வகை செய்யும். பாரம்பரியமான நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை முறைகளைத் தாண்டி நவீனத் திட்டமிடல் அவசியம். சில நகரங்களில், பயன்படுத்தப்பட்ட நீர் சுத்தகரிப்பு செய்யப்பட்டு தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
நண்பர்களே,
நமது புதிய நகரங்கள் குப்பைகள் அற்றதாகவும், நீர்வளப் பாதுகாப்பு கொண்டதாகவும், பருவநிலை மீட்சித்தன்மையுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். வடிவமைப்பு, முழுமையான கழிவு நீர் மறுசுழற்சி, சிறந்த எரிசக்திப் பயன்பாடு, திறன் வாய்ந்த நிலப் பயன்பாடு, வழித்தடங்கள் மாற்றம், பொதுச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நமது நகரங்கள், எதிர்காலத்தில் அளவிடப்பட வேண்டும். நகர்ப்புறத் திட்டமிடலின் போது, விளையாட்டு மைதானங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மிதிவண்டிப் பாதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
அரசின் திட்டங்களும், கொள்கைகளும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களது சொந்த வாழ்வையும் மேம்படுத்த உதவ வேண்டும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.80,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது சிமெண்ட், எஃகு, பெயிண்ட் உள்ளிட்ட தொழில் துறைகளையும் வலுப்படுத்தும். நகர்ப்புற மேம்பாட்டில் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் பிற தொழில் துறையினரும் இதில் கவனம் செலுத்தி விரைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்வதுடன், புதிய சாத்தியக்கூறுகளையும் உருவாக்க வேண்டும். நிலையான வீடுகள் தொழில்நுட்பம் முதல் நிலையான நகரங்கள் வரை புதிய தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும்.
நண்பர்களே,
அனைவரும் இந்த தலைப்புகளில் தீவிரமாக கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன். இவை தவிர மேலும் பல அம்சங்களும் உள்ளன. இந்த விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை முன்னெடுத்துச் சென்று திறம்பட திட்டமிடும் பணியை மேற்கொள்ளுங்கள்.
இந்த உணர்வுடன் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!.
மிக்க நன்றி!