வணக்கம்!
கடந்த சில நாட்களாக, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் பங்குதாரர்களிடம் பட்ஜெட் குறித்துப் பேசுவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் கூடியவரை விரைவாகவும் கவனம் செலுத்தும் வகையிலும் பட்ஜெட்டை எவ்வாறு அமல்படுத்த வேண்டும்? பங்குதாரர்கள் என்ன ஆலோசனைகளை வழங்குகிறார்கள்? அவர்களின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? என்பதற்கான சிந்தனை அமர்வுகள் மிக நன்றாக நடக்கின்றன. பட்ஜெட்டுடன் நேரடித் தொடர்புள்ள அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருடனும் சங்கங்களுடனும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர், நமது தலித் சகோதர சகோதரிகளுடனும் மற்றும் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுடனும் கலந்துரையாடியதில் சிறந்த ஆலோசனைகள் வெளிவந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசிற்கும் பயனுள்ள ஆலோசனைகள் கிடைத்துள்ளன. மேலும், இம்முறை பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில், பட்ஜெட்டில் என்ன இருந்திருக்க வேண்டும் அல்லது இருந்திருக்கக் கூடாது என்று விவாதிக்காமல், இந்த பட்ஜெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்து அனைத்துப் பங்குதாரர்களும் திட்டவட்டமாக விவாதித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்புத் திட்டம் அல்லது சுருக்கமாக பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது இந்த சிந்தனையின் விளைவு. இந்த பட்ஜெட்டில் பிரதமரின் விஸ்வகர்மா திட்ட அறிவிப்பு பரவலான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது; ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நண்பர்களே!
கைவினைஞர்கள், உள்ளூர் கைவினைப் பொருட்களை சிறிய அளவில் உற்பத்தி செய்வதிலும், பொதுமக்களுக்கு அவர்களின் ஈர்ப்பைத் தக்கவைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் அவர்களின் பங்களிப்பு சமூகத்தின் தயவில் விடப்பட்டது, மேலும் அவர்களின் பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டது.
இப்போது திறன் உள்கட்டமைப்பு அமைப்பை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க வேண்டும். முத்ரா திட்டம் மூலம் வங்கி உத்தரவாதம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை அரசு தற்போது வழங்குகிறது. இந்தத் திட்டம் நமது கைத்தொழில் செய்யும் நண்பர்களுக்கு அதிகபட்ச நன்மையை உறுதிசெய்ய வேண்டும். நமது டிஜிட்டல் கல்வியறிவு இயக்கங்களில், கைத்தொழில் செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நண்பர்களே!
இன்றைய கைவினைஞர்களை நாளைய தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதை மனதில் வைத்து, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் மூலம் அவர்கள் தயாரிக்கும் தயாரிப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதில், வாடிக்கையாளர்களின் தேவைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் உள்ளூர் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையும் குறிவைத்து வருகிறோம். இன்று இங்கு கூடியிருக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் நமது கைவினைஞர் நண்பர்களுடன் கைகோர்த்து, அவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து, அவர்கள் முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக, நீங்கள் அனைவரும் முடிந்தவரை இந்தக் கைவினைஞர்களுடன் இணைந்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்; மேலும் அவர்களை அணுகி அவர்களின் கற்பனைகளுக்கு சிறகுகளை அளியுங்கள்.
நண்பர்களே!
கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம்தான் நாம் அவர்களை மேம்படுத்த முடியும். அவர்களில் பலர் நமது எம்எஸ்எம்இ துறைக்குப் பொருட்கள் வழங்குவோராகவும், தயாரிப்பாளர்களாகவும் மாறலாம். கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அவர்களை உருவாக்க முடியும். இந்த மக்களை அவர்களின் தேவைகளுடன் இணைப்பதன் மூலம் தொழில்துறை உலகம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அவர்களுக்குத் திறன் மற்றும் தரமான பயிற்சியையும் தொழில்துறை வழங்க முடியும்.
நண்பர்களே!
இன்று இணையவழிக் கருத்தரங்கின் கடைசி அமர்வு. இதுவரை, பட்ஜெட்டின் வெவ்வேறு பகுதிகள் குறித்து 12 இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவுள்ளது. அனைத்து எம்.பி.க்களும் புதிய நம்பிக்கை மற்றும் புதிய ஆலோசனைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்படும் வரை செயல்பாட்டில் புதிய உற்சாகம் காணப்படும். இந்தச் சிந்தனை அமர்வுகள் தனித்துவமான முயற்சியாகும்; இது ஒரு பயனுள்ள முயற்சி; மொத்த நாடும் ஒவ்வொரு மாவட்டமும் இதனுடன் இணைந்திருக்கின்றன. நேரத்தை ஒதுக்கி இந்த இணையவழிக் கருத்தரங்கை செழுமைப்படுத்தியவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இன்று வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதுவரை இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தி, அதை முன்னெடுத்துச் சென்ற மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!