வணக்கம்,
நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில் கூட்டு உடைமை மற்றும் சம கூட்டுமுயற்சிக்கு அரசு வழிவகை செய்கிறது. கொரோனா பெருந்தொற்றின் போது நிலவிய இந்தியாவின் நிதி மற்றும் நிதிசார் கொள்கையின் தாக்கங்களை தற்போது ஒட்டுமொத்த உலகமும் கண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இது நிகழ்ந்தது. நிதி சீர்திருத்தம், வெளிப்படைத் தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி இந்தியா தற்போது முன்னேறுவதால் மிகப்பெரிய மாற்றத்தையும் நாம் சந்திக்கிறோம். விவாதங்களின் தொடக்கம் மற்றும் முடிவில் நிலவி வந்த கேள்விக்குறிகளுக்கு, நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் தற்போது மாற்றாக விளங்குகின்றன. உலகளாவிய பொருளாதாரத்தின் வளமான தலமாக இந்தியா அழைக்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தது. இதில் அதிக முதலீடுகள் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்பட்டன.
நண்பர்களே,
புதிய திறன்களுடன் இந்தியா முன்னேறி வரும் வேளையில், இந்திய நிதித் துறையில் ஈடுபட்டுள்ள உங்களது பொறுப்பு அதிகரித்துள்ளது. பெருந்தொற்றின் போது ஒரு கோடியே 20 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உதவி அரசால் அளிக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி பிணையில்லா உறுதிக் கடனாக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நிதி உள்ளடக்கம் சம்பந்தமான அரசின் கொள்கைகள், முறைசார் நிதி அமைப்புமுறையில் கோடிக்கணக்கான மக்களை அங்கம் வகிக்கச் செய்துள்ளன. வங்கி உத்தரவாதம் இல்லாமல் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முத்ரா கடன்களை வழங்கி கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை அரசு நிறைவேற்றி உள்ளது. சிறிய ரக தொழில்முனைவோரை கடன்கள் வேகமாக சென்றடைவதற்காக கட்டணத்தைக் குறைத்து, வேகத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் பங்குதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்கும் முன்முயற்சி, விருப்பத்தேர்வு சார்ந்த விஷயம் அல்ல. உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவை தேசிய பொறுப்புகள். உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கும் தற்சார்பு இந்தியாவிற்கும் நாட்டில் அபரிமிதமான உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு நபரையும் சென்றடைய வேண்டும் என்ற மனப்பான்மையோடு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். சிறந்த அளவில் பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். இது போன்ற எதிர்காலம் சார்ந்த யோசனைகளை விரிவாக ஆலோசிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.