மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் அவர்களே, இந்தூரில் நீண்ட காலம் பணியாற்றிய மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள்; புதிய சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்; மற்ற பிரமுகர்கள், என் அன்பான தொழிலாளர் சகோதர சகோதரிகளே, வணக்கம்!
இன்றைய நிகழ்வு நமது உழைக்கும் சகோதர சகோதரிகளின் பல ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் கனவுகளின் விளைவாகும். இன்று அடல்ஜியின் பிறந்த நாள் என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாரதிய ஜனதா கட்சியின் இந்த புதிய அரசு மற்றும் புதிய முதலமைச்சர் முன்னிலையில் மத்தியப் பிரதேசத்தில் எனது முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். எனது ஏழை, எளிய உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்காக இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தகைய நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது.
இரட்டை என்ஜின் அரசின் புதிய குழுவுக்கு நமது தொழிலாளர் குடும்பங்களின் ஆசீர்வாதங்கள் பொழியும் என்று நான் நம்புகிறேன். ஏழைகளின் ஆசீர்வாதம், பாசம் மற்றும் அன்பு என்ன அதிசயங்களைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன். மத்தியப் பிரதேசத்தின் புதிய குழு வரும் நாட்களில் பல பாராட்டுகளைப் பெறும் என்று நான் நம்புகிறேன். ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்கு இந்தத் தொகுப்பு அறிவிக்கப்பட்டபோது, இது இந்தூரில் ஒரு பண்டிகைச் சூழலை உருவாக்கியது. இந்த முடிவு நமது தொழிலாளர் சகோதர சகோதரிகளை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இன்று அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் என்பதால் இன்றைய நிகழ்வு இன்னும் சிறப்பு வாய்ந்தது; இன்று நல்லாட்சி நாள். மத்தியப் பிரதேசத்துடனான அடல்ஜியின் உறவு மற்றும் மாநிலத்தின் மீதான அவரது பற்று ஆகியவற்றை நாம் அனைவரும் அறிவோம். நல்லாட்சி தினத்தன்று இந்த நிகழ்வுக்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே,
இன்று அடையாளமாக ரூ.224 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை வரும் நாட்களில் தொழிலாளர் சகோதர சகோதரிகளைச் சென்றடையும். நீங்கள் ஏராளமான சவால்களை எதிர்கொண்டுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இப்போது ஒரு பொன்னான எதிர்காலத்தின் விடியல் உங்கள் முன் உள்ளது. இந்தூர் மக்கள் டிசம்பர் 25 ஆம் தேதியை தொழிலாளர்களுக்கு நீதி வழங்கப்பட்ட நாளாக நினைவில் கொள்வார்கள். உங்கள் பொறுமை மற்றும் கடின உழைப்புக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்
நண்பர்களே,
நாட்டில் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், எனது விவசாய சகோதர சகோதரிகள் ஆகிய நான்கு பிரிவுகளும் எனக்கு மிகவும் முக்கியமானவை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். ஏழைகளின் வாழ்க்கையை மாற்ற மத்தியப் பிரதேச அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏழைகளுக்கு சேவை, தொழிலாளர்களுக்கான மரியாதை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மரியாதை ஆகியவை எங்கள் முன்னுரிமையாகும். நாட்டின் தொழிலாளர்கள் அதிகாரம் பெறுவதையும், வளமான இந்தியாவை உருவாக்குவதில் கணிசமான பங்களிப்பை வழங்குவதையும் உறுதி செய்ய நாங்கள் பாடுபடுகிறோம் .
குடும்ப உறுப்பினர்களே,
தூய்மை மற்றும் உணவுக்கு பெயர் பெற்ற இந்தூர் பல துறைகளில் முன்னணியில் உள்ளது. இந்தூரின் வளர்ச்சியில் இங்குள்ள ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள 100 ஆண்டுகள் பழமையான மகாராஜா துகோஜிராவ் துணி சந்தையின் வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நகரத்தின் முதல் பருத்தி ஆலை ஹோல்கர் அரச குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. மால்வாவின் பருத்தி, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று துணி தயாரிக்கப்பட்டது. அங்குள்ள ஆலைகளில் பருத்தியின் விலையை இந்தூரின் சந்தைகள் நிர்ணயிக்கும் காலம் இருந்தது. இந்தூரில் தயாரிக்கப்படும் துணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருந்தது. இங்குள்ள ஜவுளி ஆலைகள் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு மையமாக மாறிவிட்டன. இந்த ஆலைகளில் பணிபுரிந்த பல தொழிலாளர்கள் பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு குடியேறினர். இந்தூர் மான்செஸ்டருடன் ஒப்பிடப்பட்ட காலம் இது. ஆனால் காலம் மாறியது. முந்தைய அரசின் கொள்கைகளின் சுமைகளை இந்தூர் சுமக்க வேண்டியிருந்தது.
இந்தூரின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வரவும் இரட்டை என்ஜின் அரசு முயற்சித்து வருகிறது.போபால் மற்றும் இந்தூர் இடையே முதலீட்டு வழித்தடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தூர்-பிதாம்பூர் பொருளாதார வழித்தடம், பன்னோக்கு போக்குவரத்து பூங்கா, விக்ரம் உத்யோக்புரியில் உள்ள மருத்துவ சாதன பூங்கா, தார் மாவட்டம் பென்சோலாவில் உள்ள பிரதமர் மித்ரா பூங்கா போன்ற பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசால் முதலீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்களின் விளைவாக இங்குள்ள பொருளாதாரம் வேகமாக வளரும்.
நண்பர்களே,
ம.பி.யின் பெரும் பகுதி அதன் இயற்கை அழகு மற்றும் அதன் வரலாற்று பாரம்பரியத்திற்கு புகழ் பெற்றது. இந்தூர் உட்பட ம.பி.யின் பல நகரங்கள் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சமநிலைக்கு ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகளாக மாறி வருகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய கோபர்தன் ஆலையும் இந்தூரில் செயல்பட்டு வருகிறது. மின்சார வாகனங்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்காக மின்-சார்ஜிங் உள்கட்டமைப்பு இங்கு வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இன்று ஜாலூட் சூரிய மின் நிலையத்தின் மெய்நிகர் பூமி பூஜையை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ஆலை ஒவ்வொரு மாதமும் ரூ.4 கோடி மதிப்புள்ள மின் கட்டணத்தை சேமிக்கப் போகிறது. பசுமைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்த ஆலைக்கு மக்களிடமிருந்து பணம் திரட்டப்படுகிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பசுமை பத்திரத்தின் இந்த முயற்சி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாட்டு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான மற்றொரு ஊடகமாக மாறும்.
என் குடும்ப உறுப்பினர்களே,
நாங்கள் எடுத்த தீர்மானங்கள் மற்றும் தேர்தலின் போது நாங்கள் அளித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற மாநில அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையும் ம.பி.யின் ஒவ்வொரு இடத்தையும் சென்றடைகிறது. தேர்தல் காரணமாக, இந்தத் திட்டம் ம.பி.யில் சற்று தாமதமாக தொடங்கியது. ஆனால் உஜ்ஜயினியில் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே. இது தொடர்பான 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த முயற்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். மோடியின் உத்தரவாத வாகனம் உங்கள் இடத்தை அடையும் போது, நீங்கள் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.பி.யின் அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அங்கு அனைவரும் இருக்க வேண்டும். அரசு திட்டங்களின் பயன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக முயற்சித்து வருகிறோம்.
மோடியின் உத்தரவாதத்தை நம்பி, அமோக வெற்றியை வழங்கிய மத்தியப் பிரதேச மக்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்கேற்க மாநில அரசு எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இதுபோன்ற தருணங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கின்றன. அதனால்தான் இந்தூர் மக்களுக்கும், மத்தியப்பிரதேச அரசுக்கும், எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்த எனது தொழிலாளர் சகோதர சகோதரிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் கழுத்தில் உள்ள மாலைகள், இது எவ்வளவு நல்ல தருணம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கிறது என்பதை எனக்குச் சொல்கின்றன. உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியும், இந்த மாலைகளின் நறுமணமும் நிச்சயமாக சமூகத்திற்கு முக்கியமான ஒன்றைச் செய்ய நம்மைத் தூண்டும். உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.