லோகமான்ய திலகரின் 103-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தேசத்திற்கு பல சிறந்த ஆளுமைகளை வழங்கிய மகாராஷ்டிர மண்ணுக்கு நான் தலை வணங்குகிறேன்.
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
மதிப்பிற்குரிய திரு சரத் பவார் அவர்களே, ஆளுநர் திரு ரமேஷ் பயஸ் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, துணை முதலமைச்சர் திரு அஜித் பவார் அவர்களே, அறக்கட்டளையின் தலைவர் திரு தீபக் திலகர் அவர்களே, முன்னாள் முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சுஷில்குமார் ஷிண்டே அவர்களே, திலகர் குடும்பத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!
இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறேன். இன்று, நமது முன்மாதிரியும், இந்தியாவின் பெருமையுமான பாலகங்காதர திலகரின் நினைவு தினம் ஆகும். மேலும், இன்று அன்னா பாவ் சாத்தே அவர்களின் பிறந்த நாளாகும். லோகமான்ய திலகர் அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நெற்றித் திலகம் போன்றவர். அதேசமயம், சமூக சீர்திருத்தங்களுக்கு அன்னா பாவ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது, அசாதாரணமானது. இந்த இருபெரும் ஆளுமைகளின் பாதங்களில் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.
இந்த முக்கியமான நாளில், புனித பூமியான மகாராஷ்டிராவைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இந்தப் புண்ணிய பூமி சத்ரபதி சிவாஜியின் பூமியாகும். இது சபேகர் சகோதரர்களின் புனித பூமியாகும். ஜோதிபா ஃபுலே மற்றும் சாவித்திரி பாய் ஃபுலே ஆகியோரின் உத்வேகங்களும், லட்சியங்களும் இந்த மண்ணுடன் தொடர்புடையவை. சற்றுமுன், தக்துஷேத் கோவிலில் கணபதியிடம் ஆசி பெற்றேன். இது புனே மாவட்ட வரலாற்றின் மிகவும் நெகிழ்ச்சியான அம்சமாகும். திலகர் அழைப்பின் பேரில் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவும் போது முதன்முதலில் பங்கேற்றவர் தக்து சேத் ஆவார். இந்த மண்ணுக்கு வணக்கம் செலுத்தும் அதே வேளையில், இந்த மாபெரும் ஆளுமைகள் அனைவரையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.
நண்பர்களே,
இன்று புனேவில் உங்கள் அனைவர் மத்தியிலும் எனக்குக் கிடைத்த கௌரவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். லோகமான்ய திலகர் தேசிய விருதை திலகருடன் நேரடியாக தொடர்புடைய ஒரு இடத்திலிருந்தும் ஒரு அமைப்பிலிருந்தும் பெறுவதை நான் மிகவும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த கௌரவத்திற்காக ஹிந்த் ஸ்வராஜ் சங்கத்திற்கும், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காசி, புனே ஆகிய இரண்டுக்கும் நம் நாட்டில் ஒரு சிறப்பு அடையாளம் உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இரண்டு இடங்களும் நித்திய ஞானத்தால் அடையாளம் காணப்படுகின்றன. அறிஞர்களின் இந்த பூமியில் அதாவது புனேயில் கௌரவிக்கப்படுவது, மிகுந்த பெருமிதத்தையும் மனநிறைவையும் அளிக்கிறது. ஆனால் நண்பர்களே, நமக்கு விருது கிடைக்கும்போது, நமது பொறுப்பும் அதிகரிக்கிறது. இன்று, அந்த விருதுடன் திலகரின் பெயரும் இணைந்திருப்பதால், பொறுப்புணர்வு பன்மடங்கு அதிகரிக்கிறது. லோகமான்ய திலகர் தேசிய விருதை நாட்டின் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நாட்டு மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றவும் நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த விருது 'கங்காதர்' என்ற மாமனிதருடன் தொடர்புடையது என்பதால், எனக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகையை கங்கையின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன். பரிசுத் தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.
நண்பர்களே,
இந்திய சுதந்திரத்தில் லோகமான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில நிகழ்வுகளிலும், வார்த்தைகளிலும் சுருக்கிவிட முடியாது. திலகர் காலத்திலும் அதற்குப் பின்னரும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான ஒவ்வொரு நிகழ்வும், இயக்கமும், அந்தக் காலக்கட்டத்தில் நடந்த ஒவ்வொரு புரட்சியாளரும், தலைவர்களும் திலகரால் ஈர்க்கப்பட்டனர். அதனால்தான் ஆங்கிலேயர்களும் திலகரை 'இந்திய அமைதியின்மையின் தந்தை' என்று அழைக்க நேர்ந்தது. திலகர் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த திசையையும் மாற்றினார். இந்தியர்கள் நாட்டை வழிநடத்த முடியாது என்று ஆங்கிலேயர்கள் கூறியபோது, 'சுயராஜ்ஜியம் நமது பிறப்புரிமை' என்று லோகமான்ய திலகர் கூறினார். இந்தியாவின் நம்பிக்கை, கலாச்சாரம் ஆகியவை பின்தங்கிய நிலையின் அடையாளங்கள் என்று ஆங்கிலேயர்கள் ஒரு அனுமானத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் திலகர் அவர்கள் எல்லாவற்றையும் தவறு என்று நிரூபித்தார். அதனால்தான், இந்திய மக்கள் திலகரை ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவருக்கு 'லோகமான்ய' என்ற பட்டத்தையும் வழங்கினர். தீபக் அவர்கள் கூறியது போல, மகாத்மா காந்தியே அவரை 'நவீன இந்தியாவை உருவாக்கியவர்' என்று அழைப்பார். திலகரின் சிந்தனை எவ்வளவு பரந்ததாக இருந்திருக்கும், அவர் எவ்வளவு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருந்திருப்பார் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
நண்பர்களே,
ஒரு மகத்தான குறிக்கோளுக்கு தன்னை அர்ப்பணிப்பது மட்டுமின்றி, அந்த இலக்கை அடைவதற்கான நிறுவனங்களையும், அமைப்புகளையும் உருவாக்குபவரே சிறந்த தலைவர். இதற்காக, அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரின் நம்பிக்கையையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். லோகமான்ய திலகரின் வாழ்க்கையில் இந்த குணங்களை எல்லாம் நாம் காண்கிறோம். ஆங்கிலேயர்கள் அவரை சிறையில் அடைத்தபோது, அவர் சித்திரவதை செய்யப்பட்டார். விடுதலைக்காக தியாகம் செய்தார். அதேசமயம், அணி மனப்பான்மை, பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்புக்கான எடுத்துக்காட்டுகளையும் அவர் முன்வைத்தார். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் ஆகியோருடனான அவரது நெருக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பொன்னான அத்தியாயம் ஆகும். இன்றும் இந்த மூன்று பெயர்களும் லால்-பால்-பால் என்ற மும்மூர்த்தியாக நினைவுகூரப்படுகின்றன. விடுதலைக்காகக் குரல் கொடுக்க இதழியல் மற்றும் பத்திரிகைகளின் முக்கியத்துவத்தை திலகர் அப்போது உணர்ந்தார். சரத் ராவ் சொன்னது போல ஆங்கிலத்தில் திலகர் அவர்கள் 'தி மராத்தா' வார இதழைத் தொடங்கினார். கோபால் கணேஷ் அகார்கர், விஷ்ணுசாஸ்திரி சிப்லுங்கர் ஆகியோருடன் இணைந்து மராத்தியில் 'கேசரி' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். 140 ஆண்டுகளுக்கும் மேலாக, கேசரி மகாராஷ்டிராவில் வெளியிடப்பட்டு, இன்றும் மக்களால் படிக்கப்படுகிறது. இத்தகைய வலுவான அடித்தளத்தில் திலகர் அவர்கள் நிறுவனங்களைக் கட்டியெழுப்பினார் என்பதற்கு இதுவே சான்று.
நண்பர்களே,
லோகமான்ய திலகர் மரபுகளையும், நிறுவனங்களையும் வளர்த்து வந்தார். சமூகத்தை ஒருங்கிணைக்க அனைத்து மக்களின் கணபதி மஹோத்சவத்திற்கு அடித்தளம் அமைத்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் தைரியம் மற்றும் லட்சியங்களின் ஆற்றலை சமூகத்தில் நிரப்ப அவர் சிவ ஜெயந்தியை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வுகள் இந்தியாவை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைப்பதற்கான பிரச்சாரமாக இருந்தன, மேலும் பூர்ண சுயராஜ்ஜியம் என்ற கருத்தையும் உள்ளடக்கியது. இதுதான் இந்திய சமூக அமைப்பின் சிறப்பு. சுதந்திரம் போன்ற பெரிய இலக்குகளுக்காகப் போராடியது மட்டுமின்றி, சமூகத் தீமைகளுக்கு எதிராக புதிய திசையைக் காட்டிய அத்தகைய தலைமையை இந்தியா பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு இது பெரிய பாடமாகும்.
சகோதர சகோதரிகளே,
சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தின் பொறுப்பு எப்போதும் இளைஞர்களின் தோள்களில்தான் இருக்கிறது என்ற உண்மையையும் லோகமான்ய திலகர் அறிந்திருந்தார். இந்தியாவின் எதிர்காலத்திற்காக படித்த மற்றும் திறமையான இளைஞர்களை உருவாக்க விரும்பினார்.
லோக்மான்ய திலகரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். லோகமான்ய திலகர் கீதையில் நம்பிக்கை கொண்டவர். கீதையின் கர்மயோகத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். பிரிட்டிஷார் அவரை இந்தியாவின் தூர கிழக்கில் உள்ள மாண்டலே சிறையில் அடைத்தனர். ஆனால், அங்கேயும் திலகர் கீதையைப் படித்துக் கொண்டிருந்தார். 'கீதா ரகசியம்' மூலம், ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க கர்மயோகம் பற்றிய எளிதான புரிதலை நாட்டிற்கு வழங்கி, கர்மாவின் சக்தியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
சகோதர சகோதரிகளே,
இன்று, இந்தியாவில் உள்ள நம்பிக்கை மிகுதி கொள்கையிலும் தெரிகிறது, அது நாட்டு மக்களின் கடின உழைப்பிலும் பிரதிபலிக்கிறது! கடந்த 9 ஆண்டுகளில், இந்திய மக்கள் பெரிய மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளனர், அவர்கள் இந்த பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியது எப்படி? இந்திய மக்கள்தான் அதைச் செய்தார்கள். இன்று நாடு தன்னிறைவு அடைந்து வருகிறது,
நண்பர்களே,
திலகரின் கொள்கைகளுடன் மக்களை இணைப்பதில் ஹிந்த் ஸ்வராஜ் சங்கம் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த கௌரவத்திற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மண்ணுக்கு வணக்கம் செலுத்தி, இந்த எண்ணத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி, எனது உரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி!