வணக்கம்! நாட்டின் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வனி வைஷ்ணவ் அவர்களே, மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே, எனது அன்பு சகோதர சகோதரிகளே!
இந்தியா தனது ‘அமிர்த காலத்தின்’ (பொற்காலம்) தொடக்கத்தில் உள்ளது, ஏனெனில் அது வளர்ச்சியின் இலக்கை நோக்கி நகர்கிறது. புதிய ஆற்றல், புதிய உத்வேகம், புதிய உறுதிப்பாடு உள்ளது. இந்த நிலையில், இந்திய ரயில்வே வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1300 முக்கிய ரயில் நிலையங்கள் 'அம்ரித் ரயில் நிலையங்களாக' மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும். இன்று, 508 அமிர்த பாரத் ரயில் நிலையங்களுக்கான மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த 508 அமிர்த பாரத் ரயில் நிலையங்களின் கட்டுமானத்திற்காக 25,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் நாட்டின் உள்கட்டமைப்பிற்கும், ரயில்வேக்கும், மிக முக்கியமாக, என் நாட்டின் சாதாரண குடிமக்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். இந்தத் திட்டத்தின் பலன்களை நாட்டின் அனைத்து மாநிலங்களும் அனுபவிக்கும். உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 55 அமிர்த ரயில் நிலையங்களை மேம்படுத்த சுமார் 4,000 கோடி ரூபாய் செலவிடப்படும். ராஜஸ்தானில் 55 ரயில் நிலையங்கள் அமிர்த பாரத் நிலையங்களாக மாற்றப்படும். மத்திய பிரதேசத்தில், 34 ரயில் நிலையங்களை சீரமைக்க, 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும். மகாராஷ்டிராவில், 44 ரயில் நிலையங்களை மேம்படுத்த, 2,500 கோடி ரூபாய் செலவிடப்படும். தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் தங்கள் முக்கிய நிலையங்களை அமிர்த பாரத் நிலையங்களாக மேம்படுத்தும்.
நண்பர்களே,
இன்று உலக நாடுகளின் கவனம் இந்தியா மீதே உள்ளது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது, இந்தியா மீதான உலகத்தின் அணுகுமுறை மாறியுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, நாடு முழு பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளது, அதுதான் முதல் காரணம். இரண்டாவது காரணம், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சவால்களுக்கு நிரந்தரத் தீர்வு காண அயராது உழைத்து, முழுப் பெரும்பான்மையுடன் அரசு முக்கிய முடிவுகளை தெளிவாக எடுத்துள்ளது. இன்று, இந்திய ரயில்வேயும் இந்த மாற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டுகளில் ரயில்வேயில் செய்யப்பட்ட பணிகள் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்கள் அனைவரையும் மகிழ்விப்பதுடன், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. உதாரணமாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா, உக்ரைன், போலந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளை விட இந்தியா அதிக ரயில் பாதைகளை அமைத்துள்ளது. இந்த சாதனையின் அளவை கற்பனை செய்து பாருங்கள். ஒரே ஆண்டில், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த ரயில்வே இணைப்புகளைவிட இந்தியா அதிக பாதைகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் நவீன ரயில்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு பயணிக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் ரயில் பயணத்தை வசதியாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதே இப்போது நாட்டின் குறிக்கோள். ரயில்களில் இருந்து ரயில் நிலையங்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடைமேடைகளில் சிறந்த இருக்கை வசதிகள் செய்யப்பட்டு, நல்ல காத்திருப்பு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்று, நாட்டில் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் இலவச வைஃபை வசதிகளை வழங்குகின்றன.
நண்பர்களே,
எந்தவொரு பிரதமரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து இந்த சாதனைகளைக் குறிப்பிட விரும்புவார்கள். ஆகஸ்டு 15 நெருங்கும் வேளையில், அன்றே அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் இன்று, அத்தகைய ஒரு மகத்தான நிகழ்வு நடக்கிறது, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் பங்கேற்கிறார்கள், எனவே, நான் தற்போது இந்த விசயத்தை விரிவாக விவாதிக்கிறேன்.
நண்பர்களே,
நாட்டில் பல புதிய மற்றும் நவீன ரயில் நிலையங்கள் இருக்கும்போது, அது ஒரு புதிய வளர்ச்சி சூழலுக்கு வழிவகுக்கும். எந்தவொரு சுற்றுலாப் பயணியும், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணியாக இருந்தாலும், இந்த நவீன நிலையங்களுக்கு ரயிலில் வரும்போது, மாநிலம் மற்றும் உங்கள் நகரத்தின் முதல் பார்வையால் அவர் ஈர்க்கப்படுவார், மேலும் இது அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறும். நவீன வசதிகளால் சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் கிடைக்கும். நிலையங்களைச் சுற்றி நல்ல வசதிகள் இருப்பது பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். ரயில் நிலையங்களை நகரங்கள் மற்றும் மாநிலங்களின் அடையாளத்துடன் இணைக்க 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் உட்பட முழு பிராந்திய மக்களுக்கும் பயனளிக்கும்.
நண்பர்களே,
சுதந்திரத்தின் பொற்காலத்தில் நாடு தனது பாரம்பரியத்தில் பெருமை கொண்டுள்ளது. இந்த அமிர்த ரயில் நிலையங்களும் அந்த பெருமையின் சின்னங்களாக மாறி, நமக்கு ஒரு கௌரவ உணர்வை நிரப்பும். இந்த நிலையங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் உள்ளூர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். ஒவ்வொரு அமிர்த நிலையமும் நகரத்தின் நவீன லட்சியங்கள் மற்றும் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளமாக செயல்படும். சமீபத்திய காலங்களில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரலாற்று இடங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்க பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
கடந்த 9 ஆண்டுகளில் ரயில்வேயில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளோம். இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, 2014 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இன்று, ரயில்வேயின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறையுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த 9 ஆண்டுகளில் ரயில் என்ஜின் உற்பத்தி 9 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, நாடு முன்பை விட 13 மடங்கு அதிக எச்.எல்.பி (உயர் திறன் லோகோமோடிவ்) பெட்டிகளை உற்பத்தி செய்கிறது.
நண்பர்களே,
ஒவ்வொரு குழந்தையும், முதியவர்களும், நாட்டில் உள்ள அனைவரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நமது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, நமது மூவர்ணக் கொடி மற்றும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நேரம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்ற வேண்டும். ஒவ்வொரு வீடு, இதயம், மனம், நோக்கம், கனவு மற்றும் தீர்மானம் ஆகியவை மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட வேண்டும்.
இந்த புரட்சிகர மாதத்தில், புதிய தீர்மானங்களுடன், 2047 ஆம் ஆண்டில், நாடு 100 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, ஒரு குடிமகனாக, இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்கான எனது பொறுப்புகளை நான் முழு மனதுடன் நிறைவேற்றுவேன். இந்த அர்ப்பணிப்புடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!