பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, எனது அமைச்சரவை தோழர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மண்ணின் மைந்தரும், எனது தோழருமான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! புரட்சியாளர்களின் பூமியான தெலங்கானாவை வணங்குகிறேன்.
சற்று நேரத்திற்கு முன்பு செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தேன். இந்த நவீன ரயில், பாக்கியலட்சுமி கோயிலையும், வெங்கடேசப்பெருமாள் உறைவிடத்தையும் இணைக்கிறது. இந்த ரயில் சேவை ஆன்மீக நம்பிக்கை, நவீனத்துவம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாவை வெற்றிகரமாக இணைக்கிறது.
தெலங்கானா மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அம்மாநிலத்தில் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவது மத்திய அரசின் கடமை. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற வரிகளின் உத்வேகம் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாதிரியாக தெலங்கானா மாநிலத்தை மாற்றுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் 70 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் சேவைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதுடன், ஹைதராபாத்தின் வளர்ச்சிக்காக பன்முனைய போக்குவரத்து சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ஐதராபாத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பலனடைவதுடன், செகந்திராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் புதிய தொழில் மையங்களும், முதலீட்டுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்த வேளையிலும், இரு நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் இந்த வேளையிலும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சாதனை அளவில் முதலீடு செய்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தாண்டு பட்ஜெட்டில் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெலங்கானா மாநில ரயில்வே பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 17 மடங்கு அதிகரித்துள்ளது. புதிய ரயில் பாதைகள், இரட்டை ரயில்பாதைகள், ரயில்வே மின்மயமாக்கல் ஆகிய பணிகள் குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு, செகந்திராபாத் - மெகபூபாநகர் மின்மயமாக்கல் திட்டம் பிரதான உதாரணம் ஆகும். இதன் மூலம் ஐதராபாத் மற்றும் பெங்களூரு இடையேயான சாலை இணைப்பு மேம்படும். நாட்டில் முதன்மை ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் முயற்சிகளின் ஒருபகுதியாக, செகந்திராபாத் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
தெலங்கானாவின் நெடுஞ்சாலை இணைப்புத் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன. இன்றைக்கு நான்கு ரயில்வே நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அக்கல்காட்-கர்னூல் நெடுஞ்சாலை திட்டம் ரூ.2,300 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. மெகபூப் நகர் - சின்சோலி நெடுஞ்சாலை பணிகள் ரூ. 1,300 கோடியிலும், கல்வாகுர்த்தி- கோலாப்பூர் நெடுஞ்சாலைப் பணிகள் ரூ. 900 கோடியிலும், கம்மம் -தேவரப்பல்லி சாலை இணைப்புப் பணிகள் ரூ.2,700 கோடியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெலங்கானாவில் நவீன நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு 2,500 கிலோ மீட்டராக இருந்த தெலங்கானா தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம், இன்றைக்கு 5000 கிலோ மீட்டர் அளவுக்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஐதராபாத் வட்டச்சாலை உள்ளிட்ட ரூ. 60,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் தொழில் மற்றும் வேளாண் துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜவுளி துறையானது விவசாயிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் ஆதாரமாக திகழ்கிறது. நாடு முழுவதிலும் 7 மிகப்பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் தெலங்கானா மாநிலமும் ஒன்றாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பிபிநகரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தெலங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது. இன்றைய திட்டங்கள், பயணம் மேற்கொள்வதை எளிதாக்கி, வாழ்க்கை முறையை எளிதாக்கி, தெலங்கானாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குகிறது. மாநில அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் மத்திய அரசு திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நிறைவேறாமல் போகிறது. இதன் விளைவாக தெலங்கானா மாநில மக்களுக்குத்தான் இழப்பு ஏற்படுகிறது. வளர்ச்சித் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் காலதாமதங்களை மாநில அரசு சரிசெய்து, துரிதப்படுத்த வேண்டும்.
மக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. வளர்ச்சித் தொடர்பான நடவடிக்கைகளை கண்டு ஒரு சிலர் போராட ஆரம்பித்துவிடுகின்றனர். வாரிசு அரசியல் செய்பவர்களும், ஊழலை ஊக்குவிப்பவர்களும் நாட்டு நலனிலும், சமூக நல்வாழ்விலும் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் நேர்மையாக பணியாற்றுபவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திலும், முதலீட்டிலும் தங்கள் குடும்ப நலனை மட்டும் அவர்கள் கருத்தில் கொள்கின்றனர்.
எப்பொழுதெல்லாம் வாரிசு அரசியல் நடைபெறுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஊழல் அங்கு வளர ஆரம்பித்துவிடுகிறது. இதுவே ஊழலுக்கும், வாரிசு அரசியல் செய்பவர்களுக்கும் உள்ள ஒற்றுமையாகும். குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கட்டுப்பாடுகள் முக்கியத்துவமாக அமைகிறது. வாரிசு அரசியலை ஊக்குவிப்பவர்கள் அனைத்து அமைப்புகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புகிறார்கள். அந்தக் கட்டுப்பாட்டை யாராவது எதிர்த்துக் கேட்கும் பொழுது வெறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். நேரடி/ பணப் பரிமாற்றத் திட்டம் மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிப்பது போன்றவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது வாரிசு அரசியல் செய்பவர்கள் அதனை தடுத்து எந்த பயனாளிக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு விரும்புகின்றனர். அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக அந்த குறிப்பிட்ட குடும்பத்தை தொடர்ந்துப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக ஊழல் மூலம் வந்த பணம் அந்த குடும்பத்திற்கே வந்து சேர வேண்டும். மூன்றாவதாக ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் பணம் ஊழல் செய்பவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதுவே ஊழலின் ஆணிவேராக இருக்கின்றது. மத்திய அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் மூலம், அவர்கள் கோபம் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக நீதிமன்றங்களை அணுகுகின்றனர். ஆனால் அங்கும் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. நமது அரசியல் அமைப்பின் மைய உணர்வானது அனைவரும் உயர்வோம் என்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டு இருப்பதன் மூலம் ஜனநாயக மாண்பு வலுப்பெறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் வாரிசு அரசியலுக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி மத்திய அரசு மீண்டு வந்ததை ஒட்டுமொத்த நாடே உற்றுநோக்கியது. கடந்த 9 ஆண்டுகால கட்டத்தில் நம் நாட்டின் 11 கோடி தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் கழிப்பறை வசதி பெற்றனர். அதில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 30 லட்ச குடும்பங்களும் அடங்கும். நம் நாட்டின் 9 கோடி சகோதரிகளும், மகள்களும் இலவச உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர். இதில் கடந்த 9 ஆண்டுகளில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 11 லட்ச ஏழை, எளிய குடும்பங்களும் அடங்கும்.
இன்று 80 கோடி ஏழை மக்கள் இலவச ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 1 கோடி குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் முதன்முறையாக ஜன் தன் வங்கி கணக்கை ஆரம்பித்துள்ளனர். உத்தரவாதமின்றி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2.50 லட்சம் சிறு தொழில் முனைவோர்கள் பயனடைந்துள்ளனர். 5 லட்சம் தெருவோர வியாபாரிகள் முதல்முறையாக வங்கி கடன்களை பெற்றுள்ளனர். பிரதமரின் விவசாயி வருவாய் ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 40 லட்சம் சிறு விவசாயிகள் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளனர்.
எப்பொழுது நாடு ஒரு சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, அனைவரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் செயல்படும் பொழுதுதான் உண்மையான சமூக நீதி நிலைத்திருக்கும். ஒட்டுமொத்த நாடும், தெலங்கானா மாநிலமும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற பாதையில் பயணித்து அனைவரும் முயற்சிப்போம் என்ற நிலைபாட்டோடு வளர்ச்சி நோக்கி பயணிக்கிறது. சுதந்திர இந்தியாவின் விடுதலை பெருவிழா அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு தெலங்கானா மாநிலத்தின் வேகமான வளர்ச்சி முக்கியப் பங்காற்றும்.
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
அனைவருக்கும் நன்றி!