வணக்கம்!
சமூக நீதித் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்களே, நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உள்ள இருக்கும் அரசுத் திட்டங்களின் பயனாளிகளே, நமது துப்புரவுப் பணியாளர் சகோதர சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! நாட்டின் 470 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நலனை நோக்கிய திசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை நாடு காண்கிறது. விளிம்புநிலை மக்கள் முன்னுரிமை உணர்வையும், பணி எவ்வாறு செய்யப்படுகிறது என்பதையும் உணரும்போது, அது இந்த நிகழ்வில் நிரூபிக்கப்படுகிறது. இன்று, 720 கோடி ரூபாய் நிதி உதவி விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் மட்டுமே ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வந்து சேரும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இது மோடியின் அரசு! ஏழைகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்கிறது! சூரஜ் என்ற இணைய தளத்தையும் நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம், இப்போது விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேரடி நிதி உதவி வழங்க முடியும். அதாவது, பல்வேறு திட்டங்களுக்கான பணத்தைப் போலவே, இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவியும் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கை வந்தடையும். இடைத்தரகர்கள் இல்லை, கமிஷன்கள் இல்லை, பரிந்துரைகளுக்காக அலைய வேண்டிய அவசியமில்லை!
இன்று, கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு தனிநபர் சுகாதாரத்தை பேணிக் காப்பதற்கான பிபிஇ கிட்கள் மற்றும் ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இப்போது 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நன்மை பயக்கும் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக எஸ்சி-எஸ்டி, ஓபிசி மற்றும் பிற நலிவடைந்த சமூகங்களைச் சேர்ந்தோருக்கு அரசு மேற்கொண்டு வரும் சேவையின் நீட்டிப்பாகும். இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும், நாடு முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
சிறிது நேரத்திற்கு முன்பு, சில பயனாளிகளுடன் பேசும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அரசின் திட்டங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தோர், விளிம்புநிலை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை சென்றடையும் விதம், இந்தத் திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாற்றியமைக்கப்படுகிறது என்பது மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது. நான் உங்களைப் போன்றவர்களில் ஒருவர் தான்; என் குடும்பத்தை உங்களில் காண்கிறேன். எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்னை அவமதிக்கும்போது, மோடிக்கு குடும்பம் இல்லை என்று அவர்கள் கூறும்போது, என் நினைவுக்கு வரும் முதல் விஷயம் நீங்கள் அனைவரும்தான். உங்களைப் போன்ற சகோதர சகோதரிகள் இருக்கும்போது எனக்கு குடும்பம் இல்லை என்று ஒருவர் எப்படி சொல்ல முடியும்? லட்சக்கணக்கான பட்டியல் இனத்தவர்கள், விளிம்பு நிலை மக்கள், நாட்டு மக்கள் என் குடும்பமாக உள்ளனர். "நான் மோடியின் குடும்பம்" என்று நீங்கள் கூறும்போது நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம், அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். பல தசாப்தங்களாக விளிம்பு நிலையில் இருந்த வர்க்கத்தின் வளர்ச்சி இல்லாமல் பாரதம் வளர முடியாது. நாட்டின் வளர்ச்சியில் விளிம்பு நிலை மக்களின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் அரசுகள் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை; அவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. நலிவடைந்தவர்களுக்கு எப்போதுமே காங்கிரசால் வசதிகள் மறுக்கப்பட்டு வந்தன. நாட்டில் லட்சக் கணக்கான மக்கள் விதிவசத்தால் தனித்து விடப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, இந்தத் திட்டங்கள், இந்த நன்மைகள், இந்த வாழ்க்கை அவர்களுக்கானது என்ற சூழல் உருவாக்கப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை, எப்படியும் இத்தகைய கஷ்டங்களுடன் வாழ வேண்டும்; இந்த மனநிலை மேலோங்கி இருந்ததால், அரசுகள் மீது எந்தப் புகாரும் இல்லை. அந்த மனத் தடையை நான் உடைத்தெறிந்துவிட்டேன். இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் கேஸ் அடுப்பு இருக்கிறது என்றால், விளிம்பு நிலை மக்களின் வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கும். வசதி படைத்த குடும்பங்களுக்கு வங்கிக் கணக்குகள் இருந்தால், ஏழைகள், பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கும்.
நண்பர்களே,
இந்த வகுப்பின் பல தலைமுறையினர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அடிப்படை வசதிகளை மட்டுமே அணுகுவதில் கழித்தனர். 2014-ல் எங்கள் அரசு 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தொலைநோக்குடன் பணியாற்றத் தொடங்கியது. அரசின் மீது நம்பிக்கை இழந்தவர்களை, அரசு அணுகி, நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுப்பாளர்களாக ஆக்கியது.
நண்பர்களே, கடந்த காலத்தில் ரேஷன் கடையில் ரேஷன் பெறுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கஷ்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? இத்தகைய சிரமங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் நமது பட்டியல் இனத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளாகவோ, அல்லது நமது பிற்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகளாகவோ அல்லது நமது பிற்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகளாகவோ அல்லது நமது பழங்குடியின சகோதர சகோதரிகளாகவோ இருக்கின்றனர். இன்று, 80 கோடி ஏழை மக்களுக்கு நாங்கள் இலவச ரேஷன் பொருட்களை வழங்கும்போது, விளிம்புநிலையில் உள்ளவர்கள், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான் மிகப்பெரிய பயனாளிகள்.
இன்று, 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கு நாம் உத்தரவாதம் அளிக்கும்போது, அதே சகோதர சகோதரிகளின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன, மேலும் இந்த பணம் கடினமான காலங்களில் உதவியாக உள்ளது. சேரிகள், குடிசைகள் மற்றும் திறந்தவெளிகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி மற்றும் பின்தங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது, ஏனெனில் கடந்த காலத்தில் இந்த மக்கள் மீது யாரும் அக்கறை காட்டவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில், மோடி ஏழைகளுக்காக லட்சக் கணக்கான உறுதியான வீடுகளைக் கட்டியுள்ளார். மோடி லட்சக்கணக்கான வீடுகளில் கழிப்பறைகளை கட்டியுள்ளார். எந்தக் குடும்பங்கள் யாருடைய தாய்மார்களும், சகோதரிகளும் மலம் கழிப்பதற்காக திறந்தவெளியில் செல்ல வேண்டியிருந்தது? இந்த வலியால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த சமூகம்தான். நமது பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை குடும்பங்களின் பெண்கள்தான் இதை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இன்று, அவர்களுக்கு கழிப்பறைகள் கிடைத்துள்ளன; அவர்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது.
நண்பர்களே,
இதற்கு முன்பு யாருடைய வீடுகளில் எரிவாயு அடுப்புகள் காணப்பட்டன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எரிவாயு அடுப்பு இல்லாதவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். உஜ்வாலா திட்டத்தை மோடி தொடங்கி வைத்து இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினார். மோடி கொடுத்த இந்த இலவச எரிவாயு இணைப்புகளால் யார் பயனடைந்தார்கள்? விளிம்பு நிலையில் இருந்த எனது சகோதர சகோதரிகள் அனைவரும் பயனடைந்துள்ளனர். இன்று, எனது விளிம்புநிலை சமூகத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கூட விறகு அடுப்பில் சமைப்பதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்தத் திட்டங்களில் 100 சதவீதத்தை எட்ட நாங்கள் பணியாற்றி வருகிறோம். நூறு பேரும் பயனடைய வேண்டும் என்றால், நூறு பேரும் உண்மையில் பயனடைய வேண்டும்.
நாட்டில் ஏராளமான நாடோடி மற்றும் அரை நாடோடி சமூகங்களும் உள்ளன, மேலும் அவர்களின் நலனுக்காகவும் பல திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை திட்டம் எனும் நமாஸ்தே திட்டத்தின் மூலம் நமது துப்புரவு பணியாளர் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற முறையில் கழிவுகளை அகற்றும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். இந்த கஷ்டத்தை அனுபவிப்பவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கைக்கான ஏற்பாடுகளையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 60,000 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
எஸ்சி-எஸ்டி, ஓபிசி மற்றும் நலிவடைந்த சமூகங்களை மேம்படுத்த எங்கள் அரசு அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகளால் விளிம்புநிலை சமூகங்களுக்கு வழங்கப்படும் உதவி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், ஆதிதிராவிட சமூகத்தின் நலனுக்காக சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த அரசில் லட்சக்கணக்கான ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக மட்டுமே கேள்விப்பட்டது. எங்கள் அரசு இந்த நிதியை பட்டியல் இனத்தவர்கள், விளிம்பு நிலையில் உள்ள சமூகங்களின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் செலவிடுகிறது.
எஸ்சி-எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, எங்கள் அரசு அமல்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழி வகுத்துள்ளோம். வெளிநாடுகளில் முதுகலை மற்றும் பிஎச்டி பட்டங்களைத் தொடர விரும்பும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தேசிய வெளிநாட்டு உதவித்தொகை மூலம் உதவி வழங்கப்படுகிறது.
அறிவியல் தொடர்பான பாடங்களில் பிஎச்டி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க தேசிய பெல்லோஷிப்பின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்களது முயற்சிகள் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்க வழிவகுத்தது என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பாபாசாஹேப் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 'பஞ்சதீர்த்த' (ஐந்து புனித யாத்திரைத் தலங்கள்) வளர்ச்சிக்கு பங்களிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை நாங்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகிறோம்.
நண்பர்களே,
பாஜக அரசு விளிம்புநிலை சமூகங்களின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. எங்கள் அரசின் முத்ரா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயனாளிகளில் பெரும்பாலோர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவித்துள்ளது. இந்த குழுமம் எங்கள் துணிகர மூலதன நிதி திட்டத்தின் மூலம் உதவியையும் பெற்றுள்ளது. பட்டியல் இனத்தவர்களிடையே தொழில்முனைவை மனதில் கொண்டு, எங்கள் அரசு அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு மற்றும் அடைகாப்பு இயக்கத்தையும் தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
ஏழைகளுக்கான எங்கள் அரசின் நலத்திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகள் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர், ஓபிசிக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புகளில் உள்ளவர்கள். இருப்பினும், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் சேவைக்காக மோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதெல்லாம், இந்திய கூட்டணியுடன் தொடர்புடையவர்கள் மிகவும் கிளர்ந்தெழுவார்கள். பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை எளிதாக இருப்பதை காங்கிரஸில் உள்ளவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அவர்கள் உங்களை அவர்களைச் சார்ந்து வைத்திருக்க விரும்புகிறார்கள்.
உங்களுக்காக கழிப்பறை கட்டும் யோசனையை அவர்கள் கேலி செய்தனர். ஜன் தன் யோஜனா, உஜ்வாலா யோஜனா ஆகியவற்றை அவர்கள் எதிர்த்தனர். மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் இன்று வரை பல திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்து வருகின்றன. பட்டியல் இனத்தவர்கள், விளிம்பு நிலை மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இந்த சமூகங்கள் மற்றும் அவர்களின் இளைஞர்கள் அனைவரும் முன்னேறினால், அவர்களின் குடும்பத்தோடு தொடர்புடைய வாரிசு அரசியலின் கடை மூடப்படும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
இவர்கள் சமூக நீதிக்காக போராடுவதாகக் கூறிக் கொண்டாலும், சமூகத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்தும் பணியில் ஈடுபட்டாலும், உண்மையான சமூக நீதியை எதிர்க்கிறார்கள். அவர்களின் சாதனைப் பதிவைப் பாருங்கள்; டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை எதிர்த்தது காங்கிரஸ்தான். லோகியாவையும், மண்டல் கமிஷனையும் வி.பி.சிங்கையும் எதிர்த்தனர். அவர்கள் தொடர்ந்து கர்பூரி தாக்கூரையும் அவமதித்தனர். நாங்கள் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியபோது, இந்திய கூட்டணியினர் அதை எதிர்த்தனர். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கி வந்தனர், ஆனால் பல தசாப்தங்களாக டாக்டர் பாபாசாகேப்பை அதைப் பெற அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. பாஜக ஆதரவு பெற்ற அரசுதான் அவருக்கு இந்த கௌரவத்தை வழங்கியது.
ராம்நாத் கோவிந்த் போன்ற பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்களும், திரௌபதி முர்மு போன்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குடியரசுத் தலைவராவதை இவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. தேர்தலில் அவர்களை தோற்கடிக்க இந்தியக் கூட்டணி உறுப்பினர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை அடைவதை உறுதி செய்வதற்கான பாஜகவின் முயற்சிகள் தொடரும். விளிம்புநிலை மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இது சான்றாகும்.
விளிம்புநிலை மக்களின் வளர்ச்சி மற்றும் கண்ணியத்திற்கான பிரச்சாரம் வரும் ஐந்தாண்டுகளில் இன்னும் வேகமாக இருக்கும் என்பதற்கு மோடி இந்த உத்தரவாதத்தை அளிக்கிறார். உங்கள் வளர்ச்சியுடன், வளர்ந்த இந்தியா என்ற கனவை நாங்கள் நிறைவேற்றுவோம். இத்தனை இடங்களில் காணொலி காட்சி மூலம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை சந்திப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி.