ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தா அவர்களுக்கு நமஸ்காரங்கள். தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, சென்னை இராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள் எனது அருமை தமிழ்நாட்டு மக்கள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நண்பர்களே, உங்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. இராமகிருஷ்ணா மடம், நான் அதிக மரியாதையளிக்கும் இடமாகும். எனது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மடம் 125 ஆண்டுகளாக சென்னையில் சேவை புரிந்து வருவதை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு நடந்து வருகிறது. எனது மகிழ்ச்சிக்கு இது இரண்டாவது காரணமாக அமைகிறது. நான் அதிகம் அன்பு செலுத்தும் தமிழ்நாட்டு மக்களோடு இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தமிழ்மொழி, கலாச்சாரம், உணர்வு ஆகியவற்றிற்கு நான் அதிக அன்பு செலுத்துகிறேன். இன்று விவேகானந்தர் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளேன். தனது பிரபலமான மேற்கத்திய நாட்டுப் பயணத்தை முடித்து திரும்பிய சுவாமி விவேகானந்தா அவர்கள் இங்கு தங்கியிருந்தார். இங்கு தியானம் செய்வது ஒரு மிகப்பெரிய அனுபவம். தற்போது நான் ஊக்கமும், ஆற்றலும் பெற்றுள்ளதாக உணர்கிறேன். தொழில்நுட்பம் மூலம் தொன்மையான சிந்தனைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
திருவள்ளுவர் தனது ஒரு குறட்பாவில்,
“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற”
இதற்கு அர்த்தம்: இந்த உலகிலும், கடவுள்கள் வாழும் உலகிலும் அன்புக்கு ஈடு இணைக்கு இல்லை. தமிழ்நாட்டில் கல்வி, நூலகங்கள், புத்தக நிலையங்கள், தொழுநோய் விழிப்புணர்வு, சுகாதார, செவிலியர் சேவை, ஊரக மேம்பாடு போன்றவற்றில் இராமகிருஷ்ணா மடம் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.
நண்பர்களே,
தமிழ்நாட்டில் இராமகிருஷ்ணா மடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி கூறினேன். ஆனால் அது பின்னாளில் நடந்தது. சுவாமி விவேகானந்தர் தமிழ்நாட்டிற்கு வந்ததன் தாக்கமே முதன்மையாகிறது. கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பாறையில் தவம் மேற்கொண்ட பின்னர் விவேகானந்தர் தமது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொண்டார். அதன் தாக்கம் சிகாகோவில் எதிரொலித்தது. விவேகானந்தர் முதலில் இந்த தமிழ்நாட்டு புண்ணிய பூமியில் நடந்தே பயணம் மேற்கொண்டார். இராமநாதபுரம் மன்னர் அவரை மரியாதையுடன் வரவேற்றார். நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு எழுத்தாளர் ரொமைன் ரோலர் இதை விவரித்துள்ளார். 17 வெற்றி வளைவுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஒருவார காலத்திற்கு ஸ்தம்பித்தது. அது ஒரு திருவிழாவாக இருந்தது.
நண்பர்களே,
சுவாமி விவேகானந்தர் வங்காளத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் ஒரு நாயகனுக்கான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே இது நிகழ்ந்துள்ளது. ஆயிரகணக்கான ஆண்டுகளாக இந்தியா குறித்த தெளிவான கருத்து நாட்டு மக்களிடையேயிருந்தது. அதாவது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன் மக்கள் இருந்திருக்கின்றனர். இராமகிருஷ்ணா மடமும் இதே உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்கி மக்களுக்கு தன்னலமின்றி தொண்டாற்றி வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதைப் பற்றி பேசும் பொழுது, நாம் அனைவரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் வெற்றியை உணர்ந்தோம். தற்போது சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கான அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான். தனியுரிமைகள் எங்கெல்லாம் உடைக்கப்பட்டு சமத்துவம் உறுதி செய்யப்படுகிறதோ அங்க சமுதாயம் முன்னேறும். இதே நோக்கத்துடன் தான் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. முன்பெல்லாம் அடிப்படை வசதிகளே தனிப்பட்ட உரிமைகளாக கருதப்பட்டன. பலருக்கு வளர்ச்சியின் பலன் மறுக்கப்பட்டது. ஒரு சிலருக்கோ அல்லது சிறு குழுக்களுக்கோ அந்த வசதிகள் கிடைத்தன. ஆனால் இப்பொழுது ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. மிக வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான முத்ரா திட்டம் இன்று தனது 8வது ஆண்டை கொண்டாடுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு தொழில் முனைவோர் இந்த மாநிலத்தை திட்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 38 கோடி உத்தரவாதமற்ற கடன்கள் சிறு தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது. இதில் பெரும் பகுதியினர் பெண்களாகவும், விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். முன்பு தொழில் செய்வதற்கு வங்கிக் கடன் பெறுவது தனியுரிமையாக இருந்தது. தற்போது அது எளிதாகியுள்ளது. வீடு, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்புகள், கழிவறைகள், போன்ற அடிப்படை வசதிகள் ஒவ்வொரு குடும்பத்தையும் இப்போது சென்றடைந்துள்ளது.
நண்பர்களே,
இந்தியா குறித்து மிகச் சிறந்த பார்வை சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு உண்டு. இன்று அவருடைய நோக்கம் முழுமை பெறுவதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பெருமையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார். நம்மிடமும், நமது நாட்டின் மீதும் நம்பிக்கைக் கொள்வதும் தான் அவருடைய முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு இந்தியரும் இந்தத் தருணம் நமக்கானது தான் என்று உணரும் நிலையில், இந்த காலகட்டம் இந்தியாவிற்கு சாதகமான நூற்றாண்டு என்பது பல்வேறு நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனும், ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் நிலையிலிருந்து நாம் உலகத்தோடு இணைந்து செல்கிறோம். பெண்களுக்கு சரியான அடித்தளம் அமையுமானால் நாம் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிலை இல்லை. பெண்கள் சமூக கட்டமைப்பில் தலைமை ஏற்று அவர்களாகவே, அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வர். இன்றைய இந்தியா, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகட்டும், விளையாட்டுத் துறை ஆகட்டும், ஆயுதப்படையாகட்டும், உயர்கல்வியாகட்டும், பெண்கள் தடைகளைத் தகர்த்து சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் விளையாட்டு மற்றும் உடல் தகுதி மூலமாகவே ஒருவருடைய பண்புகள் மேம்பாடு அடையும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். விளையாட்டுத் துறை என்பது பாடத்திட்டம் அல்லாத ஒரு செயல்பாடு என்ற நிலையிலிருந்து தற்போது பணிசார்ந்த தேர்வாக இருக்கின்றது. யோகா மற்றும் ஃபிட் இந்தியா போன்றவைகள் மிகப் பெரிய இயக்கமாக தற்போது மாறியுள்ளது. கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்தியாவுக்கு கொண்டுவர முடிகிறது. அதிகாரமளிப்பதற்கு கல்வி மற்றும் தொழில்நுட்ப, அறிவியல்பூர்வமான கல்வியின் தேவையும் அவசியம் என்று சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை கொண்டிருந்தார். இன்று திறன் மேம்பாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. உலகளவில் மிகவும் சிறந்த வலிமையான தொழில்நுட்ப, அறிவியல் பூர்வமான சூழ்நிலை தற்போது நிலவுகிறது.
நண்பர்களே,
தமிழ்நாட்டில் வைத்துதான் சுவாமி விவேகானந்தர், இன்றைய இந்தியாவிற்கான முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். ஐந்து உட்கருத்துக்களை உட்கிரகித்து வாழ்க்கையை முழுமையாக வாழ்வது மிகவும் ஆற்றல் மிக்கது. சுதந்திரமடைந்து 75 வது ஆண்டை கொண்டாடி வரும் இந்த வேளையில் விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்திற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கம், செயல்பாடு மற்றும் பயணத்தை நோக்கி நமது தேசம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த அமிர்த காலத்தில் மிகப்பெரிய அளவில் சாதனைகளைப் புரிவதற்கு 'பஞ்சபிரான்' (ஐந்து உட்கருத்துகளை) பின்பற்ற வேண்டும். அதாவது வளர்ந்த இந்தியாவின் பெரிய தீர்மானங்கள் மற்றும் உறுதியுடன் முன்னேறி, அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் அழித்து, நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொண்டு, நமது ஒற்றுமையின் வலிமை மற்றும் குடிமக்களின் கடமைகள் போன்றவைகள் அதிமுக்கியமாகும். இறுதியாக அனைவரும் ஒருங்கிணைந்து தனித்துவத்துடன் இந்த ஐந்து கொள்கைகளைப் பின்பற்ற உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் இந்த உறுதிப்பாட்டை கொண்டிருந்தால் நம்மால் வளர்ந்த, தற்சார்பு மிக்க மற்றும் முழுமையான இந்தியாவை உருவாக்க முடியும். இந்த இயக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் ஆசிர்வாதங்கள் உண்டு என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!