அனைவருக்கும் வணக்கம்! ஜனவரி 22-ஆம் தேதி நடக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அயோத்திவாசிகளிடையே உற்சாகமும், மகிழ்ச்சியும் எழுவது மிகவும் இயல்பானது. உங்களைப் போலவே நானும் உற்சாகமாக இருக்கிறேன்.
உத்தரப் பிரதேச ஆளுநர் திருமிகு ஆனந்திபென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், அமைச்சரவை நண்பர்கள் திரு ஜோதிராதித்யா, திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் திரு வி.கே.சிங், உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் திரு பிரஜேஷ் பதக், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
டிசம்பர் 30, நாட்டில் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். 1943-ஆம் ஆண்டு இதே நாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்தமானில் கொடியேற்றி பாரதத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். சுதந்திர இயக்கத்துடன் தொடர்புடைய இந்தப் புனித நாளில், சுதந்திரத்தின் 'அமிர்த கால’ உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று, அயோத்தி ஒரு ' வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான' முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் பிரச்சாரத்தில் புதிய ஆற்றலைப் புகுத்துகிறது. 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக அயோத்தியில் வசிக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே,
உலகின் எந்தவொரு நாடும் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைய விரும்பினால், அதன் பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும். நமது பாரம்பரியம் நமக்கு உத்வேகம் அளிப்பதுடன், சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது. எனவே, பழமை மற்றும் நவீனம் இரண்டையும் தழுவி, இன்றைய பாரதம் முன்னேறி வருகிறது. இன்று, பாரதம் தனது புனித தலங்களை அழகுபடுத்தும் அதே வேளையில், நமது நாடு டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் பிரகாசித்து வருகிறது. இன்று, இங்கு முன்னேற்றத்தின் கொண்டாட்டம் உள்ளது, இன்னும் சில நாட்களில், பாரம்பரியத்தின் கொண்டாட்டமும் இருக்கும். இன்று, வளர்ச்சியின் பிரம்மாண்டம் இங்கு தெரிகிறது, இன்னும் சில நாட்களில், பாரம்பரியத்தின் கம்பீரமும் தெய்வீகமும் தெரியும். இதுதான் பாரதம். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் பகிரப்பட்ட வலிமை 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை முன்னோக்கி இட்டுச் செல்லும்.
இன்று, திறந்து வைக்கப்பட்ட அயோத்தி விமான நிலையத்திற்கு வால்மீகி மகரிஷியின் பெயர் சூட்டப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராமாயண காவியத்தின் மூலம் ராமரின் நற்பண்புகளை வால்மீகி மகரிஷி நமக்கு அறிமுகப்படுத்தினார். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது. இரண்டாம் கட்டம் முடிந்ததும், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பயணிகளுக்கு இடமளிக்கும். தற்போது, அயோத்தி தாம் ரயில் நிலையம் தினசரி 10-15 ஆயிரம் மக்களுக்கு சேவை செய்கிறது. நிலையத்தின் முழுமையான வளர்ச்சிக்குப் பிறகு, அயோத்தி தாம் ரயில் நிலையத்தால் ஒவ்வொரு நாளும் 60,000 மக்களுக்கு சேவை செய்ய முடியும்.
என் குடும்ப உறுப்பினர்களே,
இன்று, வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களைத் தொடர்ந்து அமிர்த பாரத் விரைவு ரயில் என்ற புதிய ரயில் தொடரை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரயில்வேயை நவீனமயமாக்குவதில் நாடு மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்த உள்ளன. முதல் அமிர்த பாரத் விரைவு ரயில் அயோத்தி வழியாகச் செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நவீன ரயில்கள் குறிப்பாக நம் ஏழைக் குடும்பங்கள் மற்றும் சக தொழிலாளர்களுக்கு உதவும். ஒரு ஏழையின் வாழ்க்கையின் கண்ணியம் சம அளவு முக்கியம் என்ற கொள்கையுடன் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது, நாடு முழுவதும் 34 வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் காசி, வைஷ்ணவ தேவி கத்ரா, உஜ்ஜைனி, புஷ்கர், திருப்பதி, ஷீரடி, அமிர்தசரஸ், மதுரை மற்றும் பல புனிதத் தலங்களை இணைக்கின்றன. இந்த வரிசையில், இன்று அயோத்தி வந்தே பாரத் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
நண்பர்களே,
நாட்டிற்காக ஒரு புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும், புதிய ஆற்றலை நிரப்ப வேண்டும். இதற்காக, புனித பூமியான அயோத்தியில் இருந்து 140 கோடி நாட்டு மக்களுக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது, உங்கள் வீடுகளில் ராமரின் தெய்வீக விளக்கை ஏற்றித் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று 140 கோடி நாட்டு மக்களுடன் கைகோர்த்து அயோத்தியில் உள்ள ராமர் நகரத்திலிருந்து நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜனவரி 22-ஆம் தேதி மாலை, நாடு முழுவதும் பிரகாசமாக இருக்க வேண்டும். ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு நேரில் வந்து நிகழ்வைக் காண அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வர முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அயோத்தியை அடைவது அனைவருக்கும் மிகவும் கடினம், எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து ராம பக்தர்களையும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் ராம பக்தர்களை நான் கைகூப்பி பிரார்த்திக்கிறேன். எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் உங்கள் வசதிக்கேற்ப ஜனவரி 23 க்குப் பிறகு அயோத்திக்கு வர வேண்டும். 22-ஆம் தேதி அயோத்திக்கு வரத் திட்டமிட வேண்டாம்.
மோடி ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அதை நிறைவேற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். மோடியின் உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கை இன்று நாட்டில் உள்ளது, ஏனென்றால் மோடி ஒரு உத்தரவாதத்தை வழங்கும்போது, அதை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் உழைக்கிறார். இந்த அயோத்தி நகரமும் அதற்கு ஒரு சாட்சி. பகவான் ராமர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
மோடி ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அதை நிறைவேற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். மோடியின் உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கை இன்று நாட்டில் உள்ளது, ஏனென்றால் மோடி ஒரு உத்தரவாதத்தை வழங்கும்போது, அதை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் உழைக்கிறார். இந்த அயோத்தி நகரமும் அதற்கு ஒரு சாட்சி. பகவான் ராமர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
மிகவும் நன்றி.