மேதகு பெருமக்களே, தாய்மார்களே, அன்பர்களே வணக்கம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் துடிப்பான இந்தூருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இது அதன் வளமான சமையல் பாரம்பரியங்களில் பெருமை கொள்ளும் ஒரு நகரமாகும். இந்த நகரத்தை அதன் அனைத்து வண்ணங்களிலும், சுவைகளிலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நண்பர்களே,
உங்கள் குழு மிக முக்கியமான பொருளாதார மற்றும் சமூக காரணிகளில் ஒன்றான வேலைவாய்ப்பு பற்றி விவாதிக்கிறது. வேலைவாய்ப்புத் துறையில் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். மேலும், இந்த விரைவான மாற்றங்களை நிவர்த்தி செய்ய பொறுப்புள்ள மற்றும் பயனுள்ள உத்திகளை நாம் தயாரிக்க வேண்டும். நான்காம் தொழிற்புரட்சியின் இந்த சகாப்தத்தில், தொழில்நுட்பம் வேலைவாய்ப்புக்கான முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது. கடந்த முறை இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தின் போது அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கிய அனுபவத்தைக் கொண்ட ஒரு நாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவது அதிர்ஷ்டம். இந்தக் கூட்டத்தை நடத்தும் இந்தூர் நகரம் இதுபோன்ற மாற்றங்களின் புதிய அலையை வழிநடத்தும் பல புத்தொழில்களின் தாயகமாகும்.
நண்பர்களே,
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதில் நாம் அனைவரும் நமது பணியாளர்களை திறமைப்படுத்த வேண்டும். திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை எதிர்கால தொழிலாளர்களின் மந்திரங்களாகும். இந்தியாவில், நமது 'திறன் இந்தியா இயக்கம்' இந்த யதார்த்தத்துடன் இணைவதற்கான ஒரு பிரச்சாரமாகும். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை 12.5 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், இணையம் சார்ந்த சாதனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற தொழில்துறை 'நான்கு புள்ளி பூஜ்ஜியம்' துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
நண்பர்களே,
கொரோனா காலத்தில் இந்தியாவில் முன்கள சுகாதாரம் மற்றும் பிற பணியாளர்கள் செய்த அற்புதமான பணிகள் அவர்களின் திறன்களையும் அர்ப்பணிப்பையும் காட்டியது. சேவை மற்றும் இரக்கத்தின் நமது கலாச்சாரத்தையும் அது பிரதிபலித்தது. உண்மையில், இந்தியா உலகிற்கு திறமையான தொழிலாளர்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக மாறும் திறனைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் உலகளவில் ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு யதார்த்தமாக இருக்கும். எனவே, திறன்களின் வளர்ச்சி மற்றும் பகிர்வை உலகமயமாக்க வேண்டிய நேரம் இது. இதில் ஜி20 நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். திறன்கள் மற்றும் தகுதித் தேவைகளின் அடிப்படையில் தொழில்களின் சர்வதேச அங்கீகாரத்திற்கான உங்கள் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் இடம்பெயர்வு மற்றும் இயக்க கூட்டுமுயற்சி ஆகியவற்றின் புதிய மாதிரிகள் தேவைப்படுகின்றன. இந்த முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், தகவல்கள் மற்றும் தரவுகளைப் பகிர்வது, சிறந்த தொடக்கமாக இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிறந்த திறன், தொழிலாளர் திட்டமிடல் மற்றும் இலாபகரமான வேலைவாய்ப்புக்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்க அதிகாரம் அளிக்கும்.
நண்பர்களே,
செயலி சார்ந்த நிரந்தரமற்ற மற்றும் பகுதிநேர வேலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடங்கிய பொருளாதாரத்தில், புதிய வகை தொழிலாளர்களின் பரிணாம வளர்ச்சி மற்றொரு முக்கிய மாற்றமாகும். இது பெருந்தொற்றின் போது மீள்திறனின் தூணாக உருவெடுத்தது. இது நெகிழ்தன்மை வாய்ந்த வேலைகளை வழங்குகிறது மற்றும் வருமான ஆதாரங்களையும் பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு லாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்கும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இது பெண்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு உருமாற்ற கருவியாகவும் இருக்கலாம். அதன் திறனை உணர, இந்த புதிய தலைமுறை தொழிலாளர்களுக்கான புதிய கால கொள்கைகள் மற்றும் தலையீடுகளை நாம் வடிவமைக்க வேண்டும். வழக்கமான மற்றும் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க நிலையான தீர்வுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சமூகப் பாதுகாப்பை அணுகுவதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் நமக்கு புதிய மாதிரிகள் தேவை. இந்தியாவில், இந்த தொழிலாளர்களுக்கான இலக்கு தலையீடுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு 'இஷ்ரம் தளத்தை' நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஓராண்டில், கிட்டத்தட்ட 280 மில்லியன் தொழிலாளர்கள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர். இப்போது, வேலையின் நாடுகடந்த தன்மையுடன், ஒவ்வொரு நாடும் இதேபோன்ற தீர்வுகளை ஏற்றுக்கொள்வது முக்கியம். எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
நண்பர்களே,
மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவது 2030 நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாகும். ஆனால், சர்வதேச அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய கட்டமைப்பானது சில குறுகிய வழிகளில் கட்டமைக்கப்பட்ட நன்மைகளை மட்டுமே கணக்கிடுகிறது. பிற வடிவங்களில் வழங்கப்படும் பல நன்மைகள் இந்த கட்டமைப்பின் கீழ் வராது. உலகளாவிய பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நன்மைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், இதன் மூலம் சமூகப் பாதுகாப்பின் சரியான நிலையை உணர முடியும். ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான பொருளாதார திறன்கள், பலங்கள் மற்றும் சவால்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சமூகப் பாதுகாப்பிற்கான நிலையான நிதியளிப்புக்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவது பொருத்தமானதல்ல. பல்வேறு நாடுகள் மேற்கொண்ட இத்தகைய முயற்சிகளை துல்லியமாக பிரதிபலிக்கும் ஒரு அமைப்பைப் பற்றி சிந்திப்பதில் உங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
மேதகு பெருமக்களே,
இத்துறையில் மிக அவசரமான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உங்கள் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காக நீங்கள் இன்று ஒரு வலுவான செய்தியை அனுப்புவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தக் கூட்டம் ஆக்கப்பூர்வமானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
மிகவும் நன்றி!