மேதகு தலைவர்களே,
வணக்கம்!
இந்த முயற்சியைத் தொடரும் அதிபர் யூன் சுக் இயோலுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு, ஜனநாயக நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஒரு முக்கியமான தளமாக உருவெடுத்துள்ளது.
மேதகு தலைவர்களே,
இன்னும் சில வாரங்களில் பாரதத்தின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை உலகம் காணவிருக்கிறது. சுமார் 100 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மனிதகுல வரலாற்றில் இது மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையாக இருக்கும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவார்கள். இந்தியா ஒரு பழமையான மற்றும் உறுதியான ஜனநாயக கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. ஒருமித்த கருத்தை உருவாக்குதல், திறந்த உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகின்றனர்.
மேதகு தலைவர்களே,
கடந்த பத்தாண்டுகளில், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறியுள்ளது – அதாவது உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டு முயற்சிகள். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய உண்மையான உணர்வுடன் சென்றடைவதே எங்களது முன்னுரிமையாக உள்ளது. பற்றாக்குறை, ஊழல் மற்றும் பாகுபாடு ஆகியவற்றுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட செயல்திறன் அடிப்படையிலான ஆட்சிக்கு நாங்கள் மாறியுள்ளோம். இந்த முயற்சிகளில், தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் விரைவான முன்னேற்றம் பொதுச் சேவை வழங்கலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், நிதி உள்ளடக்கத்தையும் மேம்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியில் சவாரி செய்து, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பாக இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது. அடிமட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான மாற்றத்திற்கான எங்கள் முகவர்களாக உள்ளனர்.
மேதகு தலைவர்களே,
இன்று, இந்தியா தனது 1.4 பில்லியன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருவது மட்டுமல்லாமல், ஜனநாயகம் வழங்கும், ஜனநாயகம் அதிகாரம் அளிக்கும் என்ற நம்பிக்கையையும் உலகிற்கு அளித்து வருகிறது. பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியபோது, அது ஜனநாயக உலகில் உள்ள பெண்களுக்கு நம்பிக்கையை அளித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டபோது, நேர்மறையான மாற்றத்திற்கான முகவராக ஜனநாயகத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கையை அது வலுப்படுத்தியது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா கோவிட் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியபோது, அது ஜனநாயகத்தின் குணப்படுத்தும் சக்தியை பிரதிபலித்தது. சந்திரயான் விண்கலத்தை நிலவில் இந்தியா வெற்றிகரமாக தரையிறக்கியது பாரதத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வெற்றியும் கூட. ஜி-20 தலைமைப் பொறுப்பின் போது உலகளாவிய தெற்கின் குரல் என்ற கருத்தை இந்தியா விரிவுபடுத்தியபோது, சர்வதேச அரசியலில் ஆலோசனை மூலம் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை அது எடுத்துக் காட்டியது. இப்போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை இது அளிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற முடிவு செய்துள்ள நிலையில், ஜனநாயகத்தால் சாதிக்க முடியும், உத்வேகம் அளிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.
மேதகு தலைவர்களே,
கொந்தளிப்பு மற்றும் மாற்றங்களின் சகாப்தத்தில், ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொள்கிறது. இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை மேலும் உள்ளடக்கிய, ஜனநாயக, பங்கேற்பு மற்றும் நியாயமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஜனநாயக நாடுகள் வழிநடத்த வேண்டும். இத்தகைய பகிரப்பட்ட முயற்சிகளின் மூலம் மட்டுமே, நமது மக்களின் விருப்பங்களை நாம் நிறைவேற்ற முடியும். வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் நாங்கள் அமைப்போம். இந்த முயற்சியில் இந்தியா தனது அனுபவத்தை அனைத்து சக ஜனநாயக நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது.
நன்றி.