பள்ளி முதல்வர்; வணக்கம் ஐயா!
பிரதமர் மோடி ; வணக்கம்! உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆன்லைனில் உங்கள் சக்தியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர்; வணக்கம் ஐயா! எங்களுடன் சேர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி! ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொள்ளவிருப்பதாக நான் இவர்களிடத்தில் கூறினேன். நீங்கள் இதில் பங்கெடுப்பீர்கள் என்று இவர்கள் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள். நீங்கள் வருவதற்கு முன்பு கூட உங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். உங்களுக்கு ஏராளமான விசிறிகள் இங்கு இருக்கின்றனர்.
பிரதமர் மோடி; நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். ஆனால், நான் உங்களுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை. தேர்வு குறித்த பதற்றம் இல்லாததால், நீங்கள் மகிழ்ச்சியான சூழலில் உள்ளீர்கள். நீங்கள் எல்லோம் எப்படி இருக்கிறீர்கள்?
மாணவர்கள்; நன்றாக இருக்கிறோம் ஐயா!
பிரதம் மோடி; உங்கள் குடும்பத்தினர் நலமா?
மாணவர்கள் ; ஆம் ஐயா!
பிரதமர் மோடி; தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு உங்களுக்கு பதற்றம் இருந்ததா? இப்போது உங்களுக்கு அந்தப் பதற்றம் இல்லை. அப்படித்தானே?
மாணவர்கள்; ஆமாம் ஐயா!
பிரதமர் மோடி; அப்படியானால் உங்களுக்கு பதற்றம் இருந்திருக்கிறது?
மாணவர்கள்; ஆமாம் உண்மைதான் ஐயா!
பிரதமர் மோடி; தேர்வுக்கு செல்லும் வீரனுக்கு எந்தப் பதற்றமும் இருப்பதில்லை என்று நான் எழுதிய புத்தகத்துக்குப் பயன் இல்லை. உங்களுக்கு ஏன் பதற்றம் ஏற்படுகிறது?
மாணவர்; நாங்கள் ஒவ்வொரு நாளும் தயாராகும் போது எங்களுக்கு பதற்றம் இருந்ததில்லை. இளைஞர்களது ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். எங்களது உயிரைக் காப்பாற்றியதற்கு உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
பிரதமர் மோடி; உங்களது பெயர் என்ன?
மாணவர் ; ஹித்தேஸ்வர் சர்மா, பஞ்ச்குலா
பிரதமர் மோடி; பஞ்ச்குலாவில் எந்த செக்டார்?
மாணவர்; 10-வது செக்டார் ஐயா.
பிரதமர் மோடி; நான் 7-வது செக்டாரில் பல ஆண்டுகள் வசித்தேன்.
மாணவர்; ஐயா, உங்களை ஏராளமானவர்கள் ஆதரிக்கின்றனர். உங்களை இங்கு காண அவர்கள் விரும்புகின்றனர்.
பிரதமர் மோடி; பத்தாம் வகுப்பில் முதல் மாணவராக இருந்தீர்கள். 12-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வந்தீர்கள். இப்போது தேர்வு இல்லை. என்ன செய்யப் போகிறீர்கள்?
மாணவர்; ஐயா! இப்போதும் சொல்கிறேன். மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நெருக்கடி அதிகமாகிக் கொண்டிருந்தது. அது உச்சகட்டத்துக்குச் சென்றது. தேர்வு நடப்பது பாதுகாப்பாக இருக்காது என்ற உணர்வு இருந்தது. நீங்கள் மிகச் சிறந்த முடிவை எடுத்துள்ளீர்கள். முதல் மாணவர்களாக இருந்தாலும், நன்றாக தயாராகி இருந்தாலும், அவர்களது முயற்சி வீண் போகாது. தொடர்ந்து உழைப்பவர்களுக்கு வெற்றிதான். எனவே அவர்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. முதல் மாணவர்கள் இந்த முடிவால் ஏமாற்றமடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றர். நீண்ட சிந்தனைக்குப் பின்னர் எடுத்த இந்த முடிவு சிறப்பானது. நாங்கள் எப்போதும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
பிரதமர் மோடி; சரி குழந்தைகளே, சிலர் தங்களை தைரியசாலிகள் என்று எண்ணிக் கொண்டு, முகக்கவசம் அணியாமல், விதிமுறைகளை மறக்காமல் நடந்து கொள்கின்றர். அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
மாணவர்; ஐயா, விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். சிலர் இவ்வாறு இருப்பதும், நடந்து கொள்வதும் ஏமாற்றமாக உள்ளது. இந்தப் பெருந்தொற்று குறித்து நமது அரசும், சர்வதேச அமைப்புகளும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது சரியல்ல. நான் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், எங்கள் பகுதியில் நாங்கள் விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். கொரோனா விழிப்புணர்வு குறித்து தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டோம். அதற்கு நல்ல பலன் ஏற்பட்டது.
பிரதமர் மோடி ; நான் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 12-ம் வகுப்பு மாணவர்கள் பற்றி அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலை கொண்டிருந்தனர். ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு வரை, தேர்வுக்கு தயாராக இருந்தீர்கள். இப்போது தேர்வு இல்லை என்றாகி விட்டதால், ஒரு வெற்றிடம் நிலவுகிறது. அதை எவ்வாறு நிரப்பப் போகிறீர்கள்?
மாணவர்; ஐயா, என் பெயர் விதி சவுத்ரி. குவகாத்தி ராயல் நோபிள் பள்ளி மாணவன். தேர்வு வீரர்கள் என்ற புத்தகம் பற்றி சொன்னீர்கள். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது, கொல்கத்தாவிலிருந்து குவகாத்திக்கு பயணம் செய்தேன். விமான நிலையத்தில், அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். உடனே அதை வாங்கினேன். ஒரு மாத காலம் அதைத் தொடர்ந்து படித்தேன். தேர்வுகளை திருவிழா போல் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். திருவிழாவில் எப்படி அச்சம் வரும்? திருவிழாவுக்காக நாம் தயாராகும்போது, அதை வெற்றிகரமாக்கவே விரும்புவோம். யோகா என்னும் பெரிய மந்திரத்துடன் புத்தகத்தை முடித்துள்ளீர்கள். இந்த இரண்டும் இப்போது என்னிடம் உள்ளன. இப்போது சூழல் சரியில்லை என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால், தேர்வுக்கு நான் தயாரானதற்கு உங்களது புத்தகத்துக்குத்தான் நன்றி கூறவேண்டும்.
பிரதமர் மோடி; ஆனால் எனது கேள்வி அப்படியே உள்ளது. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காத ஒரு இளைஞர் கைகளை உயர்த்துகிறார். உங்கள் பெயர் என்ன?
மாணவர்; ஐயா என் பெயர் நந்தன் ஹெக்டே.
பிரதமர் மோடி; நீங்கள் கர்நாடகத்திலிருந்து வருகிறீர்களா?
மாணவர்; ஆமாம் ஐயா, பெங்களூரிலிருந்து வருகிறேன்.
பிரதமர் மோடி; சரி சொல்லுங்கள்.
மாணவர்; நன்றி, ஐயா. எனது வாழ்க்கையின் அனைத்து தேர்வுகளும் இத்துடன் முடிந்து விடவில்லை. எதிர்காலத்தில் பல தேர்வுகள் வரவுள்ளன. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், நாம் வருங்காலத் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராக முடியும்.
பிரதமர் மோடி; நல்லது. தேர்விலிருந்து இப்போது நீங்கள் விடுபட்டு நிம்மதியாக உள்ளீர்கள். உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள்? ஐபிஎல் போட்டிகள், சாம்பியன் லீக் இறுதி போட்டி அல்லது டென்னிஸ் போட்டி, ஜூலையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளைக் காணவுள்ளீர்களா? ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களின் பின்புலம் பற்றி தெரியுமா? அல்லது 21-ம் தேதி வரவுள்ள யோகா தினத்தைப் பற்றி நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?
மாணவர்; எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கிறோம்.
பிரதமர் மோடி; நீண்ட நேரமாக வாய்ப்பு கிடைக்காத மகள் பேச விரும்புகிறார்.
மாணவர்; வணக்கம் ஐயா, நீங்கள் தேர்வுகளை ரத்து செய்த அறிவிப்பு பற்றிக் கேள்விப்பட்டதும், எங்களது ஒரு பதற்றம் விலகியதாக நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இப்போது போட்டி தேர்வுகளுக்காக நாங்கள் படிக்க வேண்டியுள்ளது. முன்பு, பள்ளி தேர்வுகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகி வந்தோம். இப்போது எங்களுக்கு நிறைய நேரம் இருப்பதால், போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராவோம். உங்களுக்கு எனது நன்றி ஐயா.
பிரதமர் மோடி; தேர்வு பற்றிய விஷயம் உங்களது மனதை விட்டு அகலவில்லை அல்லவா? நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்காக அனைத்தையும் கவனித்து வருகிறார்கள் தானே?
மாணவர்; ஆமாம் ஐயா!
பிரதமர் மோடி; எங்கே உங்கள் பெற்றோர்? அவர்களைக் காண்பியுங்கள்.
மாணவர்; நான் அவர்களை அழைக்கிறேன்.
பிரதமர் மோடி; வணக்கம்.
பெற்றோர்; வணக்கம் ஐயா.
பிரதமர் மோடி; உங்கள் மகள் தேர்விலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
பெற்றோர்; இது ஒரு சிறந்த முடிவு ஐயா! நாடு முழுவதும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டுள்ளது.தங்களது வருங்காலத்துக்கு அவர்கள் நல்ல முறையில் தயாராக முடியும்.
பிரதமர் மோடி; நேர்மறையான முறையில் நீங்கள் முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேறு யாராவது பேச விரும்புகிறீர்களா?
மாணவர்; வணக்கம் ஐயா, பெங்களூரு கேந்திரிய வித்யாலயாவைச் சேர்ந்த நான் உங்களது பெரும் விசிறி.
பிரதமர் மோடி; நன்றி.
மாணவர்; உங்களது முடிவு சிறப்பானது. தலை இருந்தால்தான் தலைப்பாகைகளை அணிய முடியும்.
பிரதமர் மோடி; இதைத்தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.
மாணவர்; நீங்கள்தான் எங்களுக்கு உந்து சக்தி.
பிரதமர் மோடி; தலையைப் பற்றி நாம் பேசும்போது, உடலைப் பற்றி என்ன கருதிகிறீர்கள்? உங்கள் உடல் தகுதி என்ன? உடற்பயிற்சிக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?
மாணவர்; நான் யோகா செய்கிறேன். ஒவ்வொரு காலை வேளையிலும், எனது தம்பியுடன் 30 நிமிடம் மற்ற உடற்பயிற்சிகளை செய்வேன்.
பிரதமர் மோடி; உங்கள் பெற்றோர் நீங்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் அவர்களிடம் கேட்பேன்.
மாணவர்; உண்மையாக, நானும் எனது தம்பியும் 30 நிமிடங்கள் யோகா செய்வோம். எனது மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள தபலா வாசிப்பேன். இதை ஓராண்டாக பயின்று வருகிறேன்.
பிரதமர் மோடி; உங்கள் குடும்பத்தில் இசை அனைவருக்கும் பிடிக்குமா?
மாணவர்; ஆமாம் ஐயா, எனது அம்மா சித்தார், தம்பூரா வாசிப்பார்.
பிரதமர் மோடி; அதனால்தான் உங்கள் வீட்டில் இசை சூழல் உள்ளது. நான் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். எனக்கு முன்பு ஒரு பெண் இருக்கிறார். அவர் ஏதோ பேச விரும்புகிறார்.
மாணவர்; வணக்கம் ஐயா. என் பெயர் காஷிஷ் நேகி. நான் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள். ஒரு கனவு நனவாகி இருக்கிறது. நான் உங்களைச் சந்திப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. மிகச்சரியான முடிவை எடுத்ததற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில், கடந்த ஒன்றரை ஆண்டாக எங்கள் வாழ்க்கையே ஸ்தம்பித்து விட்டதாக நினைத்தோம். இந்த முடிவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி; மற்றொரு பெண் கையை உயர்த்துகிறார். சொல்லுங்கள்.
மாணவர்; நான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவள். என் பெயர் ஜன்னத் சாக்ஷி. குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, இப்போதைய நிலைக்கு ஏற்ற முடிவை எடுத்துள்ளீர்கள். எங்களது நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மதிப்பீடு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் முயற்சிக்கு பலன் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி ஐயா.
பிரதமர் மோடி; அனைத்து பெற்றோரும் திரையின் முன்பு வாருங்கள். எண் வரிசையில் உங்களை அழைக்கிறேன்.
பெற்றோர்; வணக்கம் ஐயா, நாங்கள் உங்களது விசிறிகள். மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி நல்ல முடிவை அறிவித்துள்ளதற்கு எங்களது நன்றி.
மாணவர்; நான் தமிழகத்திலிருந்து பேசுகிறேன். தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று எனக்கு தெரியும். அதனால், நான் அதிகமாகப் படிக்கவில்லை. நாங்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், தமிழகத்தில் வசிக்கிறோம்.
பிரதமர் மோடி; அப்படியானால், உங்களுக்கு சோதிடம் தெரியுமா? தேர்வு ரத்தாகும் என உங்களுக்கு எப்படி தெரியும்?
மாணவர்; இதை நான் எதிர்பார்த்தேன். இது நல்ல முடிவு. ஊரடங்கு காரணமாக, நான் என் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிக்கிறேன்.
பிரதமர் மோடி; நீங்கள் வீட்டில் சும்மா இருந்தால், உங்கள் வீட்டார் கோபம் அடைவார்கள். சரியான நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும், குளிக்க வேண்டும். நல்ல முறையில் எதையாவது செய்ய வேண்டும்.
மாணவர்; நான் என் பாட்டியுடன் வந்துள்ளேன். நமது நாட்டுக்காக நீங்கள் ஒவ்வொன்றையும் செய்கிறீர்கள். இதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. என்னை விட என் பாட்டிக்கு நாட்டு நடப்பு நன்றாகத் தெரியும். அவர் செய்திகளை விடாமல் பார்ப்பார். அவர் உங்களது தீவிர ரசிகை.
பிரதமர் மோடி; இந்த ஆண்டு நம் நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிறது. உங்கள் மாவட்டத்தில் நடந்த சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி கட்டுரை எழுதுவீர்களா?
மாணவர்; நிச்சயமாக எழுதுவோம் ஐயா.
பிரதமர் மோடி; ஆராய்ச்சி செய்வீர்களா?
மாணவர்; நிச்சயமாக செய்வோம்.
பெற்றோர்; நான் உங்களது ரசிகர். நீங்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நல்ல முடிவை எடுத்தீர்கள். காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்ததை நான் வரவேற்கிறேன் ஐயா.
பிரதமர் மோடி; நன்றி.
மாணவர்; எனது பெற்றோர் வந்திருக்கிறார்கள் ஐயா!
பெற்றோர்; உங்களது அனைத்து நற்பண்புகளையும் நான் மதிக்கிறேன். ஆனால், உங்களது நேர்மை மீது அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. நம்நாட்டில் நேர்மையாகத் தங்கள் வேலையைச் செய்பவர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அவர்களைப் பாதுகாக்க கொள்கை வகுக்க வேண்டும். அவர்களைக் கவுரவப்படுத்த வேண்டும். அப்போதுதான், குழந்தைகள் அவர்களை வழிகாட்டியாக கொள்வார்கள்.
பிரதமர் மோடி; கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலரது நோக்கம்தான் இடையூறாக இருக்கிறது. அத்தகைய ஒரு சூழலை நாம் அனைவரும் இணைந்து ஏற்டுத்தினால், அதைச் செயல்படுத்த முடியும்.
நண்பர்களே, உங்களுடன் உரையாடியதில் எனது நம்பிக்கை வலுப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் நேர்மறையான சிந்தனையையும், எதார்த்தமான நடைமுறையையும் கொண்டுள்ளார்கள். எதிர்மறையான சிந்தனைகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதே உங்களது வலிமையாக இருக்கும். இதுதான் நமது இளைஞர்களின் சிறப்பாகும். ஊரடங்கு காலத்தில் நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். நான் எந்தவித அறிவிப்பும் இன்றி இங்கு வந்த போது, நீங்கள் அதிரச்சியடையவில்லை. நீங்கள் உங்கள் ஆசிரியர்கள், பெற்றோருடன் இருப்பதைப்போலவே இயல்பாக பேசினீர்கள். இதை நான் கவனித்தேன். இந்த அன்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு புதிய அனுபவம்.
நண்பர்களே, உங்களது அனுபவம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் பயனை அளிக்கும். கடினமான காலங்களை நினைத்து புலம்பக்கூடாது. அந்த அனுபவங்களிடமிருந்தும், வலிமையைப் பெறலாம். நீங்கள் தேர்வு செய்யும் துறைகளில் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். கொரோனா நெருக்கடிகளுக்கு நடுவே, புதிய வாய்ப்புகளை நாம் பெற்றுள்ளோம். இந்தப் பெரும் சவாலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இந்த ஒற்றுமை உணர்வு உங்களுக்கு எதிர்காலத்தில் புதிய வலிமையைக் கொடுக்கும்.
நண்பர்களே, இந்தக் கடினமான காலத்திலும் நாம் நமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். இங்கு பேசும் போது, ஒரு பெண் தனது இரண்டு உறவினர்களை இழந்து விட்டதாகக் கூறினார். இது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல. ஆனாலும், அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு நம்பிக்கை உள்ளது. பேரிடர் வந்து விட்டது. அதை முறியடிப்பதிலேயே நமது வெற்றி உள்ளது. நூற்றாண்டில் காணாத மிகப்பெரும் தொற்று இது என்பது அனைவருக்கும் தெரியும். நான்கு, ஐந்து தலைமுறைகளாக இதைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், ஒவ்வொரு இந்தியரும் இதிலிருந்து மீண்டு வருவோம் என்ற உணர்வைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் புது ஆற்றல் கிடைக்கிறது. நம் நாட்டை அனைவரும் சேர்ந்து புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் நம்பிக்கை உள்ளது.
ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நான் சொன்னதைப் போல, சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும், பூமியைக் காப்பாற்றுவதற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும். இதேபோல, ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம். பல நாடுகள் இதை ஆதரிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்து நாடுகளும் இதைப் போல ஒரு அமோக ஆதரவை எந்த விஷயத்திற்கும் அளித்ததில்லை. பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் நடைபெறவுள்ளது. நம்நாட்டிலிருந்து அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கடினமான சூழலில் இருந்து எப்படி அவர்கள் முன்னேறி வந்தனர் என்பதை இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தை இளைஞர்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தக் கொரோனா காலத்தில், உங்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் பதிவு செய்ய வேண்டும். உங்கள் பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களையும் பதிவு செய்து அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் உதவ வேண்டும். எனது வாழ்த்துகளும், உங்களது பெற்றோரின் ஆசிகளும் உங்களுடன் இருக்கும். நீங்கள் உங்கள் கனவுகளுடன் வாழ்கிறீர்கள். உங்கள் பெற்றோர் உங்கள் கனவுகளைப் பற்றி பெருமையடைவார்கள். உங்களுடன் திடீரென இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் ஜோக் அடித்து விளையாடியிருப்பீர்கள். நான் அதற்கு இடையூறாக வந்து விட்டேன். ஆனாலும், இது ஒரு நல்ல அனுபவம். உங்களுக்கு எனது நன்றி!