மாண்புமிகு தலைவர் அவர்களே,
மூத்த உறுப்பினர்களே,
இந்த அவையின் சார்பாகவும், ஒட்டுமொத்த நாட்டின் சார்பாகவும் மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு தடைகளுக்கு இடையேயும் சாதாரண குடும்பத்தில் இருந்து, இத்தகைய உயர்ந்த நிலையை நீங்கள் அடைந்திருப்பது ஏராளமானோருக்கு ஊக்கமளிக்கும்.
ஆயுதப் படைகளின் கொடி நாளும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த அவையின் சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுதப் படைகளின் கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக ஆயுதப்படை வீரர்களை வணங்குகிறேன்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,
இரண்டு முக்கிய நிகழ்வுகளை நாடு சந்திக்கும் வேளையில் மதிப்பிற்குரிய தலைவரை நாடாளுமன்ற மேலவை வரவேற்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் ஜி-20 குழுவிற்கு தலைமை ஏற்கும் பொறுப்பை உலக நாடுகள் இந்தியாவசம் ஒப்படைத்தன. அமிர்த காலத்தின் தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது. புதிய வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கான காலமாக மட்டுமல்லாமல், உலக நாடுகளின் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கும் முக்கிய பங்களிப்பையும் இந்தியா அமிர்த காலத்தில் வழங்கும். இந்தியாவின் இந்தப் பயணத்தில் நமது ஜனநாயகம், நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புமுறையும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். உங்கள் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றுவதுடன், நாட்டின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் சிறந்த தளமாகவும் இந்த அவை செயல்படும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
மாநிலங்களவையின் தலைவர் என்ற புதிய பொறுப்பை நீங்கள் இன்று முறைப்படி துவங்குகிறீர்கள். அவையின் முன் உள்ள முதல் கடமை, நாட்டின் கடைக்கோடியில் உள்ள சாமானிய மனிதனின் நலன் சார்ந்த விஷயமாகும். தனது பொறுப்பை உணர்ந்துள்ள நம் நாடு, இந்தக் காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு அதை நிறைவேற்றி வருகிறது.
மதிப்பிற்குரிய குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வடிவில் நாட்டின் ஒளிமயமான பழங்குடி கலாச்சாரம் முதன்முறையாக நம்மை வழி நடத்துகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முன்னேறி, திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் முன்னதாக உயர்ந்த நிலையை அடைந்தார். தற்போது விவசாயியின் தவப்புதல்வனாக கோடிக்கணக்கான நாட்டு மக்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் சக்தியாக நீங்கள் விளங்குகிறீர்கள்.
உங்கள் வழிகாட்டுதலின்படி இந்த அவை கண்ணியத்தையும், மாண்பையும் முன்னெடுத்துச் சென்று புதிய உச்சத்தை அடையும் என்பதில் எனக்கு ஐயமில்லை. மாநிலங்களவை மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.