வணக்கம்!
அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, காணொலி மூலம் நம்முடன் இணைந்துள்ள முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே! வணக்கம்.
இன்று பௌர்ணமியின் புனித சந்தர்ப்பமாகும். மேலும் தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் குருநானக் தேவ் ஜியின் 555- வது பிரகாஷ் பர்வ் என்பதாகவும் அமைகிறது. இந்த மகத்துவம் வாய்ந்த நாளில் நான் ஒட்டுமொத்த நாட்டுக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதலாக, நாடு முழுவதும் பழங்குடியின கௌரவ தினம் கொண்டாடப்படுறது. இன்று காலை, பீகார் மாநிலம் ஜமுய்-யில் நடைபெற்ற பகவான் பிர்ஸா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நான் பங்கேற்றேன். இப்போது, இன்று மாலை, நாம் முதலாவது போடோ மஹோத்சவத்தை இங்கு தொடங்கி வைக்கிறேன். முதல் போடோலாந்து திருவிழாவில் பங்கேற்க போடோ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரண்டுள்ளனர். அமைதி, கலாச்சாரம், செழிப்பின் புதிய சகாப்தத்தைக் கொண்டாட ஒன்றிணைந்து இங்கு கூடியுள்ள அனைத்து போடோ நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த சந்தர்ப்பம் எனக்கு எவ்வளவு ஆழமான உணர்ச்சிகரமானதாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்த தருணங்கள் என் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. ஏனென்றால் தில்லியில் அமர்ந்து, கோட்பாடுகளை உருவாக்குபவர்கள், தங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து நாட்டின் கதைகளை விவரிப்பவர்கள், இந்த நிகழ்வின் மகத்தான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஐம்பது வருட ரத்த ஓட்டம், ஐம்பது வருட வன்முறை என மூன்று, நான்கு தலைமுறை இளைஞர்களின் வாழ்வு இந்தக் கொந்தளிப்பில் பறிபோனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, போடோ சமூகம் இன்று ஒரு திருவிழாவைக் கொண்டாடுகிறது, இன்று, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க நீங்கள் அனைவரும் பங்களித்துள்ளீர்கள்.
என் போடோ சகோதர சகோதரிகளே,
2020-ம் ஆண்டில், போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கோக்ராஜருக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நீங்கள் என் மீது பொழிந்த அரவணைப்பும் பாசமும் நான் உண்மையிலேயே உங்களில் ஒருவனாக உணர வைத்தது. அந்த தருணத்தை நான் எப்போதும் போற்றுவேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், அதே அன்பு, அதே உற்சாகம், அதே பாசம் அப்படியே இருக்கிறது. அந்த நாளில், போடோலாந்தில் அமைதி மற்றும் செழிப்பின் விடியல் தொடங்கிவிட்டது என்று எனது போடோ சகோதர சகோதரிகளிடம் கூறினேன். அவை வெற்று வார்த்தைகள் அல்ல. வன்முறையைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டதன் மூலம் அமைதிக்கு காட்டிய உறுதிப்பாடு ஆழமாக நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்று, உங்கள் உற்சாகத்தையும் உங்கள் முகங்களில் மகிழ்ச்சியையும் பார்த்து, போடோ மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் போடோலாந்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர், வளர்ச்சியின் ஒரு புதிய அலை இப்பிராந்தியம் முழுவதும் வீசியுள்ளது. போடோ அமைதி ஒப்பந்தத்தின் நேர்மறையான விளைவுகளையும், அது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதையும் இன்று நான் காணும்போது, விவரிக்க முடியாத அளவற்ற திருப்தி மற்றும் மகிழ்ச்சியை நான் உணர்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, அதே மகிழ்ச்சியை நான் அனுபவித்து வருகிறேன். எனது சொந்த மக்கள், எனது இளம் நண்பர்கள், எனது அழைப்புக்கு செவிசாய்த்து, தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க இப்போது என்னுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். இந்த நிகழ்வு என்னை ஆழ்ந்த மனநிறைவால் நிரப்புகிறது. அதற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்களின் முயற்சிகள், உங்களது முன்முயற்சி காரணமாக, ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியிலும் அமைதிக்கான புதிய பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. என் நண்பர்களே, நீங்கள் உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
நண்பர்களே,
இந்த ஒப்பந்தங்களுக்கு நன்றி. 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, வன்முறையிலிருந்து விலகி, வளர்ச்சிப் பாதையில் இணைந்துள்ளனர். கர்பி ஆங்லாங் ஒப்பந்தம், புரூ-ரியாங் ஒப்பந்தம் அல்லது என்எல்எஃப்டி-திரிபுரா ஒப்பந்தம் போன்றவை யதார்த்தமாக மாறி நடைமுறைக்கு வரும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்? இருப்பினும் இவை அனைத்தும் உங்கள் ஆதரவால் சாத்தியமாகியுள்ளது நண்பர்களே. ஆகையால்தான், நாடு முழுவதும் பழங்குடியினர் கௌரவ தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில், நாம் பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நாளில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக நக்சலிசத்தின் பாதையை இன்னும் பின்பற்றுபவர்கள், எனது போடோ நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். துப்பாக்கியைக் கைவிடுங்கள்; வன்முறை மற்றும் ஆயுதங்களின் பாதை ஒருபோதும் உண்மையான நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்காது. போடோ சமூகம் காட்டிய சிறந்த பாதை நீடித்த நல்ல விளைவுகளைத் தரும் ஒன்றாகும்.
நண்பர்களே,
நான் உங்களிடம் வந்தபோது நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கையை நீங்கள் மதித்தீர்கள். என் வார்த்தைகளை மதித்தீர்கள். என் வார்த்தைகளுக்கு நீங்கள் அத்தகைய சக்தியைக் கொடுத்துள்ளீர்கள். அவை பல தலைமுறைகளாக கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நீடித்த அர்ப்பணிப்பாக மாறியுள்ளன. அசாம் அரசுடன் இணைந்து எங்கள் அரசு உங்கள் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறது.
நண்பர்களே,
போடோ பிராந்தியத்தில் போடோ சமூகத்தின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்திய மற்றும் அசாம் அரசுகள் முன்னுரிமை அளித்து வருகின்றன. போடோலாந்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ. 1,500 கோடி சிறப்பு தொகுப்பை ஒதுக்கியுள்ளது. அசாம் அரசும் ஒரு சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்பை வழங்கியுள்ளது. போடோலாந்தில் கல்வி, சுகாதாரம், கலாச்சாரம் தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த ஏற்கனவே ரூ. 700 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. வன்முறையைக் கைவிட்டு பொது நீரோட்டத்திற்குத் திரும்பியவர்கள் குறித்து முழுமையான உணர்வுபூர்வமாக நாங்கள் முடிவுகளை எடுத்துள்ளோம். போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணியின் 4,000 க்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும் பல இளைஞர்களுக்கு அசாம் காவல்துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், போடோ மோதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அசாம் அரசு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. போடோலாந்தின் வளர்ச்சிக்காக அசாம் அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 800 கோடிக்கு மேல் செலவிடுகிறது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நண்பர்களே,
எந்தவொரு பகுதியின் வளர்ச்சிக்கும், இளைஞர்கள், பெண்களின் திறன் மேம்பாடும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போதுமான வாய்ப்புகள் கிடைப்பதும் முக்கியமானதாகும். வன்முறை ஓய்ந்தவுடன், போடோலாந்தில் வளர்ச்சிக்கான ஆலமரத்தை நட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பார்வை சீட் (SEED) இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்தது. திறன், தொழில்முனைவோர், வேலைவாய்ப்பு மேம்பாட்டைக் குறிக்கும் சீட் இயக்கம், போடோ இளைஞர்களுக்குக் கணிசமாகப் பயனளிக்கிறது.
நண்பர்களே,
ஒரு காலத்தில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் தற்போது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் அணிகள் பங்கேற்ற துராந்த் கோப்பையின் இரண்டு பதிப்புகள் கோக்ராஜரில் நடைபெற்றன. சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு, போடோலாந்து இலக்கிய விழா கடந்த மூன்று ஆண்டுகளாக கோக்ராஜரில் நடந்து வருகிறது. இதற்காக நான் குறிப்பாக சாகித்ய பரிஷத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். போடோ இலக்கியத்திற்கு இது ஒரு மகத்தான பங்களிப்பு. போடோ இலக்கியம் மற்றும் மொழியைக் கொண்டாடும் நாளான போடோ சாகித்ய சபாவின் 73 வது நிறுவன நாளும் இன்று அமைகிறது. நாளை, நவம்பர் 16 அன்று ஒரு கலாச்சாரப் பேரணி திட்டமிடப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். அதற்காக எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, தில்லியில் உள்ள மக்கள் இதைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த தேசமும் அதைக் காணும் வாய்ப்பைப் பெறும். தில்லிக்கு வந்து அமைதிச் செய்தியைப் பரப்ப வேண்டுமென நீங்கள் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்துள்ளீர்கள்.
நண்பர்களே,
போடோ கலை மற்றும் கைவினையின் செழுமை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை நான் சமீபத்தில் பார்வையிட்டேன். அரோனாய், டோகோனா, கம்சா, காராய்-தகினி, தோர்கா, ஜாவ் கிஷி, காம் போன்ற பல பாரம்பரிய பொருட்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த தயாரிப்புகள் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன. அதாவது அவர்கள் உலகில் எங்கு பயணம் செய்தாலும், அவர்களின் அடையாளம் எப்போதும் போடோலாந்து மற்றும் போடோ கலாச்சாரத்துடன் இணைக்கப்படும். பட்டுப்புழு வளர்ப்பு எப்போதும் போடோ பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. அதனால்தான் எங்கள் அரசு போடோலாந்து பட்டுப்புழு வளர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு போடோ வீட்டிலும் நெசவு என்பது ஒரு நேசத்துக்குரிய வழக்கமாகும். மேலும் போடோலாந்து கைத்தறி இயக்கம், இந்த வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் செயல்பட்டு வருகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் சுற்றுலாத் துறையில் அசாம் ஒரு குறிப்பிடத்தக்க தூணாக உள்ளது. போடோலாந்து இந்த வலிமையின் முக்கிய பகுதியாகும். அசாமின் சுற்றுலா ஈர்ப்பின் மையம் ஏதேனும் இருந்தால், அது போடோலாந்தில் உள்ளது. மனாஸ் தேசிய பூங்கா, ரைமோனா தேசிய பூங்கா மற்றும் சிக்னா ஜ்வாலாவ் தேசிய பூங்கா ஆகியவற்றின் அடர்ந்த காடுகள் விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கான தளங்களாக மாறிய ஒரு காலம் இருந்தது. ஒரு காலத்தில் மறைவிடங்களாக இருந்த இந்த காடுகள், தற்போது நமது இளைஞர்களின் உயர்ந்த விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வழிகளாக மாறியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. போடோலாந்தில் சுற்றுலா அதிகரிப்பு இங்குள்ள இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
இன்று நாம் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில், போடோஃபா, உபேந்திர நாத் பிரம்மா, குருதேவ் காளிசரண் பிரம்மா ஆகியோரை நினைவு கூர்வது இயல்பான விஷயம் தான். பாரதத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், போடோ மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போடோபா எப்போதும் ஜனநாயக வழிமுறைகளை ஆதரித்தனர். குருதேவ் காளிசரண் பிரம்மா அகிம்சை மற்றும் ஆன்மீகத்தின் மூலம் சமூகத்தை ஒன்றிணைத்தார். இன்று, போடோ தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்களில் கண்ணீர் இல்லை, ஆனால் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் இருப்பதைக் கண்டு நான் ஆழ்ந்த திருப்தியை உணர்கிறேன். ஒவ்வொரு போடோ குடும்பமும் தங்கள் சமூகத்தின் வெற்றிகரமான உறுப்பினர்களால் ஈர்க்கப்பட்டு, தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க விரும்புகிறது. போடோ சமூகத்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நபர்கள் முக்கிய பணிகளில் தேசத்திற்குச் சேவை செய்துள்ளனர். போடோலாந்தின் இளைஞர்கள் தற்போது வெற்றிகரமான வாழ்க்கைக்கான கனவுடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவை அனைத்திலும், எங்கள் அரசு மத்தியில் இருந்தாலும் சரி, மாநிலமாக இருந்தாலும் சரி ஒவ்வொரு போடோ குடும்பத்துடனும் ஒரு கூட்டாளராக நிற்கிறது.
நண்பர்களே,
என்னைப் பொறுத்தவரை, அசாம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியும் பாரதத்தின் அஷ்டலட்சுமியின் பிரதிநிதி. இப்போது, வளர்ச்சியின் விடியல் கிழக்கிலிருந்து, கிழக்கு இந்தியாவிலிருந்து எழுகிறுதி. வளர்ந்த இந்தியா என்ற நமது பார்வைக்கு புதிய சக்தியை அது கொண்டு வரும். அதனால்தான் வடகிழக்கில் நீடித்த அமைதியை நிலைநாட்ட நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகளை நாங்கள் தீவிரமாக நாடி வருகிறோம்.
நண்பர்களே,
கடந்த பத்து ஆண்டுகளில், அசாம் மற்றும் வடகிழக்குப் பகுதியில் வளர்ச்சியின் பொற்காலம் தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களில், அசாமைச் சேர்ந்த எண்ணற்ற தனிநபர்கள் வறுமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளனர். பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ், அசாம் வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அமைத்து வருகிறது. சுகாதார உள்கட்டமைப்புக்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அசாம் நான்கு பெரிய மருத்துவமனைகளை பரிசாகப் பெற்றுள்ளது. குவஹாத்தி எய்ம்ஸ் மற்றும் கோக்ராஜர், நல்பாரி மற்றும் நாகோனில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் போன்ற வசதிகள் பலருக்கு சுகாதார வசதிகளை எளிதாக்கியுள்ளன. அசாமில் புற்றுநோய் மருத்துவமனை திறக்கப்பட்டிருப்பது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது.
2014-க்கு முன்பு, அசாமில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இன்று, அந்த எண்ணிக்கை 12 ஆக இரட்டிப்பாகியுள்ளது. மேலும் 12 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. அசாமில் அதிகரித்து வரும் இந்த மருத்துவ நிறுவனங்கள் இப்போது நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்துள்ளன.
நண்பர்களே,
போடோ அமைதி ஒப்பந்தத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பாதை ஒட்டுமொத்த வடகிழக்கின் வளத்திற்கு வழிவகுக்கிறது. போடோலாந்தை பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு கலாச்சாரத்தின் கருவூலமாக நான் கருதுகிறேன். இந்த வளமான கலாச்சாரம் மற்றும் போடோ பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து பேணி வலுப்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் போடோலாந்து திருவிழா மகிழ்ச்சியாக மலர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தில்லியில் உங்களை வரவேற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, என்னை அளவற்ற மகிழ்ச்சியால் நிரப்புகிறது. உங்கள் அனைவரையும் திறந்த கரங்களுடன் வரவேற்கிறேன். நண்பர்களே, நீங்கள் என்னிடம் காட்டிய அரவணைப்பு மற்றும் பாசம், நீங்கள் கொடுத்த அன்பு என்னை நெகிழச் செய்துள்ளது. உங்கள் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் அயராது உழைப்பேன்.
நண்பர்களே,
என் அர்ப்பணிப்புக்கான மிகப்பெரிய காரணம், நீங்கள் என் இதயத்தை வென்றதுதான். அதனால்தான் நான் எப்போதும் உங்களுடையவனாகவும், உங்கள் மீது அர்ப்பணிப்புள்ளவனாகவும், உங்களால் ஈர்க்கப்பட்டவனாகவும் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! மிக்க நன்றி!
இப்போது, முழு பலத்துடன், என்னுடன் சொல்லுங்கள் -
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
மிக்க நன்றி!