இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர் அவர்களே, பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டா அவர்களே, அமைச்சரவை நண்பர் திரு அனுராக் தாக்கூர் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே! உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!
கடந்த எட்டு ஆண்டுகளில் நமது இரட்டை என்ஜின் அரசு, இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. மத்திய பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, இந்திய மேலாண்மைக் கழகம் முதலியவையும் இங்கு அமைந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையும் இனி பிலாஸ்பூருக்கும், இமாச்சலப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கவிருக்கிறது. இந்த மருத்துவமனை, முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக, பசுமை எய்ம்ஸ் என்று அழைக்கப்படுவது இதன் மற்றொரு சிறப்பம்சம்.
நண்பர்களே,
2014-ஆம் ஆண்டு வரை இமாச்சலில் 3 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன, அவற்றுள் 2, அரசு கல்லூரிகள். கடந்த 8 ஆண்டுகளில் 5 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல 2014 வரை இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர வெறும் 500 இடங்களே இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 1200 ஆக, அதாவது 2 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி, மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் தடுப்பூசிகளின் உற்பத்தியாளர் என்ற வகையிலும் இந்த மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது. மொத்த மருந்துகள் பூங்கா திட்டத்திற்கு நாட்டிலேயே மூன்று மாநிலங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் இமாச்சலப் பிரதேசமும் ஒன்று. தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்காகவும் நாங்கள் அயராது பணியாற்றுகிறோம்.
அதேபோல நான்காவது மருத்துவ கருவி பூங்கா இங்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இங்கு முதலீடு செய்யப்படும். இது தொடர்பான பல சிறிய மற்றும் நடுத்தர ரக தொழில்துறைகள் வளர்ச்சி பெறும். இதன் மூலம் இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
நண்பர்களே,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3 கோடியே 60 லட்சம் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுள் 1.5 லட்சம் பயனாளிகள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மாநில ட்ரோன் கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை இமாச்சலப் பிரதேசம் பெற்றுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் ஏராளமான பலன்கள் கிடைக்கவிருக்கின்றன. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் செழிப்புடன் இணைந்திருப்பதால், அவர்களின் வசதியை உயர்த்துவதற்கான இது போன்ற வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ‘வளர்ந்த இந்தியா' மற்றும் வளர்ந்த இமாச்சலப் பிரதேசம் என்ற உறுதிபாட்டை இது பூர்த்தி செய்யும்.
மிக்க நன்றி!