மத்திய அமைச்சரவை நண்பர்களே, உயிரி தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட பிரமுகர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்டுள்ள விருந்தினர்களே, வல்லுநர்களே, முதலீட்டாளர்களே, தொழில்துறை நண்பர்களே!
நாட்டின் முதல் உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சியில் கலந்துகொண்டு இந்தியாவின் இந்தத் திறனை உலகிற்கு எடுத்துரைக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 10 பில்லியன் டாலர் முதல் 80 பில்லியன் டாலராக இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. உயிரி தொழில்நுட்ப உலக சூழலில் முதல் 10 இடங்கள் குழுவில் இந்தியா சேரும் நாள் வெகு தூரம் இல்லை. இந்தியாவின் இந்த மாபெரும் சாதனையில் உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது.
நண்பர்களே,
உயிரி தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகளின் பூமியாக இந்தியா கருதப்படுவதற்கு ஐந்து பெரிய காரணங்கள் உள்ளன. முதலாவது- மாறுபட்ட மக்கள்தொகை, மாறுபட்ட காலநிலை மண்டலங்கள்; இரண்டாவது- இந்தியாவின் திறமைவாய்ந்த மனித ஆற்றல் தொகுப்பு; மூன்றாவது - இந்தியாவின் எளிதான வர்த்தக நடவடிக்கைகள்; நான்காவது - இந்தியாவில் அதிகரித்து வரும் உயிரி பொருட்களின் தேவை; ஐந்தாவது- இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை, அதாவது உங்கள் சாதனை.
நண்பர்களே,
நாட்டின் இந்தத் திறனை விரிவுபடுத்துவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு தொடர்ந்து பணியாற்றியுள்ளது. இன்றைய புதிய இந்தியாவில், ஒவ்வொரு துறையின் வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். எனவே ஒவ்வொரு துறையின் ஆதரவும், வளர்ச்சியும் நாட்டிற்கு தற்போது மிக அவசியம்.
அடல் புத்தாக்க இயக்கம், இந்தியாவில் தயாரித்தல் மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்களின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவும் உயிரி தொழில்நுட்பத் துறை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உயிரி தொழில்நுட்ப புத்தொழில்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
மிகுந்த தேவைகள் எழும் துறைகளுள் உயிரி தொழில்நுட்பத் துறையும் ஒன்று. உயிரி மருந்தகத்திலும் புதிய வாய்ப்புகள் எழுந்துள்ளன. வரும் காலத்தில் உயிரி தொழில்நுட்பத்திற்கு நாட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கவுள்ளது. வேளாண்மை மற்றும் எரிசக்தித் துறைகளில் அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்களும் உயிரி தொழில்நுட்பத் துறைக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
உயிரி தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சாத்தியக்கூறு குறித்தும் அடுத்த இரண்டு நாட்களில் நீங்கள் விவாதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி!