உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது நாடாளுமன்ற நண்பர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சர்வதேச பால்வள கூட்டமைப்பின் தலைவர் திரு பிரசல் அவர்களே, தலைமை இயக்குநர் திருமிகு கரோலின் எமாண்ட் அவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
உலகம் முழுவதும் உள்ள பால்வளத் துறையின் வல்லுநர்களும், புதிய கண்டுபிடிப்பாளர்களும் இந்தியாவில் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பால்வளத் துறையின் திறன், கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதோடு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாகவும் இத்துறை உள்ளது.
நண்பர்களே,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடைகளும் பால்வளமும் இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த விஷயங்களாக இருந்து வருகின்றன. எங்களது இந்த மரபு, ஒரு சில தனித்திறமைகளோடு இந்தியாவின் பால்வளத்துறையை மேம்படுத்தி உள்ளது. உலகின் இதர வளர்ந்த நாடுகளைப் போல அல்லாமல் சிறிய விவசாயிகள் தான் இந்தியாவின் உந்து சக்தியாக திகழ்கிறார்கள். இவர்களது கடின உழைப்பினால் ஒட்டுமொத்த உலகில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இன்று இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் இத்துறை, சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
நண்பர்களே,
இந்திய பால்வளத்துறையில் மற்றொரு தனித்துவம் வாய்ந்த அம்சமும் உள்ளது. அதுதான் இந்தியாவின் பால்வள கூட்டுறவு அமைப்புமுறை. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிகப்பெரிய பால்வள கூட்டுறவு இணைப்பு இந்தியாவில் உள்ளது. இந்த கூட்டுறவு அமைப்புகள் சுமார் 2 லட்சம் கிராமங்களில் வசிக்கும் இரண்டு கோடி விவசாயிகளிடமிருந்து தினந்தோறும் இரண்டு முறை பாலை சேகரித்து நுகர்வோரிடம் அளிக்கிறது. இடைத்தரகர்கள் யாரும் இல்லாத இந்த நடைமுறையில் சுமார் 70% தொகை நேரடியாக விவசாயிகளை சென்றடைகிறது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி காரணமாக பால்வளத்துறையில் பெரும்பாலான பரிமாற்றங்கள் மிக விரைவாக நடைபெறுகின்றன.
உள்நாட்டு கால்நடை இனங்கள் இந்திய பால்வளத் துறையின் தனித்தன்மைக்கு மேலும் வலு சேர்க்கின்றன. கால்நடை தடுப்பூசிகள் ஆகட்டும் அல்லது இதர தொழில்நுட்பம் ஆகட்டும், உலக பால்வளத் துறைக்கு பங்களிப்பை வழங்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதோடு தனது கூட்டு நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் பால்வளத் துறையின் வளர்ச்சியில் இணையுமாறு இத்துறையில் உள்ள சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.