எனது அமைச்சரவை நண்பர்கள் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு அஜய் பட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான் அவர்களே, முப்படைகளின் தளபதிகளே, பாதுகாப்புச் செயலாளர் அவர்களே, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் அவர்களே, இங்கு பெருந்திரளாக குழுமியுள்ள சிறப்பு விருந்தினர்களே, இளம் நண்பர்களே!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்துடன் இணைந்து, தேசிய மாணவர் படையும் தனது 75-வது ஆண்டை தற்போது கொண்டாடி வருகிறது. தேச கட்டமைப்பில் பல ஆண்டுகளாக பங்களித்து வரும் தேசிய மாணவர் படை வீரர்களைப் பாராட்டுகிறேன். தேசிய மாணவர் படை வீரர்களாகவும், நாட்டின் இளைஞர்களாகவும் ‘அமிர்த’ தலைமுறையைச் சார்ந்தவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த தலைமுறை, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதோடு, வளர்ந்த நாடாகவும், தற்சார்பு இந்தியாவாகவும் மாற்றும்.
நண்பர்களே,
கன்னியாகுமரி முதல் தில்லி வரை தினமும் 50 கிலோ மீட்டர் தூரம் ஓடி 60 நாட்களில் ஒற்றுமைச் சுடரை உங்களில் ஒரு சில வீரர்கள் தற்போது ஒப்படைத்தீர்கள். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்துவதற்காக ஏராளமானோர் இந்த ஒற்றுமைச் சுடர் ஓட்டத்தில் கலந்து கொண்டீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள்.
எந்த ஒரு நாட்டையும் வழிநடத்திச் செல்வதற்கு இளைஞர்கள் மிகவும் முக்கியம். இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நோக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள் தான். ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்று இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள் இது பற்றி எனக்கு கடிதம் எழுதியதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். நாட்டின் சாதனைகள் மற்றும் முன்னுரிமைகளில் உங்களைப் போன்ற இளைஞர்கள் ஆர்வம் கொள்வது மிகவும் பெருமை அளிக்கிறது.
நண்பர்களே,
உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. உங்களது கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையில் அனைத்து இளம் நண்பர்களுக்கும் ஒரு தளத்தை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இளைஞர்களுக்காக ஏராளமான புதிய துறைகள் தற்போது உருவாகி வருகின்றன. பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் காரணமாகவும் நாட்டின் இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் துப்பாக்கிகள் மற்றும் குண்டு துளைக்காத கவச உடைகளைக் கூட நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். இன்று, இது போன்ற நூற்றுக்கணக்கான பொருட்களை இந்தியாவில் நாமே தயாரிக்கிறோம். எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பிலும் தற்போது வேகமாகப் பணியாற்றி வருகிறோம். இது போன்ற செயல்பாடுகள் அனைத்தும் இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.
2047-ஆம் ஆண்டில் நாடு 100-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது நீங்கள்தான் வளர்ந்த இந்தியாவின் முக்கிய சக்தியாக விளங்குவீர்கள். எனவே, எந்த தருணத்தையும், வாய்ப்பையும் நாம் இழக்கக்கூடாது. இந்தியாவை புதிய உச்சத்திற்கும், புதிய சாதனைகள் படைக்கும் வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இதை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி!