இளம் நண்பர்களே,
உங்களைப் போன்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய துறைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது, உங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நம்பிக்கை முதலியவை என்னைப் போன்ற ஏராளமானோருக்கு புதிய விஷயங்களை செய்யும் ஊக்கத்தை அளிக்கிறது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்பது மக்கள் பங்களிப்பிற்கான ஓர் சிறந்த உதாரணமாக மாறி உள்ளது. மேலும் இந்த வருடத்தின் ஹேக்கத்தான் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறிது நாட்களுக்கு முன்புதான் விடுதலையின் 75-வது ஆண்டை நாம் நிறைவு செய்தோம். விடுதலை பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து, அதற்காக மிகப்பெரிய இலக்குகளுடன் பயணித்து வருகிறோம். இந்த இலக்குகளை எட்டுவதற்கு ‘புதிய கண்டுபிடிப்புகளுக்கு வணக்கம் செய்வோம்' என்ற முழக்கத்துடன் முன்னிற்பவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களான நீங்கள்தான்.
அமிர்தகாலத்தின் இந்த 25 ஆண்டு காலம் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உங்களுக்கு அளிக்கிறது. இந்த வாய்ப்புகளும், தீர்மானங்களும் உங்களது தொழில் வளர்ச்சியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. உங்களைப் போன்ற இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் அடையப்போகும் வெற்றி, நாட்டின் வெற்றியை முடிவு செய்யும்.
நண்பர்களே,
60-70களில் பசுமை புரட்சி ஏற்பட்டதாக நீங்கள் கற்றிருப்பீர்கள். இந்திய விவசாயிகள் தங்களது திறனை வெளிப்படுத்தி உணவு துறையில் நம்மை தன்னிறைவாக்கினார்கள். கடந்த 7-8 ஆண்டுகளில் ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் காரணமாக நாடு அதிவேகமாக முன்னேறுகிறது. வேளாண்மை, கல்வி அல்லது பாதுகாப்புத் துறை என ஒவ்வொரு துறையை நவீனமயமாக்கவும், ஒவ்வொன்றையும் தன்னிறைவாக்கவும் இன்று நாடு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால்தான் இந்திய இளைஞர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.
நண்பர்களே,
இந்தியாவைப் போன்ற ஏராளமான நாடுகளில் மக்கள் மிகுந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். எனினும் அவற்றை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான போதுமான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மிகுந்த போட்டித்தன்மை மிக்க, மலிவான விலையில், நிலையான, பாதுகாப்பான மற்றும் நீண்ட கால தீர்வுகளை இந்திய கண்டுபிடிப்பாளர்களால் தான் உலகிற்கு அளிக்க முடியும். இதனால்தான் உலகின் நம்பிக்கை முழுவதும் இந்தியா மீதும், உங்களைப் போன்ற இளைஞர்கள் மீதும் உள்ளது.
உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை மனதார பாராட்டுகிறேன். அரசின் இந்த முயற்சியில் அரசோடு துணை இருந்து மக்களின் நலனை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி!