Quoteகுழாய்வழி எரிவாயு, கேரள, கர்நாடக மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கும்: பிரதமர்
Quoteநீலப் பொருளாதாரம் தற்சார்பு இந்தியாவின் முக்கிய ஆதாரமாகத் திகழும் : பிரதமர்

கேரள மாநில ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் அவர்களே, கர்நாடக மாநில ஆளுநர் திரு வாஜூபாய் வாலா அவர்களே, கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பி.எஸ். எடியூரப்பா அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது தோழர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு பிரகலாத் ஜோஷி, திரு.வி.முரளீதரன் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே வணக்கம்!

கொச்சி-மங்களூரு இடையே 450 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் வழியே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். இந்தியாவுக்கு, குறிப்பாக கேரளா, கர்நாடகா மக்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாளாகும். இந்த இரு மாநிலங்களும் இயற்கை எரிவாயு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களின் மக்களை நான் வாழ்த்துகிறேன். தூய்மையான எரிபொருள் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில் இந்த குழாய் திட்டம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நண்பர்களே, முதலாவதாக, கொச்சி –மங்களூரு குழாய்வழி எரிவாயு திட்டம் இரு மாநில மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கும். இரண்டாவதாக, இரு மாநிலங்களிலும் உள்ள ஏழை, நடுத்தர மக்கள், தொழில் முனைவோரின் செலவுகளைக் குறைக்கும். மூன்றாவதாக, இதுபோன்ற குழாய்வழி எரிவாயுத் திட்டம், பல நகரங்களில் எரிவாயு விநியோக முறைக்கு அடிப்படையாக அமையும். நான்காவதாக, இத்திட்டம், இந்த நகரங்களில் எரிவாயு (சி.என்.ஜி) மூலம் இயங்கும் போக்குவரத்துக்கும் அடித்தளமாக அமையும். ஐந்தாவதாக, இந்த குழாய்வழி எரிவாயு, மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, தூய்மையான எரிசக்தியை வழங்கும். ஆறாவதாக, குறைந்த விலையில் உர உற்பத்திக்கு இது உதவும். ஏழாவதாக, இரு மாநிலங்களிலும் காற்று மாசுபடுவதைக் குறைப்பதில் இது பெரும் பங்கு வகிக்கும். எட்டாவதாக, காற்று மாசுபாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பராமரிப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கு வழி வகுக்கும்.

ஒன்பதாவது பயன், காற்று மாசுபாடு குறைவதும், தூய்மையான காற்று கிடைப்பதும், மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி, நோய்களுக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவைக் குறைக்கும். பத்தாவதாக, மக்கள் தொகை குறைவாக இருக்கும் போது, காற்று சுத்தமாகும். இது மேலும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். இந்த எரிவாயுக் குழாய் அமைப்புப் பணிகள் மூலம், 1.2 மில்லியன் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டிருப்பதோடு, வேலைவாய்ப்பிலும், சுய வேலைவாய்ப்பிலும் ஒரு புதிய சூழலை ஏற்படுத்தும். இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபிறகு, உரத்தொழிற்சாலை, பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் மின்சார உற்பத்திக்கு பேருதவியாக அமையும். அத்துடன், நாட்டின் அன்னியச் செலாவணியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்தியா மிச்சப்படுத்தவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

|

நண்பர்களே, 21-ம் நூற்றாண்டில் போக்குவரத்து இணைப்புக்கும், தூய்மையான எரிசக்திக்கும் எந்த நாடு முக்கியத்துவம் அளிக்கிறதோ, அந்த நாடு புதிய உச்சத்தை எட்டும் என்று உலகெங்கும் உள்ள நிபுணர்கள் கூறிவருகின்றனர். இதற்கு முந்தைய பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு, போக்குவரத்து இணைப்பு வசதிகள் நாட்டில் தற்போது அதிக வேகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

சகோதர, சகோதரிகளே, 2014-க்கு முன்பு, அதாவது, 27 ஆண்டு காலத்தில், நாட்டில் 15ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே இயற்கை எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது 16 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டுவரும் எரிவாயுக் குழாய் அமைக்கும் பணிகள் அனைத்தும் அடுத்த 4 – 6 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். உதாரணமாக, சி.என்.ஜி. எரிவாயு விற்பனை மையங்கள், பி.என்.ஜி. இணைப்புகள் மற்றும் எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, போன்ற இந்த அரசின் சாதனைகள், இதற்குமுன் அறிந்திராதவை. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 2.5 மில்லியன் வீடுகளுக்கு மட்டுமே பிஎன்ஜி இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இன்று, 7.2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு இந்தத் திட்டம் மூலம் இணைப்பு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை, நாட்டில் 14 கோடி எல்பிஜி இணைப்புகள் இருந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில் இதே அளவுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில், 8 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் சமையல் எரிவாயுவை உஜ்வாலா திட்டத்தின் வாயிலாகப் பெற்றுள்ளனர். கொரோனா காலத்திலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்ததற்கு இத்தகைய திட்டங்கள்தான் காரணமாகும். இந்த நெருக்கடியான காலத்தில் 12 கோடிக்கும் அதிகமாக இலவச எரிவாயு உருளைகளை ஏழை, எளிய மக்களுக்கு நம்மால் வழங்க முடிந்தது.

நண்பர்களே, இவ்வாறு இணைப்புகள் அதிகரிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக எளிதாக சமையல் எரிவாயு கிடைக்கிறது. இதனால், மண்ணெண்ணெய் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் இதனால், மண்ணெண்ணெய் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருப்பதோடு, பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத மாநிலங்களாக தாங்களாகவே அறிவித்து வருகின்றன.

நண்பர்களே, 2014-ம் ஆண்டு, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் எண்ணெய் துரப்பணப் பணிகள் மற்றும் உற்பத்தி, இயற்கை எரிவாயு, சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் என எண்ணெய், எரிவாயுத் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ‘ஒரே தேசம், ஒரே எரிவாயுத் தொகுப்பு‘ என்ற நிலையை அடைவதோடு, எரிவாயுப் பயன்பாடு சுற்றுச்சூழல் ரீதியாக பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது என்பதால், எரிவாயு சார்ந்த பொருளாதாரத்திற்கு மாறவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க, கொள்கை ரீதியான பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கெயில் நிறுவனத்தின் கொச்சி – மங்களூரு குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது, ஒரே தேசம், ஒரே எரிவாயுத் தொகுப்பு என்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதி ஆகும். வளமான எதிர்காலத்திற்கு தூய்மையான எரிசக்தி அவசியம். இந்த எரிவாயுக் குழாய் திட்டம், தூய்மையான எரிசக்தி கிடைப்பதை மேம்படுத்த உதவும்.

நண்பர்களே, நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குறிக்கோளை அடைய, ஒருபுறம் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் கவனம் செலுத்தப்படும். அதே வேளையில், மறுபுறம் எரிசக்தி ஆதாரங்களை வகைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. உதாரணமாக, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஆலையைக் குறிப்பிடலாம். இன்றைய சூழலில், உயிரி எரிபொருள் பயன்பாடு மிகவும் அவசியமானதாகும். அரிசி மற்றும் கரும்பிலிருந்து எத்தனால் எடுப்பதற்கான பணிகள் மிகுந்த அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்குள், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 20 சதவீதமாக அதிகரிப்பதே நமது அரசின் நோக்கமாகும். நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் குறைந்த விலையில், மாசு ஏற்படுத்தாத எரிபொருளையும், மின்சாரத்தையும் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே, கர்நாடகா, கேரளா போன்ற கடலோர மாநிலங்களிலும், பிற தென்னிந்திய மாநிலங்களிலும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்த விரிவான திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவிற்கான முக்கிய ஆதாரமாக, நீலப் பொருளாதாரம் அமையும். துறைமுகங்கள் மற்றும் கடலோரச் சாலைகளை பல்வகை போக்குவரத்து இணைப்பு கொண்டவையாக மாற்ற தீவிரம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நம்நாட்டின் கடலோரப் பகுதிகளை, மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கும் பகுதிகளாகவும், தொழில் தொடங்குவதற்கு உகந்த பகுதிகளாகவும் மாற்றும் நோக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.

|

சகோதர, சகோதரிகளே, கடலோரப் பகுதிகளில் விவசாயிகளும், மீனவர்களும் மிக அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் இவர்கள் கடல்சார் வளங்களை மட்டும் நம்பியிருப்பவர்களாக மட்டுமின்றி, கடலோரப் பகுதிகளின் பாதுகாவலர்களாகவும் திகழ்கின்றனர். கடலோரச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள உதவி செய்தல், மீன்வளத்திற்கென தனித்துறை ஏற்படுத்துதல், குறைந்த வட்டியில் கடனுதவி கிடைக்கச் செய்தல் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்குதல் போன்றவை மூலம், தொழில் முனைவோர், மீனவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் உதவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

|

அண்மையில் தொடங்கப்பட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்களுக்கு நேரடியாக உதவிகரமாக இருக்கும். மீன்வளம் சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா, வேகமாக முன்னேறி வருகிறது. தரமான முறையில் பதப்படுத்தப்பட்ட கடல் உணவு தயாரிக்கும் மண்டலமாக இந்தியாவை மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல்பாசி உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருவதன் காரணமாக, அதிகரித்துவரும் கடல்பாசி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் ஒற்றுமையுடன் பாடுபட்டால், ஒவ்வொரு தேசிய இலக்குகளையும் மிக விரைவாக நம்மால் எட்ட முடியும். மீண்டும் ஒரு முறை கேரளா மற்றும் கர்நாடக மக்களையும், கொச்சி-மங்களூரு எரிவாயு குழாய் திட்டப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் வாழ்த்துகிறேன். நன்றி!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components

Media Coverage

Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 29, 2025
March 29, 2025

Citizens Appreciate Promises Kept: PM Modi’s Blueprint for Progress