வணக்கம்!
மதிப்பிற்குரிய ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாஸ்வாமி அவர்களே, ஸ்ரீ சித்தேஸ்வர மகாஸ்வாமி அவர்களே, ஸ்ரீ சித்தலிங்க மகாஸ்வாமி அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் அவர்களே, மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சித்தூர் மடத்தின் பக்தர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே!
மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அன்னையை வணங்குகிறேன். நாரத பக்தி சூத்திரம், சிவ சூத்திரம், பதஞ்சலி யோக சூத்திரம் ஆகியவற்றிற்கு ஸ்ரீ சித்தேஸ்வர ஸ்வாமியின் உரைகளை அர்ப்பணிக்கும் வாய்ப்பையும் இன்று நான் பெற்றேன். அறிவைப் போன்று புனிதமானதும், அறிவிற்கு மாற்றும் எதுவும் இல்லை என்று நமது புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமும், நேரமும் மாறியதால் இந்தியா ஏராளமான இன்னல்களை சந்தித்தது. ஆனால் இந்தியாவின் உணர்வு குறைந்தபோது, நாடு முழுவதும் உள்ள துறவிகளும், முனிவர்களும், ஆச்சார்யார்களும் நாட்டின் உணர்வை மீட்டெடுத்தனர். அடிமை நிலை ஓங்கியிருந்த காலகட்டத்திலும், வடக்கு முதல் தெற்கு வரை சக்திவாய்ந்த ஆலயங்களும், மடாலயங்களும் இந்தியாவின் அறிவை ஒளிரச்செய்தன.
நண்பர்களே,
உண்மைத் தன்மையின் இருப்பு வெறும் ஆராய்ச்சியின் அடிப்படையானதல்ல, மாறாக சேவை மற்றும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்ரீ சித்தூர் மடம், ஜே.எஸ்.எஸ் மகாவித்யா பீடம் ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்கள். கர்நாடகா, தென்னிந்தியா மற்றும் இந்தியாவில் கல்வி, சமத்துவம் மற்றும் சேவையைப் பொருத்தவரை பகவான் பசவேஸ்வராவின் ஆசிகளுடன் இந்த சொற்பொழிவுகள் மேலும் விரிவடைகின்றன. நம் சமூகத்திற்கு பகவான் பசவேஸ்வரா வழங்கியுள்ள ஆற்றல், ஜனநாயகத்தின் கோட்பாடுகள், கல்வி, சமத்துவம் ஆகியவை இன்றும் இந்தியாவின் அடித்தளமாக விளங்குகின்றன.
நண்பர்களே,
விடுதலையின் 75-வது ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில், ‘அனைவரின் முயற்சியுடன்' செயல்பட விடுதலையின் ‘அமிர்த காலம்தான்' உகந்ததாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நாம் அடிமைப்பட்டிருந்த போது கண்ட கனவுகளை நனவாக்குவதற்கான தருணம், இது. இதற்காக நமது முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நண்பர்களே,
கல்வித்துறையில், தேசிய கல்விக் கொள்கை என்ற உதாரணம் இன்று நம் முன்னே உள்ளது. கல்வி என்பது இந்தியாவின் இயற்கையான ஓர் அம்சமாகும். இதை கருத்தில் கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் நம் புதிய தலைமுறையினருக்கு வழங்கப்படவேண்டும். எனவே தான் உள்ளூர் மொழிகளில் பயிலும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
அதேபோல, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் இந்தியாவின் முயற்சிகளால், ஆயுர்வேதத்திற்கும், யோகாவிற்கும் உலகம் முழுவதும் புதிய அடையாளம் கிடைத்துள்ளது. துறவிகளின் முயற்சிகளை உள்ளடக்கிய முன்முயற்சிகளுக்கு ஆன்மீக உணர்வும், தெய்வீக ஆசிகளும் சேர்க்கப்படுகின்றன. உங்கள் அனைவர் மத்தியிலும் கலந்து கொண்டதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். நன்றி.
வணக்கம்!