இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிறப்புமிக்க விருந்தினர்களே,
வணக்கம்.
அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் வருடாந்திர தலைமைத்துவ உச்சிமாநாடு பலதரப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்துள்ளது அருமையாக உள்ளது. இந்தியாவையும், அமெரிக்காவையும் நெருங்கி வர செய்ததில் இந்த அமைப்பின் பணி பாராட்டத்தக்கது.
ஜான் சேம்பர்ஸை பல ஆண்டுகளாக நான் அறிவேன். இந்தியாவின் மீதான அவரது அன்பு மிக வலிமையானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நண்பர்களே,
புதிய சவால்களில் பயணிப்பது என்ற இந்த ஆண்டின் மையப்பொருளானது பொருத்தமான ஒன்று. 2020 ஆம் ஆண்டு துவங்கும் போது, இந்த ஆண்டு இப்படித்தான் இருக்கும் என்று யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? உலகளவிலான பெருந்தொற்று ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. நமது உறுதி, பொது சுகாதார முறைகள், நமது பொருளாதார அமைப்புகள் அனைத்தையும் இது சோதித்துப் பார்க்கிறது.
தற்போதைய சூழலை எதிர்கொள்ள புத்துணர்வான மனநிலை தேவை. மனிதர்களை மையப்படுத்தும் வளர்ச்சிக்கான அணுகுமுறையுடன் கூடிய மனப்போக்கு வேண்டும். அனைவருடனும் ஒத்துழைக்கும் உணர்வு தேவை.
நண்பர்களே,
நமது திறன்களை ஒன்று திரட்டுவது, வறுமையில் இருப்பவர்களை பாதுகாப்பது, நமது குடிமக்களை வருங்காலத்திற்காகப் பாதுகாப்பது ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பாதையில்தான் இந்தியா பயணிக்கிறது. பொதுமுடக்கம் என்னும் பதில் நடவடிக்கையை முதலில் எடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பொது சுகாதார நடவடிக்கையாக முகக்கவசங்களின் பயன்பாட்டை முதலில் அறிவுறுத்திய நாடுகளிலும் இந்தியா ஒன்றாகும். சமூக இடைவெளியைப் பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் மிகவும் முன்னதாகவே மேற்கொண்டோம். கொவிட் மருத்துவமனைகளாக இருக்கட்டும், தீவிர சிகிச்சை பிரிவின் திறன்களாகட்டும், மிகவும் குறுகிய காலத்திலேயே மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. ஜனவரியில் வெறும் ஒரு ஆய்வகம் இருந்த நிலையில், நம்மிடம் தற்போது கிட்டத்தட்ட 1,600 பரிசோதனை மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன.
1.3 பில்லியன் மக்கள் மற்றும் வளங்கள் ஓரளவுக்கே இருக்கும் நாட்டில் இந்த முயற்சிகளின் வெளிப்பாடாக, பத்து லட்சம் மக்களில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் உலகத்திலேயே ஒன்றாக இந்தியா உள்ளது. குணமடைதல் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது வியாபர சமூகம், குறிப்பாக சிறு தொழில்கள், சுறுசுறுப்புடன் திகழ்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத நிலையில் தொடங்கிய அவர்கள், உலகத்திலேயே இரண்டாவது பெரிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராக நம்மை ஆக்கியுள்ளனர்.
சவாலுக்கு சவால் விடுத்து வலுவாக உருவாகும் இந்தியாவின் உணர்வை ஒட்டி இது உள்ளது. கடந்த இரு மாதங்களில், கொவிட், வெள்ளம், புயல்கள், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் என பலவற்றை எதிர்த்து நாடு போரிட்டுள்ளது. ஆனால், மக்களின் உறுதியை இது இன்னும் வலுப்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
இந்த ஒட்டுமொத்த கொவிட்-19 மற்றும் பொதுமுடக்க காலத்தில், ஒன்றின் மீது இந்திய அரசு மிகவும் தெளிவாக இருந்தது– ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்திய ஏழைகளுக்கான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் உலகத்தில் எங்குமே காணமுடியாத மிகப்பெரிய திட்டமாகும். 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இரு மடங்காகும். 80 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. 345 மில்லியன் விவசாயிகளுக்கும், தேவை உள்ள மக்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வேலைவாய்ப்பு கிடைத்து, கிட்டத்தட்ட 200 மில்லியன் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன.
நண்பர்களே,
பல்வேறு விஷயங்களை இந்த பெருந்தொற்று பாதித்தது. ஆனால், 1.3 பில்லியன் இந்தியர்களின் குறிக்கோள்களையும், லட்சியங்களையும் இது பாதித்து விடவில்லை. விரிவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் கடந்த சில மாதங்களில் செய்யப்பட்டன. உலகின் மிகப்பெரிய வீட்டுவசதித் திட்டத்திற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. ரயில், சாலை மற்றும் விமான இணைப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை கட்டமைப்பதற்காக பிரத்யேக டிஜிட்டல் மாதிரியை நமது நாடு உருவாக்கி வருகிறது. வங்கியியல், கடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் காப்பீட்டை லட்சக்கணக்கானவர்களுக்கு வழங்க நிதி–தொழில்நுட்பத்தில் சிறந்ததை நாம் பயன்படுத்துகிறோம். உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும், சர்வதேச சிறந்த நடைமுறைகளையும் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
சர்வதேச விநியோக சங்கிலிகளை அமைப்பதற்கான முடிவு செலவை மட்டுமே சார்ந்ததாக இருக்கக் கூடாது என்பதை இந்த பெருந்தொற்று உலகத்துக்குக் காட்டியுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையிலும் இது இருக்க வேண்டும். புவியியல் கட்டுப்படியாதலுடன், நம்பகத்தன்மையையும், கொள்கை நிலைத்தன்மையையும் நிறுவனங்கள் தற்போது எதிர்பார்க்கின்றன. இந்த அனைத்து குணநலன்களும் இந்தியாவில் உள்ளன.
இதன் விளைவாக, அயல்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது. அமெரிக்கா அல்லது வளைகுடாவாக இருக்கட்டும், ஐரோப்பா அல்லது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும், உலகம் நம்மை நம்புகிறது. இந்த வருடத்தில் 20 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டை நாம் பெற்றிருக்கிறோம். கூகிள், அமேசான் மற்றும் முபடாலா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகியவை இந்தியாவுக்கான நீண்ட கால திட்டங்களை அறிவித்துள்ளன.
நண்பர்களே,
வெளிப்படைத்தன்மை மிகுந்த மற்றும் யூகிக்கக் கூடிய வரிவிதிப்பு முறையை இந்தியா வழங்குகிறது. நமது சரக்கு மற்றும் சேவை வரி முறையானது, ஒருங்கிணைக்கப்பட்ட, முழுவதும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மறைமுக வரி விதிப்பு முறையாகும். ஒட்டுமொத்த நிதி அமைப்பின் ஆபத்தையும் திவாலாதல் மற்றும் நொடித்துப்போதல் குறியீடு குறைத்துள்ளது. நமது விரிவான தொழிலாளர் சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களின் சுமையைக் குறைத்துள்ளது. பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் இது அளிக்கும்.
நண்பர்களே,
வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முதலீட்டின் முக்கியத்துவத்தை யாரும் புறந்தள்ள முடியாது. இதன் தேவை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டு பக்கங்களையும் நாம் கையாண்டு வருகிறோம். உலகத்திலேயே குறைவான வரி விதிப்புள்ள மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கக் கூடிய நாடாக இந்தியாவை நாம் உருவாக்கி வருகிறோம். கட்டாய மின்–தளம் சார்ந்த 'முகமில்லா மதிப்பீடு' மக்களுக்கு பெரிய அளவில் உதவும். வரி செலுத்துவோர் சாசனமும் இது போன்றது தான். பத்திர சந்தைகளில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் முதலீட்டாளர்களின் அணுகலை எளிமையாக்கும். உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான 'அரசாங்க வள நிதி' மற்றும் 'ஓய்வூதிய நிதி' ஆகியவற்றுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் செய்யப்பட்ட அயல்நாட்டு நேரடி முதலீடு 2019-இல் 20 சதவீதம் உயர்ந்தது. உலகளாவிய அயல்நாட்டு நேரடி முதலீடு 1 சதவீதம் குறைந்த நிலையில் இது நடந்துள்ளது. ஓளிமயமான மற்றும் இன்னும் சுபிட்சமான எதிர்காலத்தை மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் உறுதி படுத்துகின்றன. வலுவான சர்வதேச பொருளாதாரத்துக்கும் இது பங்காற்றும்.
நண்பர்களே,
1.3 பில்லியன் இந்தியர்கள் ஒரே குறிக்கோளுடன் செயலாற்றி வருகிறார்கள்– 'தற்சார்பு இந்தியா' என்னும் இலக்கை அடைவது தான் அது. உள்ளூரை உலகத்துடன் 'தற்சார்பு இந்தியா' இணைக்கிறது. சர்வதேச சக்தியாக இந்தியா உருவெடுப்பதற்கு இது உதவுகிறது. உலகளாவிய நன்மையே நமது குறிக்கோள் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. நமது உள்நாட்டு தேவைகள் அதிகளவில் இருந்தாலும், நம்முடைய சர்வதேசப் பொறுப்பில் இருந்து நாம் விலகிவிடவில்லை. உலகின் மிகப்பெரிய பொது மருந்து உற்பத்தியாளராக நாம் பொறுப்புடன் விளங்குகிறோம். தொடர் மருந்து விநியோகங்களை உலகத்துக்கு நாம் உறுதி செய்திருக்கிறோம். கொவிட்-19-க்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். தற்சார்பான, அமைதியான இந்தியா சிறந்த உலகத்தை உறுதி செய்கிறது.
மந்தமான சந்தையில் இருந்து சர்வதேச மதிப்பு சங்கிலிகளின் இதயத்தில் வீற்றிருக்கும் சுறுசுறுப்பான உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவது தான் 'தற்சார்பு இந்தியாவின்' லட்சியமாகும்.
நண்பர்களே,
நமக்கு முன்னால் உள்ள சாலை முழுக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளில் இந்த வாய்ப்புகள் உள்ளன. முக்கிய பொருளாதார துறைகளையும், சமூக துறைகளையும் இது உள்ளடக்கி உள்ளது. நிலக்கரி, சுரங்கங்கள், ரயில்வே, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணு சக்தி ஆகியவை சமீபத்தில் திறந்து விடப்பட்டுள்ள துறைகளாகும்.
கைபேசிகள் மற்றும் மின்னணு, மருத்துவ சாதனங்கள், மருந்துகள் துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதர முன்னணி துறைகளுக்கும் இத்தகைய திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. வேளாண் சந்தைப்படுத்துதலில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய வேளாண் கடன் வசதி பல்வேறு வாய்ப்புகளைக் கொண்டு வரும்.
நண்பர்களே,
இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகளை வழங்கும் நம்பிக்கையுள்ள அரசு உங்களிடம் இருக்கிறது. தொழில் செய்வதை எளிமைப் படுத்துதல் இந்த அரசுக்கு எவ்வளவு முக்கியமோ, வாழ்க்கை முறையை எளிதாக்குவதும் அதே அளவுக்கு முக்கியமாகும். மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ள இளமையான நாட்டை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தேசத்தை புதிய உயரங்களுக்கு இட்டு செல்லத் துடிக்கும் நாட்டை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடப் போகும் சமயத்தில் இவை நடந்து வருகின்றன. அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கை தொடர்ச்சியுடைய நாட்டை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் மீது உறுதியாக உள்ள நாட்டை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாருங்கள், எங்கள் பயணத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
மிக்க நன்றி
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்