எனது நண்பர் மாண்புமிகு அதிபர் இமானுவேல் மாக்ரோன் அவர்களே,
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களே,
சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஜோதிர் ஆதித்திய சிந்தியா அவர்களே,
டாடா டிரஸ்ட் தலைவர் திரு. ரத்தன் டாடா அவர்களே,
டாடா சன்ஸ் தலைவர் திரு. என் சந்திரசேகரன் அவர்களே,
ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி திரு. கேம்ப்பெல் வில்சன் அவர்களே,
ஏர்பஸ் தலைமை செயல் அதிகாரி திரு. கில்லாயும் பாவ்ரி அவர்களே,
முதற்கண் ஏர் இந்தியா ஏர்பஸ் நிறுவனங்கள் செய்து கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நான் பாராட்டுகின்றேன். குறிப்பாக இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனது நண்பர் அதிபர் மேக்ரோனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தியா- பிரான்ஸ் இடையிலான உறவு வலுவடைவதற்கும், இந்திய சிவில் விமான போக்குவரத்து தொழில் வெற்றியடைவதற்கும், சாட்சியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. இன்று, எங்களது சிவில் விமானப் போக்குவரத்து துறை இந்தியாவின் வளர்ச்சியில் ஒன்றுபட்ட பகுதியாக உள்ளது. இந்த துறையை வலுப்படுத்துவது, நமது தேசிய உள்கட்டமைப்பு உத்தியின் முக்கிய அம்சமாகும். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் விமான நிலையங்கள் 74-ல் இருந்து 147 ஆக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய இருமடங்காகும். உடான் என்னும் நமது பிராந்திய இணைப்பு திட்டத்தின் மூலம் நாட்டின் தொலைதூரப்பகுதிகள் விமானப் போக்குவரத்தின் மூலம் இணைப்பை பெற்றுள்ளன. இது மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு ஊக்குவிப்பாக அமையும்.
இந்தியா உலகின் விமானப் போக்குவரத்து பிரிவில் 3-வது பெரிய சந்தையாக விரைவில் மாறவுள்ளது. பல்வேறு மதிப்பீடுகளின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு தேவைப்படும் விமானங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இன்றைய வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு இதற்கு பெரிதும் உதவும். இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா- மேக் பார் தி வேர்ல்டு’ தொலைநோக்கின் கீழ், விமானங்கள் உற்பத்தியில் பல புதிய வாய்ப்புகளுக்கு வழி ஏற்பட்டுள்ளது. பசுமை மற்றும் பழுப்பு விமான நிலையங்களுக்கான 100 சதவீத நேரடி அந்நிய முதலீடுகளுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போல விமான களமேலாண்மை சேவை, பராமரிப்பு, பழுதுநீக்குதல் போன்றவற்றுக்கும் 100 சதவீத எப்டிஐ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத்துறையில் இந்தியா ஒரு மையமாக மாற வாய்ப்புள்ளது. இன்று இந்தியாவில், உலகளவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களின் விமானங்களும் வந்து செல்கின்றன. இந்த வாய்ப்புகளை அவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.
நண்பர்களே, ஏர் இந்தியா ஏர்பஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் இந்திய-பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டாண்மையில் முக்கிய மைல் கல்லாகும். சில மாதங்களுக்கு முன்பு 2022 அக்டோபர் மாதம் வதோதராவில் பாதுகாப்பு போக்குவரத்து விமான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினேன். டாடாவும் ஏர்பஸ்சும் இத்திட்டத்துக்கு 2.5 பில்லியன் யூரோ முதலீட்டுடன் பங்குதாரர்களாக அமைந்தனர். பிரெஞ்சு நிறுவனமான சாப்ரான், விமானப் பராமரிப்பு, பழுதுநீக்குதல் பிரிவின் மிகப்பெரிய வசதியை இந்தியாவில் உருவாக்க முன்வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா- பிரான்ஸ் கூட்டாண்மை இந்த ஒப்பந்தம் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. பாதுகாப்பு, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை, உலக உணவுப் பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு என எல்லா விஷயங்களிலும் இந்தியாவும், பிரான்சும் இணைந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகின்றன.
அதிபர் மேக்ரோன் அவர்களே, நமது இருதரப்பு உறவுகள் இந்த ஆண்டில் மேலும் உச்சத்தை எட்டும் என நான் நம்புகிறேன். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் இருவரும் இணைந்து பாடுபட மேலும் அதிக வாய்ப்புகளை நாம் பெறுவோம். மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு- இது பிரதமர் உரையின் தோராயமான மொழிப்பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
.