வணக்கம் நண்பர்களே,
நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் உங்களைப் பார்க்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்! உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக!
சிறப்பான சூழலில், நாடாளுமன்றக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஒரு பக்கம், கொரோனா தொற்று, மறுபக்கம் நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது; அனைத்து எம்.பி.க்களும் கடமை ஆற்ற வந்துள்ளனர். இந்த முயற்சிக்காக, உங்களைப் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்ஜெட் கூட்டத் தொடரை, குறித்த நேரத்துக்கு முன்பே முடிக்க வேண்டியிருந்தது. இந்த முறை, நாடாளுமன்றம் ஒரு நாளைக்கு இரு முறை நடக்கவுள்ளது. மாநிலங்களவைக்காக ஒரு முறையும், மக்களைவைக்காக ஒரு முறையும் நடக்கவுள்ளது. இதற்கான நேரத்தையும் மாற்ற வேண்டியிருந்தது. சனி-ஞாயிறு வார இறுதி விடுமுறைகள், இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இதை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளனர் மற்றும் கடமையைத் தொடர முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், பல விஷயங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன. மக்களவையில் எவ்வளவு அதிகம் பேசுகிறோமோ, எவ்வளவு விஷயங்கள் பேசுகிறோமோ, அந்தளவுக்கு நாடு பயன் அடையும், நமது பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பதை நமது அனுபவம் கூறுகிறது.
இந்த முறையும், சிறந்த பாரம்பரியத்தை அனைத்து எம்.பி.க்கள் ஒன்றிணைந்து பின்பற்றி, அதற்கு மதிப்பு சேர்ப்பர் என நம்புகிறேன். கொரோனா ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ், நாம் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதற்கு ஒரு மருந்து வரும் வரை, நமது அணுகுமுறையில் எந்த தளர்வும் இருக்க முடியாது. உலகின் ஏதாவது ஒரு இடத்திலிருந்து கூடிய விரைவில், தடுப்பூசி வரும் என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியில் நமது விஞ்ஞானிகளும் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து நாம் கூடிய விரைவில் மீள முடியும்.
இந்த அவைக்கு, குறிப்பாக இந்த கூட்டத் தொடரில், மற்றொரு முக்கியமான பொறுப்பு உள்ளது. இன்று நமது தீரமான ராணுவ வீரர்கள் எல்லையில் கடினமான சூழலில், உற்சாகத்துடன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மழையும் இன்னும் சில நாளில் தொடங்கவுள்ளது. தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் எல்லையில் நமது வீரர்கள் நம்பிக்கையுடன் இருப்பது போல், இந்த அவையும், உறுப்பினர்களும், ஒரு மித்த குரலில், நாடு ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளது என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டும். ஒட்டு மொத்த அவையும், ஒரு மனதாக, நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த வலுவான தகவலை, இந்த அவையும், உறுப்பினர்களும் தெரிவிப்பர் என நம்புகிறேன். கொரோனா சமயத்தில், நீங்கள் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாது. உங்களையும், உங்கள் நண்பர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அனைத்து தகவலும் கிடைக்கும். அது உங்களுக்கு சிக்கலான விஷயம் அல்ல. ஆனால், நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு, எனது தனிப்பட்ட வேண்டுகோள்.
நன்றி நண்பர்களே!