வணக்கம் சௌராஷ்ட்ரா! வணக்கம் தமிழ்நாடு!
குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களே, ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, திரு எல். முருகன் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
இன்று தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு சௌராஷ்டிராவில் உள்ள அனைவரும் அன்பான வரவேற்பை அளிக்கின்றனர். இதே உணர்வுடன் தமிழ்நாட்டில் இருந்து காணொளி வாயிலாகவும் எனது அன்பிற்குரியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த 2010- ஆம் ஆண்டு மதுரையில் சௌராஷ்டிரா சங்கமம் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தினேன். சௌராஷ்டிராவில் இருந்து 50,000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதேபோன்று இன்று தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்துள்ளீர்கள்.
நண்பர்களே,
விடுதலையின் அமிர்த காலத்தில் சௌராஷ்ட்ரா- தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார விழாக்களின் புதிய பாரம்பரியத்தை நாம் காண்கிறோம். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு மற்றும் குஜராத்தின் சங்கமம் மட்டுமல்ல. தேவி மீனாட்சி மற்றும் தேவி பார்வதியின் வடிவில் தேவி சக்தியை வழிபடும் கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது. பகவான் சோமநாதர் மற்றும் பகவான் ராமநாதரின் வடிவத்தில் பகவான் சிவனின் உணர்வைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகவும் இது உள்ளது. நர்மதா மற்றும் வைகை ஆறுகளின் சங்கமம், இது. தாண்டியா மற்றும் கோலாட்டம் ஆகியவை சங்கமிக்கும் நிகழ்ச்சி. துவாரகா மற்றும் மதுரை போன்ற புனித நகரங்களின் பாரம்பரியங்களின் சங்கமம். சௌராஷ்டிரா- தமிழ் சங்கமம் என்பது, சர்தார் படேல் மற்றும் சுப்பிரமணிய பாரதியின் சங்கமம் ஆகும். இந்த உறுதிப்பாடுகளோடு நாம் முன்னேற வேண்டும். இந்த பாரம்பரிய கலாச்சாரத்துடன் தேச கட்டமைப்பை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நண்பர்களே,
தனது வேற்றுமையையே சிறப்பம்சமாகக் கருதும் நாடு, இந்தியா. நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை எல்லா இடங்களிலும் வேற்றுமை நிரம்பியுள்ளது. இருந்த போதும் இந்த வேற்றுமை நம்மை பிரிக்கவில்லை, மாறாக நமது இணைப்பு, உறவை மேலும் வலுப்படுத்துகிறது. நதிகளின் சங்கமம் முதல் கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளின் சங்கமம் வரை பல நூற்றாண்டுகளாக இத்தகைய பாரம்பரியங்களை நாம் போற்றி பாதுகாத்து வருகிறோம்.சௌராஷ்டிரா- தமிழ் சங்கத்தின் ஆற்றல் இதுதான்.
தமிழ்நாட்டில் இருந்து அலைகடலென திரண்டு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒட்டுமொத்த சங்கமம் நிகழ்ச்சியில் நாம் கண்ட உணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது எதிர்கால தலைமுறையையும் அதற்கு தயார்படுத்த வேண்டும். மிக்க நன்றி. வணக்கம்!