எனது அமைச்சரவை தோழர்கள் நிர்மலா சீதாராமன் அவர்களே, பியூஷ் கோயல் அவர்களே, டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்களே, முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் அவர்களே, சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே அவர்களே, அனைத்து விஞ்ஞானிகளே, தொழில்துறை, கல்வித்துறை பிரதிநிதிகளே, வணக்கம்!
சிஎஸ்ஐஆர்-ன் முக்கியமான கூட்டம், இன்று சிக்கலான நேரத்தில் நடைபெறுகிறது. இந்த உலகத்தின் முன்பாக, கொரோனா பெருந்தொற்று, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஆனால், மனித குலத்துக்கு இதுபோன்ற பெரிய சிக்கல்கள் எழுந்த போதெல்லாம், அறிவியல் சிறந்த எதிர்காலத்துக்கான வழிகளை தயார் செய்துள்ளதை வரலாறு கண்டுள்ளது.
நெருக்கடியான காலங்களில் தீர்வுகளையும், வாய்ப்புகளையும் கண்டறிவதன் மூலம் புதிய வலிமையை உருவாக்குவதே அறிவியலின் அடிப்படை இயல்பாகும். இதைத்தான் இந்தியா மற்றும் உலகத்தின் விஞ்ஞானிகள் பல நூற்றாண்டுகளாக செய்து வருகின்றனர், அதைத்தான் இன்றும் அவர்கள் தொடர்ந்தும் வருகின்றனர். நமது விஞ்ஞானிகள் கடந்த ஒன்றரை ஆண்டாக, கோட்பாட்டிலிருந்து சிந்தித்து, அதனை பரிசோதனைக்கூடங்களில் ஆராய்ச்சி செய்து, செயல்படுத்தி, சமுதாயத்துக்கு வழங்கிய வேகமும், அளவும் அசாதாரணமானதாகும்.
பெருந்தொற்றிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காக, ஓராண்டுக்குள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் வேகமும், ஆற்றலும் எதிர்பாராதவை. வரலாற்றில் இத்தகைய பெரிய விஷயம் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும். கடந்த நூற்றாண்டில், மற்ற நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடந்தன. இந்தியா அவற்றைப் பெற பல ஆண்டுகள் காத்திருந்தது. ஆனால், இன்று நமது நாட்டின் விஞ்ஞானிகள், பிற நாடுகளுக்கு இணையாக, அதே வேகத்துடன் பணியாற்றியுள்ளனர். கொவிட்-19 தடுப்பூசிகள், பரிசோதனை உபகரணங்கள், தேவையான கருவிகள், கொரோனாவுக்கு எதிரான புதிய செயல்திறன் மிக்க மருந்துகள் ஆகியவற்றில் இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக மாற்றிய விஞ்ஞானிகளின் சாதனை பாராட்டுதலுக்குரியது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாகப் பயன்படுத்துவது தொழில் மற்றும் சந்தைக்கு சிறந்தது. இந்தப் பெரும் போரில், உங்களது அளப்பரிய திறமையால் இது சாத்தியமானது. இந்த சூழலில், சிஎஸ்ஐஆர்-ன் விஞ்ஞானிகள் பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பங்களித்துள்ளனர். இந்தச் சாதனைக்காக, விஞ்ஞானிகள், தொழில்துறையினர், நிறுவனங்களை, மொத்த நாட்டின் சார்பில் பாராட்டி நன்றி தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, எந்த நாட்டின் சந்தைக்கும், தொழில்துறைக்கும் இடையே சிறந்த உறவு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு உள்ளதோ, அந்த நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புதிய உச்சத்தை எட்டும். நம் நாட்டில் அறிவியல், சமுதாயம் மற்றும் தொழில் துறையை ஒரே பக்கத்தில் வைத்திருக்கும் ஏற்பாட்டு நிறுவனமாக சிஎஸ்ஐஆர் பணியாற்றி வருகிறது. நமது இந்த நிறுவனத்துக்கு தலைமைப்பண்பை வழங்கிய சாந்தி ஸ்வரூப் பட்னாகர் போன்ற திறமை மிக்க விஞ்ஞானிகளை இந்நிறுவனம் நாட்டுக்கு அளித்துள்ளது. சிஎஸ்ஐஆர் ஆற்றல் மிக்க ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் காப்புரிமையைக் கொண்டுள்ளது. நாடு எதிர்நோக்கும் பல சவால்களைத் தீர்க்க இந்நிறுவனம் பாடுபட்டு வருகிறது. இன்றைக்கும், நானும், நாட்டு மக்களும், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களிடம் மிக அதிகமாக எதிர்பார்க்கிறோம்.
நண்பர்களே, சிஎஸ்ஐஆர், ஆராய்ச்சிக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. நாடு எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு கண்டுள்ளீர்கள். நாட்டின் இன்றைய இலக்குகள், 21-ம் நூற்றாண்டின் நாட்டு மக்களின் கனவுகள் ஆகியவை ஓர் அடித்தளத்தின் அடிப்படையிலானவை. ஆகவே, சிஎஸ்ஐஆர் போன்ற நிறுவனங்களின் இலக்குகளும் அசாதாரணமானவை. இன்றைய இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், உயிரி தொழில்நுட்பம் முதல் மின்கல தொழில்நுட்பங்கள் வரை, வேளாண்மை முதல் வானியல் வரை, பேரிடர் மேலாண்மை முதல் பாதுகாப்பு தொழில்நுட்பம் வரை, தடுப்பூசிகள் முதல் மெய்நிகர் எதார்த்தம் வரை ஒவ்வொரு துறையிலும் அதிகாரமளிப்பதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறது. நீடித்த வளர்ச்சி மற்றும் தூய்மையான மின்சாரத் துறைகளில் இந்தியா உலகுக்கே வழிகாட்டியுள்ளது. இன்று, மென்பொருள் முதல் செயற்கைக்கோள் வரை, இந்தியா மற்ற நாடுகளின் வளர்ச்சியை அதிகரித்து வருவதுடன், உலகத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உந்துசக்தி என்னும் பங்கை ஆற்றி வருகிறது. எனவே, இந்தியாவின் இலக்குகள், இந்தப் பத்தாண்டின் தேவைகளுக்கு ஏற்றதாகவும், அடுத்த பத்தாண்டின் தேவைகளுக்கு உரியதாகவும் இருக்க வேண்டும்.
நண்பர்களே, பருவநிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் வல்லுனர்கள் தொடர்ந்து பெரும் அச்ச உணர்வை வெளியிட்டு வருகின்றனர். அனைத்து விஞ்ஞானிகளும், நிறுவனங்களும் அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
கார்பன் விடுவிப்பு, எரிசக்தி சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் வரை ஒவ்வொரு துறையிலும் நீங்கள் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். சமுதாயத்தையும், தொழில்துறையையும் சிஎஸ்ஐஆர் ஒன்றாகக் கொண்டு செல்ல வேண்டும். கடந்த ஆண்டு நான் தெரிவித்த யோசனையின் அடிப்படையில், சிஎஸ்ஐஆர் மக்களிடம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வாசனைத் திரவிய இயக்கத்தில் சிஎஸ்ஐஆர்-ன் பங்கு அளப்பரியது. இன்று , நாட்டின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மலர்வளர்ப்பு மூலம் தங்கள்
வாய்ப்புகளை அதிகரித்துள்ளனர். ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பெருங்காயத்தை இறக்குமதி செய்து வந்தோம். இறக்குமதியை நம்பியிருந்த நிலையை மாற்றி, இந்தியாவுக்குள்ளேயே பெருங்காய உற்பத்திக்கு
சிஎஸ்ஐஆர் உதவியது.
நண்பர்களே,நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், குறிப்பிட்ட காலவரையறைக்குள் சாத்தியமான தீர்மானங்களை முன்வைத்து உறுதியான செயல்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தக் கொரோனா பெருந்தொற்று வளர்ச்சியின் வேகத்தைப் பாதித்திருக்கக்கூடும். ஆனால், தற்சார்பு இந்தியாவின் கனவை நனவாக்கும் உறுதிப்பாடு அப்படியேதான் உள்ளது. உங்களது திறமை மற்றும் பாரம்பரியம், உங்கள் நிறுவனத்தின் கடின உழைப்பு ஆகியவற்றுடன் நாடு புதிய இலக்குகளை இதே வேகத்தில் எட்டுவதுடன், 130 கோடி நாட்டு மக்களின் கனவை நனவாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நம் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பெருமளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்மை முதல் கல்வித்துறை வரை ஒவ்வொரு துறையிலும், நமது எம்எஸ்எம்இ-க்கள், ஸ்டார்ட் அப்களுக்கு மகத்தான வளம் நிறைந்து கிடக்கின்றது. கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு துறையும் அடைந்த வெற்றியை மீண்டும் கொண்டு வர அனைத்து விஞ்ஞானிகளும், தொழில்துறையும் முன்வரவேண்டும். நல்ல உடல்நலத்துடன் நீங்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று வாழ்த்துவதுடன், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்!