நமோ புத்தாய!
நமோ குருப்யோ!
மேதகு குடியரசுத் தலைவர் அவர்களே, இதர விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
உங்கள் அனைவருக்கும் இனிய தம்மா சக்கர தினம் மற்றும் ஆஷாத பூர்ணிமா வாழ்த்துகள். இன்று குரு பூர்ணிமாவையும் நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளில்தான், ஞானம் பெற்ற பிறகு உலகிற்கு தமது முதல் சமய உரையை பகவான் புத்தர் அருளினார். அறிவு எங்கு உள்ளதோ, அங்கு முழு நிறைவு இருக்கும் என்று நம் நாட்டில் கூறப்படுகிறது. இவ்வாறு தெரிவிப்பது புத்தராகவே இருக்கும்போது உலக நன்மையுடன் இணைந்த தத்துவமாக இயற்கையாகவே அது மாறுகிறது. துறவறம் மற்றும் சகிப்புத் தன்மையில் வேரூன்றி இருக்கும் புத்தர் இதனைக் கூறுகையில் இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, தர்மத்தின் ஒட்டுமொத்த சுழற்சியும் துவங்குகிறது. அன்று, வெறும் 5 சீடர்களுக்கு மட்டுமே அவர் அருளுரையை வழங்கினார், ஆனால் இன்றோ புத்தரின் மீது பற்று கொண்டுள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்தத் தத்துவத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.
நண்பர்களே,
முழு வாழ்க்கை மற்றும் நிறைவான அறிவிற்கான ஒழுங்குமுறையை சாரநாத்தில் பகவான் புத்தர் நமக்கு அளித்தார். துன்பத்திற்கான காரணத்தையும் அதை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதையும் அவர் விளக்கினார். புனிதமான எண்வகை சூத்திரங்கள் அல்லது வாழ்க்கைக்கான எட்டு மந்திரங்களை பகவான் புத்தர் நமக்காக வழங்கினார். இவை, ‘சம்மடித்தி’ (சரியான புரிதல்), ‘சம்மசங்கப்பா’ (சரியான தீர்வு), ‘சம்மவச்சா’ (சரியான பேச்சு), ‘சம்மகம்மந்தா’ (சரியான நடத்தை), ‘சம்ம அஜீவா' (சரியான வாழ்வாதாரம்), ‘சம்மவயமா’ (சரியான முயற்சி), ‘சம்ம சதி' (சரியான கவனம்) மற்றும் ‘சம்ம சமதி' (தியானத்தில் சரியான முழு ஈடுபாடு அல்லது ஒற்றுமை). நமது மனம், பேச்சு மற்றும் தீர்வு மற்றும் நமது செயல் மற்றும் முயற்சிகளுக்கு இடையே இணக்கம் இருந்தால் துன்பத்தில் இருந்து விலகி மகிழ்ச்சியை நம்மால் அடைய முடியும். நல்ல தருணங்களில் பொது நலனிற்காக பணியாற்ற இது நமக்கு ஊக்கமளிப்பதுடன், கடினமான நிலைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலையும் நமக்கு அளிக்கிறது.
நண்பர்களே,
இன்றைய கொரோனா பெருந்தொற்றின் காலகட்டத்தில் பகவான் புத்தர் மிகவும் பொருத்தமாக இருக்கிறார். புத்தர் காட்டிய பாதையை பின்பற்றுவதன் மூலம் மிகவும் கடினமான சவால்களையும் நாம் எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பதை உலகம் உணர்த்தியுள்ளது. புத்தரின் போதனைகளைப் பின்பற்றி இன்று அனைத்து நாடுகளும் ஒற்றுமையாகவும் மற்றொருவரது சக்தியாகவும் மாறியுள்ளன. இந்த வழியில் சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் ‘பிரார்த்தனையுடன் அன்பு செலுத்துதல்' என்ற முன்முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
நண்பர்களே,
न ही वेरेन वेरानि,
सम्मन्तीध कुदाचनम्।
अवेरेन च सम्मन्ति,
एस धम्मो सनन्ततो॥
என்று தர்ம பாதை கூறுகிறது.
அதாவது, பகைமை, பகைமையைத் தணிக்காது. மாறாக, அன்பு மற்றும் பெரும் மனம் பகைமையைத் தணிக்கும். புத்தரைப் பற்றிய இந்த அறிவினால், மனித சமூகத்தின் இந்த அனுபவம் பலமடைந்து, வெற்றி மற்றும் செழிப்பின் புதிய உச்சத்தை உலகம் அடையும்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியமாக இருந்து, மனித சமூகத்திற்கு தொடர்ந்து சேவையாற்றுங்கள்!
நன்றி!
குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.