அடுத்த பெருந்தொற்றில் இருந்து உலகத்தை காக்க வேண்டிய தேவை குறித்து வலியுறுத்தினார்
பெருந்தொற்றின் போது நிலைமையை சமாளிக்கவும், தகவல் தொடர்புக்கும், வசதிக்கும், ஆறுதலுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் நமக்கு உதவியது: பிரதமர்
தடங்கல்களால் கவலையடைய தேவையில்லை, சீரமைத்தல் மற்றும் தயாராக இருத்தல் ஆகிய இரு தூண்களின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர்
ஒற்றுமை உணர்வு மற்றும் மனிதம் சார்ந்த அணுகல் மூலம் மட்டுமே உலகம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும்: பிரதமர்
பெருந்தொற்று நமது உறுதிக்கு மட்டுமில்லாமல் கற்பனைக்கும் சவால் விட்டுள்ளது. இன்னும் அதிக அளவில் அனைவரையும் ஒருங்கிணைத்து, கவனம் செலுத்தி அனைவருக்குமான நீடித்த எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டும்: பிரதமர்
உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலியல்களில் இந்தியாவும் ஒன்று, கண்டுபிடிப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் என்ன தேவையோ அதை இந்தியா வழங்குகிறது: பிரதமர்
திறமை, சந்தை, மூலதனம், சூழலியல் மற்றும் திறந்தவெளி கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்ய உலகை நான் வரவேற்கிறேன்: பிரதமர்
ஒற்றுமை உணர்வு மற்றும் மனிதம் சார்ந்த அணுகல் மூலம் மட்டுமே உலகம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும்: பிரதமர்

எனது அருமை நண்பர் அதிபர் மேதகு மேக்ரான் அவர்களே,

பப்லிஸ் குரூப்பின் தலைவர் திரு மாரிஸ் லெவி அவர்களே,

உலகெங்கும் இருந்து கலந்து கொண்டுள்ள பங்கேற்பாளர்களே,

வணக்கம்!

இது போன்ற கடினமான தருணத்தில் விவாடெக் நிகழ்ச்சிக்கு வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ள  ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வையை இந்தத் தளம் பிரதிபலிக்கின்றது. இந்தியாவும் பிரான்சும் பலதரப்பட்ட பிரிவுகளில் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. இவற்றில் தொழில்நுட்பமும், மின்னணுவும் வளர்ந்து வரும் துறைகளாகும். இதுபோன்ற ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சி அடைவது காலத்தின் கட்டாயம். அது, நமது நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கே பேருதவியாக இருக்கும்.

பிரெஞ்ச் ஓபன் போட்டிகளை ஏராளமான இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்தனர். இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்தப் போட்டிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை அளித்தது. அதேபோல பிரான்ஸ் நிறுவனமான ஏடாஸ், இந்தியாவில் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் கேப்ஜெமினி அல்லது இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ என நமது தொழில்நுட்ப திறமையாளர்கள் உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் மற்றும் மக்களுக்காக சேவையாற்றுகிறார்கள்.

நண்பர்களே,

பழக்கவழக்கங்கள் எங்கு தோல்வி அடைகின்றதோ, புதிய கண்டுபிடிப்புகள் உதவிகரமாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். நம் வாழ்நாளில் மிகப்பெரிய இடையூறான கொவிட்-19 பெருந்தொற்றின் போது அது உணரப்பட்டது. அனைத்து நாடுகளும் இழப்புகளை சந்தித்து, எதிர்காலத்தை எண்ணி பதற்றமடைந்தன. நமது ஏராளமான பழக்கவழக்க முறைகளை கொவிட்-19 வெகுவாக சோதித்தது. எனினும் புதிய கண்டுபிடிப்புகள் அதிலிருந்து மீட்டன. புதிய கண்டுபிடிப்புகள் என்பதன் மூலம் நான் குறிப்பிடுவது:

பெருந்தொற்றுக்கு முந்தைய கண்டுபிடிப்புகள்.

பெருந்தொற்றின் போது மேற்கொள்ளப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள்.

பெருந்தொற்றுக்கு முந்தைய கண்டுபிடிப்புகள் குறித்து நான் பேசுகையில், பெருந்தொற்றின் போது நமக்கு உதவிகரமாக இருந்த, ஏற்கனவே புழக்கத்தில் இருந்தவற்றைக் குறிப்பிடுகிறேன். சமாளித்தல், இணைத்தல், வசதி, ஆறுதல் போன்றவற்றை அளிப்பதில் மின்னணு தொழில்நுட்பம் உதவியாக இருந்தது. மின்னணு ஊடகத்தின் வாயிலாக பணிகளை மேற்கொள்ளவும், பிரியமானவர்கள் மற்றும் பிறருடன்  நம்மால்  உரையாடவும் முடியும். இந்தியாவின் உலகளாவிய மற்றும் தனித்தன்மை வாய்ந்த உயிரி மின்னணு அடையாள முறையான ஆதார், ஏழைகளுக்கு உரிய நேரத்தில் நிதி உதவியை அளிக்க எங்களுக்கு உதவியாக இருந்தது. சுமார் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவையும் ஏராளமான வீடுகளுக்கு சமையல் எரிவாயுவையும் எங்களால் வழங்க முடிந்தது. இந்தியாவில் எங்கள் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்வயம், திக்ஷா ஆகிய இரண்டு பொது மின்னணு கல்வி திட்டங்கள் குறுகிய காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தன.

இரண்டாவதாக, பெருந்தொற்றுக்கான புதிய கண்டுபிடிப்புகள் என்பது தகுந்த நேரத்தில் மனித சமூகம் எவ்வாறு எழுச்சி பெற்று, போராட்டத்தை வலுப்படுத்தியது என்பதைக் குறிக்கிறது. இதில் புதிய நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்தியாவின் உதாரணத்தை உங்களுக்குக் கூறுகிறேன். பெருந்தொற்று ஏற்பட்டபோது எங்களிடையே குறைந்த அளவிலான பரிசோதனைத் திறன்கள், முகக் கவசங்கள், முழு உடல் கவச உடைகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் இதர உபகரணங்களே  இருந்தன. இந்த பற்றாக்குறையை எதிர்கொள்வதில் எங்களது தனியார் துறை மிக முக்கிய பங்காற்றியது. கொவிட் மற்றும் பெருந்தொற்று இல்லாத பிரச்சினைகளை காணொலி வாயிலாக தீர்ப்பதற்காக எங்களது மருத்துவர்கள் தொலை மருத்துவ சேவையை பெருமளவில் மேற்கொண்டனர். இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதோடு மேலும் சில, மேம்பாடு மற்றும் சோதனைக் கட்டங்களில் உள்ளன.  அரசு சார்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எங்களது தொழில்நுட்பமான ஆரோக்கிய சேது, தடம் அறிதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களது கோவின் மின்னணு தளம், லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதில் ஏற்கனவே உதவி வருகிறது.‌ புதிய கண்டுபிடிப்புகளில் நாங்கள் ஈடுபடாமல் இருந்தால், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான எங்களது போராட்டம் வலிமை குன்றியதாக இருந்திருக்கும். அடுத்த சவால்கள் நம்மைத் தாக்கும் போது அவற்றை எதிர்கொள்வதில் கூடுதல் தயார் நிலையில் இருப்பதற்காக புதிய கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தை நாம் கைவிடக்கூடாது.

நண்பர்களே,

தொழில்நுட்பம் மற்றும் புதுமை நிறுவனங்களின் உலகில் இந்தியாவின் முன்னேற்றம் பிரசித்தி பெற்றது. எங்களது நாடு உலகின் மிகப்பெரிய புதுமை நிறுவனங்களுக்கான சூழலியல்களின் இருப்பிடமாக உள்ளது. யூனிகார்ன் என்று அழைக்கக்கூடிய சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அண்மைக் காலங்களில் ஏராளமாக உருவாக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வேண்டியவற்றை இந்தியா வழங்குகிறது. திறமை, சந்தை, மூலதனம், சூழலியல், திறந்தவெளி கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

இந்தியாவின் தொழில்நுட்ப திறன் உலகெங்கும் பிரபலமடைந்துள்ளது. உலகின் சில மிக சவாலான பிரச்சினைகளுக்கும் இந்திய இளைஞர்கள் தொழில்நுட்ப தீர்வுகள் அளித்துள்ளனர். இன்று இந்தியாவில் 1.18 பில்லியன் செல்பேசிகள் இருப்பதுடன், 775 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்களும் உள்ளனர். இது, ஏராளமான நாடுகளின் மக்கள் தொகையை விடக் கூடுதலாகும். உலகிலேயே மிக அதிக அளவையும், குறைந்த கட்டணத்தையும் இந்தியாவின் இணைய தரவுகளின் பயன்பாடு பெற்றுள்ளது. இந்தியர்கள், சமூக ஊடகங்களை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். பன்முகத் தன்மை வாய்ந்த மற்றும் விரிவான சந்தை உங்களுக்காகக் காத்திருக்கிறது.

நண்பர்களே,

நவீன பொது மின்னணு உள் கட்டமைப்பைஉருவாக்குவதன் மூலம் மின்னணு விரிவாக்கம் ஆற்றல் பெறுகிறது. எங்களது 150 ஆயிரம் கிராமங்களை 523 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான கண்ணாடி இழை இணைப்புகள் ஏற்கனவே இணைத்துள்ளன. வரும் காலங்களில் மேலும் பல இணைக்கப்படவுள்ளன. பொது வைஃபை இணைப்புகள் நாடுமுழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளன. அதேபோல புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலாச்சாரத்தை வளர்க்கவும் இந்தியா முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அடல் புதுமை இயக்கத்தின் கீழ் 7500 பள்ளிகளில் நவீன புதுமை ஆய்வகங்கள் இயங்குகின்றன. வெளிநாட்டு மாணவர்களுடனும் எங்களது மாணவர்கள் பல்வேறு ஹேக்கத்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் சர்வதேச திறமை மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது.

நண்பர்களே,

கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் ஏராளமான இடையூறுகளை நாம் சந்தித்துள்ளோம். பெரும்பாலானவை இன்னும் நீடிக்கின்றன. எனினும், இடையூறு என்பது  மனச்சோர்வைக் குறிப்பிட வேண்டியதில்லை. மாறாக செப்பனிடுதல் மற்றும் தயார் நிலை ஆகிய இரண்டு அடிப்படை விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் உலக நாடுகள் தடுப்பூசியைத் தேடிக் கொண்டிருந்தன. இன்று நம்மிடையே சில இருக்கின்றன. அதேபோல மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் நமது பொருளாதாரங்களை செப்பனிடும் பணியை நாம் தொடர வேண்டும். இந்தியாவில் நாங்கள் சுரங்கம், விண்வெளி, வங்கி, அணு எரிசக்தி மற்றும் பல்வேறு துறைகளில் பிரம்மாண்டமான சீர்திருத்தங்களை செயல்படுத்தினோம். பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்தியா, ஒரு நாடாக மாற்றத்தை ஏற்றுக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தயார் நிலை என்று நான் குறிப்பிடுவது: அடுத்த பெருந்தொற்றுக்கு எதிராக நமது பூமியை பாதுகாப்பது. சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலான நிலையான வாழ்க்கை முறைகளில் நாம் கவனம் செலுத்துவதை உறுதி செய்வது. ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளில் மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.

நண்பர்களே,

நமது பூமி சந்திக்கும் சவால்களை ஒற்றுமை உணர்வு மற்றும் மனிதத் தன்மையை மையமாகக் கொண்ட அணுகுமுறையால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். இதனை, புதிய நிறுவனங்கள், சமூகம் முன்னெடுத்துச் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். புதிய நிறுவனங்கள் துறையில் இளைஞர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த காலங்களின் சுமைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மாற்றத்திற்கு ஆற்றல் வழங்குவதில் அவர்கள் சிறப்பான இடம் வகிக்கின்றனர். சுகாதாரம், கழிவு மறுசுழற்சி, வேளாண்மை, கற்பதற்கான புதிய சாதனங்கள் உள்ளிட்ட துறைகளை நமது புதிய நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

நண்பர்களே,

திறந்த சமூகம் மற்றும் பொருளாதாரமாக, சர்வதேச முறைகளுக்கு உட்பட்ட நாடாக, இந்தியாவிற்கு கூட்டணிகள் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. எங்களது முக்கிய கூட்டாளிகளுள் பிரான்ஸ், ஐரோப்பா ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிபர் மேக்ரானுடனான கலந்துரையாடலில், மே மாதம் போர்ட்டில் நடைபெற்ற ஐக்கிய ஐரோப்பிய தலைவர்களுடனான எனது உச்சி மாநாட்டில், புதுமை நிறுவனங்கள் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை கூட்டமைப்பு முக்கிய அம்சமாக விளங்கியது. பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் செழிப்பிற்கு காரணமாக புதிய தொழில்நுட்பத்தின் தலைமை பண்பு விளங்குவதாக வரலாறு தெரிவிக்கிறது. எனினும் நமது கூட்டமைப்பு மனித சமூகத்திற்கு சேவையாற்றும் மிகப்பெரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்று நமது நெகிழ்தன்மைக்கு மட்டுமல்லாமல், நமது கற்பனைகளுக்கும் சவாலாக உள்ளது. உள்ளடக்கிய, அன்பான மற்றும் நிலையான எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டமைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு. அதிபர் மேக்ரானைப் போல அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் சாத்தியக்கூறுகள் அதுபோன்ற எதிர்காலத்தை அடைய உதவிகரமாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi