மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான தர்மேந்திரா அவர்களே, அன்னபூர்ணா தேவி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள அனைத்து ஆசிரியர்களே, உங்கள் மூலமாக இன்று நாட்டின் அனைத்து ஆசிரியர்களுடனும், நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் கல்வியாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று நாடு அவருக்கு மரியாதை செலுத்துகிறது. நமது நல்வாய்ப்பாக இப்போதுள்ள குடியரசுத் தலைவரும் ஆசிரியர் ஆவார். அவரது வாழ்க்கையின்ஆரம்ப காலத்தில் அவர், ஆசிரியராக பணி புரிந்தார். அதுவும் ஒடிசாவின் தொலைதூர பகுதிகளில் பணிபுரிந்தார். ஆசிரியராகவும் இருந்த குடியரசுத்தலைவரால் நீங்கள் கவுரவிக்கப்பட்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான இணை நிகழ்வாகும்.
சுதந்திரத்தின் அமிர்தகால கனவுகளை நிறைவேற்ற நாடு உறுதிபூண்டிருக்கும் நிலையில், மறைந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் கல்வித்துறை முயற்சிகள் நமக்கெல்லாம் உந்துசக்தியாக உள்ளன . இந்த தருணத்தில் தேசிய விருதுகளைப் பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களையும் நான் வாழ்த்துகிறேன். இத்தகைய விருதுகள், மாநிலங்களிலும், வழங்கப்படுகின்றன.
நண்பர்களே,
சற்று நேரத்திற்குமுன் பல ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் பேசினார்கள். மொழிகளும், பிராந்தியங்களும், பிரச்சனைகளும் வேறு வேறொக இருக்கலாம். ஆனால், ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. அதாவது மாணவர்களை நோக்கிய உங்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்பும் தான் அது. உங்களிடையே இருக்கும் இந்த பொதுத்தன்மை மிகவும் முக்கியமானது. வெற்றிகரமான ஆசிரியராக இருப்பவர், ‘இது உங்களுக்கு சாத்தியப்படாது’ என்று கூறுவதன் மூலம் தனது மாணவர்களை ஒருபோதும் ஊக்கம் இழக்க செய்வதில்லை. ஆசிரியரின் மிகப் பெரிய பலம் என்பது, அவரது நேர்மறை சிந்தனையாகும். ஒரு மாணவன் அவனது படிப்புகளில் எவ்வளவு பலவீனமாக இருப்பதும் ஒரு பிரச்சனை அல்ல. சிலரின் செயல்பாடுகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதையும் மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுவதையும் ஓர் ஆசிரியர் செய்யமுடியும்.
இவையெல்லாம் ஆசிரியர்களுக்கான தகுதிகள் ஆகும். ஓர் ஆசிரியர் எப்போதும் நேர்மறையாகவே பேசுவார். எதிர்மறைக் கருத்துக்களைக் கூறி, எவரையும் ஊக்கம் இழக்க செய்வது அவரின் இயல்பாக இருக்காது. இதுதான் மாணவர்களை பிரகாசிக்க வைக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் ஆசிரியர் கனவுகளை விதைக்கிறார். அந்த கனவுகளை மன உறுதியாக மாற்றுவதற்கு போதிக்கிறார். அந்த மாணவர் உறுதியோடு இருக்கும் போது கனவு நனவாகும் என அவர் ஊக்கப்படுத்துகிறார்.
புதிய கனவுகளும், மன உறுதிகளும் சந்திக்கின்ற காலத்தில் நாடு இன்று இருக்கிறது. இந்த தலைமுறை மாணவர்கள் 2047-ல் இந்தியாவின் விதியை நிர்ணயிப்பார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை உங்களின் கைகளில் இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு சேவை செய்யவிருக்கின்ற ஆசிரியர்கள், 2047-ல் நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யவிருக்கிறார்கள்.
தற்போது நமது தேசிய கல்விக்கொள்கை பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இதில் குறைபாடுகளே இல்லை என்று நான் கூறமாட்டேன். எவர்ஒருவரும் அப்படி உரிமை கோர முடியாது. ஆனால், பலர் இதில் சிறப்பை கண்டறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளனர். பழமையான குணங்களை அதிகமாக ஏற்றுக்கொண்டுள்ள நம்மால், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்காது. மகாத்மா காந்தி அவர்கள், சில சந்தேகங்களை அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது என்ன செய்வீர்கள் என்று அவர்களிடம் சிலர் ஒரு முறை கேட்டு இருக்கிறார்கள். நான் பகவத் கீதையிலிருந்து ஏராளமானவற்றை பெற்றிருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதன் பொருள் அதனை அவர் மீண்டும் மீண்டும் படித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் உரிய பொருளைக் கண்டு வெளிச்சம் பெற்றிருக்கிறார்.
அதே போல், கல்வி உலகத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய கல்விக் கொள்கையை 10-12-15 முறை படித்து தீர்வுகளைக் காணவேண்டும். இதனை அரசின் சுற்றறிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது. முழு மனதோடு இதனை நாம் ஏற்க வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய முயற்சி செய்யப்பட்டால் இந்தக் கொள்கை வெற்றியடையும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நமது நாட்டின் ஆசிரியர்கள் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆசிரியர்கள் இந்த முயற்சியின் பகுதியாக மாறினால், நமது ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்.
உங்களின் கடின உழைப்பால் இந்த விருதுகளை வென்றிருக்கிறீர்கள் எனவே, உங்களின் உழைப்பை நான் அங்கீகரிக்கிறேன். கடினமாக உழைக்கின்ற ஒருவரே மற்றவரின் உழைப்பை அங்கீகரிக்கிறார். மற்றபடி உழைக்காத ஒருவர் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறார். தாங்கள் மேற்கொள்ளும் பொறுப்பை நிறைவேற்றுகின்றவர்கள், ஆசிரியர்கள் என்பதில் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். உங்களுக்கு நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி!