மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியை பிரதமர் திரு.நரேந்திர மோடி நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்காக பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1.4 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ரூ.140 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மீண்டும் தொழில் தொடங்க நடைபாதை வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை பாராட்டினார்.
கொவிட் தொற்றையும் பொருட்படுத்தாமல், 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளை அடையாளம் கண்டு, 2 மாதத்துக்குள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
எந்த பேரிடர் ஏற்பட்டாலும், முதலில் ஏழைகளின் வேலை, உணவு மற்றும் சேமிப்பைதான் முதலில் பாதிக்கிறது என பிரதமர் கூறினார்.
ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியபோது, சந்தித்த கஷ்டங்களை அவர் குறிப்பிட்டார்.
முடக்கம் மற்றும் கொவிட் தொற்று பாதிப்பால் ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் சந்தித்த சிரமங்களை குறைக்க முதல் நாளில் இருந்து மத்திய அரசு முயற்சித்ததாக திரு. நரேந்திர மோடி கூறினார். பிரதமரின் ஏழைகள் நலன் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலை வாய்ப்போடு, உணவு, ரேஷன், இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கவும் அரசு அனைத்து முயற்சிகள் எடுத்ததாக அவர் கூறினார்.
மிகவும் பாதிக்ககூடிய மற்றொரு பிரிவினரான நடைபாதை வியாபாரிகள் மீது அரசு கவனம் செலுத்தியதாகவும், அவர்கள் மீண்டும் தொழில் தொடங்க எளிதான மூலதன முதலீடு வழங்குவதற்காக, பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை அரசு அறிவித்தாகவும் பிரதமர் கூறினார். முதல் முறையாக இதுபோன்ற திட்டத்தில், லட்சக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் நேரடியாக இணைந்து பயனடைய தொடங்கியுள்ளதாக திரு. நரேந்திர மோடி கூறினார்.
ஸ்வாநிதி திட்டத்தின் நோக்கம், நடைபாதை வியாபாரிகளுக்கு சுய வேலைவாய்ப்பு, தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை அளிப்பதுதான் என பிரதமர் கூறினார்.
இத்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைபாதை வியாபாரிகளை அறிய வைப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். சாதாரன மக்களையும் இணைக்கும் வகையில் இத்திட்டம் மிகவும் எளிதாக உள்ளது. ஒருவர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், வரிசையில் நிற்க தேவையில்லை எனவும் அவர் கூறினார். வங்கி ஊழியர் மட்டும் அல்லாமல், நகராட்சி ஊழியரும் நடைபாதை வியாபாரிகளிடம் விண்ணப்பத்தை பெற்று செல்ல முடியும்.
இத்திட்டம் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி வழங்குவதாகவும், ஒராண்டுக்குள் கடனை திரும்பிச் செலுத்தினால் கூடுதல் வட்டி தள்ளுபடி சலுகை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொண்டால், பணம் திரும்பி செலுத்தப்படும் சலுகை (கேஷ் பேக்) இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இதன் மூலம், மொத்த சேமிப்பு, மொத்த வட்டியைவிட அதிகமாக இருக்கும். கடந்த 3-4 ஆண்டுகளாக, நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
‘‘மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும் மற்றும் எளிதாக முதலீடு பெறவும் இத்திட்டம் உதவுகிறது,” என பிரதமர் தெரிவித்தார். முதல் முறையாக, லட்சக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் ஒரு அமைப்புக்குள் இணைந்து அடையாளத்தை பெற்றுள்ளனர்.
‘‘இத்திட்டம் ஒருவர் வட்டியிலிருந்து முழுவதும் வெளிவர உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ், 7% வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. வங்கியுடன் இணைந்து ஒரு புதிய தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஷாப்பிங் முறையில் நமது நடைபாதை வியாபாரிகள் பின்தங்கி விடாமல் இருப்பதை, டிஜிட்டல் கட்டண வசதி அளிப்பவர்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என அவர் கூறினார்.
கொரோனா நேரத்தில், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அதிகளவில் மேற்கொண்டனர் எனவும் பிரதமர் கூறினார். நடைபாதை வியாபாரிகளும், டிஜிட்டல் பணபரிமாற்ற முறைக்கு மாற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நடைபாதை வியாபாரிகள், தங்கள் வர்த்தக பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மூலம் மேற்கொள்ள OTT தளத்தை அரசு கொண்டுவரவுள்ளதாகவும் திரு. நரேந்திர மோடி கூறினார்.
பிரதமரின் ஸ்வாநிதி திட்ட பயனாளிகள், உஜ்வாலா கேஸ் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் பெற முடியும் என பிரதமர் கூறினார்.
பிரதமரின் ஜன்தன் திட்டம் மூலம் 40 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளதாகவும், தற்போது அனைத்து பயன்களை நேரடியாக பெறுவதாகவும், அதன் மூலம் அவர்கள் கடன் பெறுவதும் எளிது என பிரதமர் கூறினார். டிஜிட்டல் சுகாதார திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்ட சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.
கடந்த 6 ஆண்டுகளில், நாட்டில் ஏழைகளின் வாழ்வை எளிதாக்க பல நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். முக்கிய நகரங்களில் மலிவான வாடகையில் குடியிருப்புகளை வழங்கும் முக்கிய திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
நாடு முழுவதும் ஒருவர் எங்குவேண்டுமானாலும், எளிதாக ரேஷன் பெற ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் வழி செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 1000 நாட்களில் 6 லட்சம் கிராமங்களில் கண்ணாடியிழை கேபிள் அமைக்கும் திட்டம் நடைபெறவுள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் ஒட்டு மொத்த இந்திய கிராமங்களும் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் இணையும் என்றும், இதன் மூலம் கிராம வாழ்வாதாரம் மேம்படும் என அவர் கூறினார்.
நடைபாதை வியாபாரிகள் சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இது அவர்களின் தொழிலை அதிகரிக்க உதவும் எனவும் அவர் கூறினார்.