கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் மாவட்டங்களின் முக்கிய வீரர்களாக நீங்கள் திகழ்கிறீர்கள். 100 ஆண்டுகளில் காணாத இந்தப் பெரும் பேரிடரின் பேரலைக்கு எதிராக, கிடைக்கின்ற ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, நீங்கள் போரிட்டு வருகிறீர்கள்.
நண்பர்களே, இந்த உரையாடலின் துவக்கமாக, இந்த சேவையில் நீங்கள் சேருவதற்கு நீங்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் பற்றி உங்களுக்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். நீங்கள் குடிமைப் பணி மற்றும் இதர தேர்வுகளுக்காக தயாராகிய போது, உங்களது கடின உழைப்பு மற்றும் அணுகுமுறையில் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்ததை நினைவுபடுத்தி பார்க்கலாம். உங்கள் பகுதியைப் பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்த போது, குறிப்பிட்ட பிரச்சினையை உங்கள் வழியில் சமாளிக்க முடியும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.
உங்களது வெற்றிக்கு அந்த அணுகுமுறை ஒரு ஏணியாக மாறியது. இன்று, நிலவும் சூழல், உங்களது திறமைகளைப் புதிய முறையில் பரிசோதிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. உங்கள் மாவட்டத்தில் சிறிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட உங்களது கடின உழைப்பை கொரோனா தொற்று மிகுந்த சவாலானதாகவும், தேவையானதாகவும் மாற்றியுள்ளது. பெருந்தொற்று போன்ற பேரிடரை எதிர்கொள்ள இந்த உணர்வும், தார்மீகப் பொறுப்பும் முக்கியமானவை ஆகும். இந்த உணர்வுடன் நீங்கள் மக்களை நாடிச் சென்று தொடர்ந்து தீவிரமாகப் போராட வேண்டும்.
நண்பர்களே, இத்தகைய புதிய சவால்களுக்கு இடையே புதிய உத்திகளும், தீர்வுகளும் நமக்கு தேவையாகும். எனவேதான், உள்ளூர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒரு நாடாக ஒன்று சேர்ந்து பணியாற்றுவது அவசியமாகும். இரண்டு நாட்களுக்கு முன்பு, சில மாநிலங்களின் அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தக் கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களிடமிருந்து ஏராளமான ஆலோசனைகளும், தீர்வுகளும் வந்தன. பல்வேறு மாவட்டங்களின் சூழல்களைப் பொறுத்து பல புதுமையான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. இன்றும், சில அதிகாரிகள் தங்களது அனுபவங்களையும், உத்திகளையும் நம் அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
களத்தில் உள்ளவர்களுடன் நடத்திய சில நேரடியான உரையாடல்கள் இதுபோன்ற சூழல்களுக்கு தீர்வு காண பெரிதும் உதவும். அண்மைக்காலங்களிலும் இதுபோன்ற ஆலோசனைகள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை புதுமையானவையாகவும் இருந்தன. கொரோனா பரிசோதனைகளுக்கு நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மக்களை நாடிச் சென்று சோதனைகளை நடத்தியுள்ளதை அறிந்தோம். சில அதிகாரிகள் பள்ளிகளையும், ஊராட்சி கட்டிடங்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
10,15 பேர்கொண்ட குழுக்களாக கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள தலைவர்களையும், மக்களையும் சந்தித்து உரையாடி அவர்களது சந்தேகங்களைப் போக்குவதன் மூலமும், ஏற்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலமும், மக்களின் நம்பிக்கை பன்மடங்கு பெருகும். அனைத்து சந்தேகங்களும், இதனால் நம்பிக்கையாக மாறும்.
உங்களது வருகையும், தொடர்பும், மக்களுக்கு ஏதாவது நேர்ந்தால், எங்கு செல்வது, என்ன செய்வது என்ற அச்சத்தை நீக்கும். உங்களைப் பார்க்கும் போது அவர்களது அச்ச உணர்வு அகலும். இது மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டுவதுடன், தங்கள் கிராமத்தைக் காப்பாற்றும் தைரியத்தையும் ஏற்படுத்தும். கொரோனாவிலிருந்து கிராமங்களை மீட்பதற்கான நீண்டகால விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
நண்பர்களே, நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்து வருவது உண்மைதான். 20 நாட்களுக்கு முன்பு உங்கள் மாவட்டங்களில் இருந்த அழுத்தமான சூழல் தற்போது குறைந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எனினும் மிகக் குறைந்த அளவில் இந்தத் தொற்று இருந்தாலும், அதன் சவால் நீடிக்கும் என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகால அனுபவம் உணர்த்தியிருக்கும். சில நேரத்தில், தொற்று குறையும் போது, மக்கள் அது போய்விட்டதாகக் கருதி எளிதாக கடந்து போவதைக் காண முடியும். ஆனால், நமது அனுபவம் வேறு மாதிரியாக உள்ளது. பரிசோதனைகளை அதிகரிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை கொஞ்சமும் குறைக்கக் கூடாது. அரசு நிர்வாகம், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியவர்களின் கூட்டுப் பொறுப்பு அவசியமாகும்.
உங்கள் மாவட்டங்களில், முகக்கவசங்களை அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற கொரோனா நெறிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்றுவது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரிதும் உதவும். கிராமங்கள் மற்றும் சந்தைகளில் இதனைக் கடைப்பிடிப்பதால் தொற்று வெகுவாகக் குறைய வாய்ப்பு ஏற்படும். பல மாவட்டங்களில் இருந்து சிறப்பான செயல்பாடுகள், தீவிர கண்காணிப்பு போன்ற தகவல்களை நான் பெற்று வருகிறேன். இத்தகைய பகுதிகளில் உங்களது அரும்பணியால், நீங்கள் ஏராளமான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளீர்கள்.
நண்பர்களே, பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றிவரும் அதிகாரிகளின் அனுபவங்கள் மற்றும் களப் பணியின் மூலம் பெறப்படும் தகவல்கள், நடைமுறைக்குத் தகுந்த மற்றும் தரமான கொள்கைகளைத் தயாரிப்பதற்கு உதவிகரமாக இருந்துள்ளன. அனைத்து நிலைகளிலும் மாநிலங்கள் மற்றும் பல்வேறு சம்பந்தப்பட்ட அனைவரது கருத்துக்களை உள்ளடக்கி தடுப்பூசி உத்திகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் அடுத்த 15 நாட்களுக்குத் தேவையான தடுப்பூசி தகவல்களை மாநிலங்களுக்கு அளித்து வருகிறது. இந்த தகவல், தடுப்பூசி கிடைப்பது பற்றிய தெளிவான நிலையை அறிய உதவும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி விநியோகம் மேலும் வலுப்படுத்தப்படும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இது தடுப்பூசி பற்றிய நிச்சயமற்ற நிலையை அகற்றும். தடுப்பூசி கிடைப்பது பற்றிய தகவல்களை ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பரப்பி வந்தால், மக்களிடையே நிலவும் தயக்கத்தைப் போக்க அது உதவும்.
நண்பர்களே, கடந்த கால தொற்றுகளாக இருந்தாலும், தற்போதைய பெருந்தொற்றாக இருந்தாலும், ஒவ்வொரு தொற்று நோயும், நமக்கு புதிய விஷயங்களைக் கற்பித்து வருகின்றன. தொற்றுக்களை சமாளிக்கும் விஷயத்தில், தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும், தொற்று நோயை எதிர்கொள்ளும் முறைகளில் மாற்றத்தையும் நாம் ஏற்படுத்த, அவை நமக்குக் கற்றுத் தந்துள்ளன. உருமாற்றம் செய்வதிலும், வடிவத்தை மாற்றுவதிலும் தொற்று சிறந்து விளங்குவதால், பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான முறைகளும், உத்திகளும் மாறும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
உருமாறும் தொற்றைச் சமாளிக்க நமது விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். புதிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது நிர்வாகத்தின் அணுகுமுறையும், புதிய வழிமுறைகளைக் கையாளும் வகையில் உள்ளதால், நல்ல பயன்கள் கிடைத்து வருகின்றன. உருமாற்றம் அடைந்துள்ள தொற்று, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், தடுப்பூசித் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தேவை அதிகரித்துள்ளது.
தடுப்பூசி வீணாகும் பிரச்சினை மற்றொரு கவலைக்குரிய விஷயமாகும். ஒரு டோஸ் தடுப்பூசி வீணாவது, என்பது, ஒரு நபருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க இயலவில்லை என்று அர்த்தமாகும். எனவே தடுப்பூசி வீணாவதை நிறுத்துவது மிகவும் அவசியமாகும்.
பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும், கிராமங்களிலிருந்து கொரோனாவை அகற்றுவது, சரியான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவது குறித்தத் தகவல்களை மக்களிடம் பரப்ப வேண்டும். ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு ஏற்றவகையில் குறிப்பிடத்தக்க வழிமுறைகளில் தங்களது உத்திகளை வகுப்பதுடன், ஊரக இந்தியாவில் தொற்று இல்லாத நிலையை உறுதி செய்வது உங்களது பொறுப்பும், கடமையும் ஆகும்.
உங்கள் மாவட்டங்களின் தரவுகள் பற்றி நீங்கள் ஆராயும் போது, ஊரகப் பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதி தரவுகளை நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இது ஊரகப் பகுதிகளில் கொரோனா தொற்றைத் தடுக்க பெரிதும் உதவும்.
நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்களுக்கு எளிதான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியமாகும் என்று நான் கடந்த கூட்டத்தில் வலியுறுத்தினேன். ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள், இதர அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். கருப்பு சந்தைகள் தடுக்கப்பட வேண்டும்.
உங்களது முந்தைய முயற்சிகள் மூலம் பெரும் அனுபவத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். உங்களது மாவட்டத்தை தொற்றிலிருந்து மீட்கும் முயற்சியில் நீங்கள் அனைவரும் வெற்றியடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் யாரும் இதுபோன்ற பெரும் பேரிடரைக் கண்டதில்லை. உங்கள் மாவட்டத்தில் உங்களது பொறுப்பு மிகப்பெரியதாகும், மனித நேயத்துடன் விஷயங்களை அணுகவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் அனுபவங்களை நாட்குறிப்பில் எழுதி வையுங்கள். எதிர்காலத் தலைமுறையினருக்கு உங்களது அனுபவங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருங்காலத்தில் இது போன்ற பேரிடர் நிகழும் போது, இப்போதைய நிலை எப்படி மோசமானதாக இருந்தது, அதை நாம் எப்படி சமாளித்தோம் என்பதை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.
சாதாரண மக்களின் நம்பிக்கையே வெற்றிக்கு மிகப்பெரிய உயிர்நாடியாகும். இதைவிடப் பெரிது வேறு எதுவுமில்லை. நீங்கள் இதை எளிதில் செய்து முடிப்பீர்கள். உங்களது பணிச்சுமை குறித்து நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மழைக்காலம் வரும்போது, பருவகால நெருக்கடியும் அதிகரிக்கும். இந்த அனைத்துக்கும் இடையில், நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கடவுள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவாராக. உங்களது கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிட்டும். உங்களுக்கு என் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.