வணக்கம்!
உங்கள் அனைவருடனும் விவாதங்கள் நடத்துவது மிகவும் விரிவான வகையில் களநிலைமையை நமக்குத் தெரிவிப்பதோடு, சரியான திசையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது! தொடர்ச்சியாக சந்தித்து, விவாதிப்பது கூட முக்கியமானது; ஏனெனில் பெருந்தொற்றுக்கிடையே கடந்து செல்லும் நாட்கள் புதிய சூழ்நிலைகளையும் கூட ஏற்படுத்துகின்றன!
மருத்துவமனைகள் மற்றும் நமது சுகாதார கவனிப்புப் பணியாளர்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பது, அன்றாடப் பணிகளின் தொடர்ச்சியில் சுணக்கம் போன்று ஒவ்வொரு நாளும் நாம் புதிய சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நிலையில் நடத்தி வருவது, மத்திய அரசு அல்லது மாநில அரசு ஒரு குழுவாக இருந்து குழு உணர்வோடு தொடர்ச்சியாகப் பணியாற்ற முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு உணர்வு நல்ல விளைவுகளைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளது. இத்தகையப் பெரும் நெருக்கடி காலத்தில் இந்த வழியில் ஒருங்கிணைந்து பணியாற்றியிருப்பது ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய விஷயமாகும் .
மாண்புமிகு முதலமைச்சர்களே,
இப்போது நோய் பாதித்தவர்களில் 80 சதவீதத்தினர் இந்த 10 மாநிலங்களில்தான் இருக்கின்றனர். எனவே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநிலங்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். நாட்டில் தற்போது ஆறு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர். இந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்த 10 மாநிலங்களில்தான் இருக்கின்றனர்! எனவே இந்த மாநிலங்கள் ஒன்றாக அமர்ந்து, ஆய்வு செய்து நிலைமையை விவாதிப்பது அவசியமானதாக இருந்தது. இந்த மாநிலங்கள் மேற்கொண்ட புதிய முயற்சிகளையும் மிகச்சிறந்த நடைமுறைகளையும் ஒவ்வொருவரும் அறிய வேண்டும்; ஒவ்வொரு மாநிலமும் தங்களின் சொந்த வழியில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதால் ஒருவர் மற்றொருவரின் அனுபவங்களைக் கற்றறிய வேண்டும். இன்றைய விவாதத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் ஏராளமான விஷயங்களைக் கற்றிருக்கிறோம். நாம் ஒருங்கிணைந்து இந்தப் பத்து மாநிலங்களில் கொரோனாவைத் தோற்கடித்தால் நாடும் வெற்றி பெறும் என்பது உணரப்பட்டுள்ளது!
நண்பர்களே,
ஒவ்வொருநாளும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளது; தொடர்ந்து இது அதிகரிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றைக் கண்டறியவும் தடுக்கவும் இவை உதவி செய்திருக்கின்றன என்பதற்கு நாம் இன்று சாட்சியாக இருக்கிறோம். முன்பும் கூட உலகத்தோடு ஒப்பிடும் போது நமது நாட்டின் சராசரி இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. இது தொடர்ந்து குறைந்து வருவது மிகவும் திருப்தி அளிக்கும் விஷயமாகும். தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகளின் சதவீதம் குறைந்து வருகிறது; குணமடைவோர் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது ; மேம்பட்டும் வருகிறது. எனவே நமது முயற்சிகள் பயனுள்ளவை என்பது நிரூபணம் ஆகிறது என்பதே இதன் பொருளாகும்! மக்களிடையே நம்பிக்கை அதிகரித்திருப்பதும் அச்சச் சூழ்நிலை மறைந்து வருவதும் கூட மிகவும் முக்கியமான விஷயமாகும்.
நமது பரிசோதனைகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்தால், நமது வெற்றி இன்னமும் கூட மகத்தானதாக இருக்கும்! இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டுவருவதில் பெரும் கவனத்துடன் சற்று கூடுதலாக நாம் முயற்சி செய்தால் இந்த இலக்கையும் கூட நம்மால் எட்ட முடியும். அடுத்து என்ன செய்ய வேண்டும், எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்து ஏராளமான தெளிவை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். இதே வகையில் என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும் என்பது போன்ற விஷயங்கள் அடித்தள நிலையில் ஒவ்வொருவரையும் எட்டியிருக்கிறது. இந்தச் செய்தியை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் நாம் பரவலாக்க முடியும்.
பரிசோதனைகள் விகிதம் குறைவாக இருக்கும் மாநிலங்களில் நோய்த்தொற்று விகிதம் அதிகமாக இருப்பது இப்போது தெரிவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமாகிறது. குறிப்பாக பிகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகியவற்றில் பரிசோதனைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் தேவை என்பதை நமது விவாதம் வெளிப்படுத்தியிருக்கிறது.
நண்பர்களே,
கட்டுப்படுத்துதல், தொடர்பு கண்டறிதல், கண்காணிப்பு ஆகியவை கொரோனாவுக்கு எதிரான மிகவும் பயனுள்ள ஆயுதங்கள் என்பதை இதுவரையிலான நமது அனுபவம் காட்டுகிறது! தற்போது பொதுமக்களும் கூட இதனை உணர்ந்திருக்கிறார்கள்; அவர்கள் முழுமையாக ஒத்துழைக்கவும் செய்கிறார்கள். விழிப்புணர்வு நிலையை உயர்த்தும் நமது முயற்சிகளுடன், நல்ல பயன்களை அடைவதை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். வீட்டில் கட்டுப்படுத்தும் முறை இன்று மிகவும் நல்ல முறையில் அமல்படுத்தப்படுவதற்கு இதுவே காரணமாகும்.
நோய்த்தொற்று ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் நோயாளிகளை நாம் கண்டறிந்தால் இந்த நோய்த்தொற்று பெருமளவுக்குக் குறைந்து விடும் என்று நிபுணர்கள் தற்போது கூறுகிறார்கள். எனவே கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி, முகக் கவசங்கள் என்ற விதிகளை நாம் தொடர வேண்டும் என்பது எனது முக்கியமான வலியுறுத்தலாகும். நாம் கண்ட இடங்களில் எச்சில்துப்பக் கூடாது. இது தவிர அரசுகள், அரசு அமைப்புகள், கொரோனா போராளிகள் மற்றும் மக்களிடையே புதிய மந்திரத்தை நாம் பரவலாக்க வேண்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் யாராயினும் 72 மணி நேரத்திற்குள் அந்த நபரின்
அனைத்துத் தொடர்புகளையும் கண்டறியவேண்டும், கொரோனாவுக்காகப் பரிசோதிக்க வேண்டும் என்பதே அந்த மந்திரமாகும். இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாம் இந்த 72 மணிநேர விதிமுறையை வலியுறுத்தினால் மற்ற விஷயங்களும் கூட 72 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.
பரிசோதனை வலைப்பின்னலுக்கும் அப்பால் இன்று நாம் ஆரோக்கிய சேது செயலியையும் பெற்றிருக்கிறோம். ஆரோக்கிய சேது செயலியின் உதவியுடன் ஒரு குழு தொடர்ச்சியாகப் பகுப்பாய்வு செய்தால், எந்தப் பகுதியிலிருந்து அதிகபட்ச புகார்கள் வருகின்றன என்பதை நாம் எளிதாகக் கண்டறிய முடியும். ஹரியானாவில் சில மாவட்டங்கள், உத்தரப்பிரதேசத்தில் சில மாவட்டங்கள், தில்லி ஆகியவை மிகப்பெரும் கவலைக்குரியதாக இருந்தன என்பதை நாங்கள் கவனித்தோம். மிகவும் அச்சுறுத்தலான நெருக்கடி ஏற்படும் என்று தில்லி அரசும் கூட அறிவித்தது. எனவே நான் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன். நமது உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. புதிய அணுகுமுறையை மேற்கொண்டோம். அந்த ஐந்து மாவட்டங்களிலும் தில்லி நகரிலும் மிகப் பெருமளவுக்கு விரும்பத்தக்கப் பயன்களை நாங்கள் பெற்றோம்.
எவ்வளவு சிக்கலான நிலைமையாகத் தோன்றினாலும் கூட, முறைப்படியான வழியில் நாம் முன்னேறிச் சென்றால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அந்த நிலைமைகளை நமக்கு சாதகமாக மாற்ற முடியும் என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இதை அனுபவமாகவும் நாங்கள் பெற்றிருக்கிறோம் . இந்த அணுகுமுறையின் அம்சங்கள் இவைதான்: கட்டுப்பாட்டுப் பகுதிகளை முழுமையாகத் தனிமைப்படுத்துதல், தேவைப்படும் இடங்களில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்குதல், ரிக்ஷா இழுப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்று மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை 100 சதவீதம் பரிசோதித்தல். இந்த முயற்சிகளின் விளைவு இன்று நம் முன்னால் இருக்கிறது! மருத்துவமனைகளில் மிகச் சிறந்த நிர்வாகம், ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற முயற்சிகளும் கூட பெருமளவு உதவியிருக்கின்றன!
நண்பர்களே,
மிகவும் பயனுள்ள அனுபவம் உங்களுடையதாக இருக்கிறது! உங்கள் மாநிலங்களின் கள எதார்த்தத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் வெற்றியின் பாதை உருவாக்கப்பட்டுள்ளது! இன்று நாங்கள் செய்ய முடிந்திருக்கிற எதுவானாலும் அதனைச் சாதிப்பதற்கு உங்களின் அனுபவங்கள் எங்களுக்குப் பெருமளவில் உதவியிருக்கின்றன. இந்த அனுபவத்தின் பலத்துடன் இந்தப் போராட்டத்தில் நாடு முழுமையாக வெற்றி பெறும், புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். வேறு ஏதாவது ஆலோசனைகள், கருத்துக்களை நீங்கள் கொண்டிருந்தால் எப்போதும்போல எல்லா நேரத்திலும் உங்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்! நீங்கள் என்னிடம் சொல்லவேண்டும். அரசின் அனைத்து அதிகாரிகளும் கூட இன்று பங்கேற்றுள்ளனர். எனவே நீங்கள் தெரிவித்திருக்கும் விஷயங்களை, வெளிப்படுத்தியிருக்கும் கவலைகளை அந்தக் குழுவினர் உடனடியாக கவனிப்பார்கள் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். ஆனால் சவான் முதல் தீபாவளி வரையிலான காலத்தில் மேலும் சில நோய்களின் அபாயமும் அதிகரிக்கும் என்பதை நாம் அறிவோம். இந்த நோய்களையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. ஆனால் இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வருவது, 72 மணி நேரத்தில் அனைத்துத் தொடர்பு நபர்களையும் கண்டடைவதன் மூலம் குணமடைவோர் விகிதத்தை விரைவாக அதிகரிப்பது என்ற இலக்கை எட்டமுடியும் என்று நான் நம்புகிறேன். இந்த அம்சங்களிலும் மந்திரங்களிலும் நாம் கவனம் செலுத்தினால், நோயாளிகளில் 80 சதவீதத்தைக் கொண்டிருக்கும், இறப்புகளில் 82 சதவீதத்தைக் கொண்டிருக்கும் நமது 10 மாநிலங்கள் நிலைமையைத் தலைகீழாக மாற்ற முடியும். 10 மாநிலங்கள் ஒருங்கிணைந்து இந்தியாவை வெற்றிகரமாக்க முடியும் என்றும் இதனை நம்மால் செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன். நேரம் ஒதுக்கிய உங்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். காலம் குறைவாக இருந்த போதும் உங்களுடைய கருத்துக்களை மிக நன்றாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு மிக்க நன்றி!