"பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும்"
"இந்தியாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.4 மில்லியன் பிரதிநிதிகளில் 46% பெண்கள்"
"இந்தியாவில் உள்ள பெண்கள் - சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையான மிஷன் லைஃப் இயக்கத்தின் விளம்பரத் தூதர்களாக உள்ளனர்"
"இயற்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள பெண்கள், பருவநிலை மாற்றத்திற்கான புதுமையான தீர்வுகளைக் காணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்"
"சந்தைகள், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள், நிதி பெறுதல் ஆகியவற்றிற்கான பெண்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் தடைகளை அகற்ற நாம் பாடுபடவேண்டும்"
"இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ், 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' குறித்த ஒரு புதிய பணிக்குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது

மதிப்பிற்குரியவர்களே, பெண்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம்!

மகாத்மா காந்தியின் பெயரில் அமைந்துள்ள நகரமான காந்திநகர் உருவான நாளில் உங்கள் அனைவரையும் இங்கு வரவேற்கிறேன். அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தைப் பார்வையிட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, முழு உலகமும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றில் நிலையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பது பற்றி பேசுகிறது. காந்தி ஆசிரமத்தில், காந்திஜியின் வாழ்க்கை முறையின் எளிமைத்தன்மை, நிலைத்தன்மை, தற்சார்பு மற்றும் சமத்துவம் போன்றவை குறித்த அவரது தொலைநோக்கு சிந்தனைகளை நீங்கள் நேரடியாகக் காண்பீர்கள். நீங்கள் அதை உத்வேகமாகக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். தண்டி குதீர் அருங்காட்சியகத்திலும் நீங்கள் அதை அனுபவிக்க முடியும், இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிடக்கூடாது. காந்தியடிகளின் புகழ்பெற்ற சர்க்கா நூற்புச் சக்கரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கங்காபென் என்ற பெண்ணால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அன்றிலிருந்து காந்தியடிகள் எப்போதும் கதர் ஆடையை அணிந்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். இது தற்சார்பு மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாறியது.

நண்பர்களே,

பெண்கள் வளர்ச்சியடையும் போது உலகம் செழிக்கும். அவர்களின் பொருளாதார மேம்பாடு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. அவர்களுக்கு கல்வி கிடைப்பது உலகளாவிய முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது. அவர்களின் தலைமைத்துவம் ஒருங்கிணைப்பை வளர்க்கிறது. மேலும், அவர்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தைத் தூண்டுகின்றன. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மிகவும் பயனுள்ள வழி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அணுகுமுறையாகும். இந்த திசையில் இந்தியா தற்போது முன்னேறி வருகிறது.

நண்பர்களே,

இந்திய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஒரு உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் ஒரு எளிய பழங்குடி பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழிநடத்தி, உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியாக பணியாற்றுகிறார். இந்த ஜனநாயகத்தின் தாயகத்தில், 'வாக்களிக்கும் உரிமை' பெண்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் இந்திய அரசியலமைப்பால் ஆரம்பத்திலிருந்தே சமமாக வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் உரிமையும் சமமான அடிப்படையில் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்தின் முக்கிய முகவர்களாக உள்ளனர். இந்தியாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 46சதவீதம் பேர் பெண்கள். சுய உதவிக் குழுக்களாக பெண்களை அணிதிரட்டுவதும் மாற்றத்திற்கான சக்திவாய்ந்த சக்தியாக இருந்து வருகிறது. கொவிட் தொற்றுநோய் பாதிப்பின் போது, இந்த சுய உதவிக் குழுக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகள் சமூக ஆதரவுக்கான தூண்களாக உருவெடுத்தனர். முகக்கவசம், சானிடைசர் தயாரித்து, நோய்த்தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தியாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். கொவிட் தொற்றின் போது அவர்கள் பாதுகாப்பு கவசமாக இருந்தனர். மேலும், அவர்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

நண்பர்களே,

இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி எங்களுக்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 70 சதவீத கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 80 சதவீத பயனாளிகள் பெண்கள் ஆவர். பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களுக்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுத்தமான சமையல் எரிபொருளை வழங்குவது சுற்றுச்சூழலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்பக் கல்வியில் பெண்களின் எண்ணிக்கை 2014 முதல் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவு பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 43% பேர் பெண்கள். இந்தியாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளில் நான்கில் ஒரு பங்கினர் பெண்கள். சந்திரயான், ககன்யான், மிஷன் மார்ஸ் போன்ற நமது முன்னோடித் திட்டங்களின் வெற்றிக்குப் பின்னால் பெண் விஞ்ஞானிகளின் திறமையும் கடின உழைப்பும் உள்ளது. இன்று இந்தியாவில் ஆண்களை விட பெண்களே உயர்கல்வியில் அதிகம் சேருகின்றனர். சிவில் விமானப் போக்குவரத்தில் அதிக சதவீத பெண் விமானிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் தற்போது போர் விமானங்களை இயக்கி வருகின்றனர். நமது அனைத்து ஆயுதப்படைகளிலும் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

நண்பர்களே,

இந்தியாவிலும், உலகளாவிய தென்பகுதி நாடுகளிலும், கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் முதுகெலும்பாகவும், சிறு வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களாகவும் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இயற்கையுடனான நெருங்கிய தொடர்பைக் கருத்தில் கொண்டு, பருவநிலை மாற்றத்திற்கான புதுமையான தீர்வுகளுக்கான திறவுகோலை பெண்கள் கொண்டுள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில்  முதல் முக்கிய பருவ நிலை நடவடிக்கைக்கு பெண்கள் எவ்வாறு தலைமை தாங்கினர் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். ராஜஸ்தானின் பிஷ்னோய் சமூகத்தினர், அம்ரிதா தேவி தலைமையில், 'சிப்கோ' இயக்கத்தை துவக்கினர். கட்டுப்பாடற்ற முறையில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மரங்களைக் கட்டிப்பிடிக்கும் இயக்கம் அது. பல கிராமவாசிகளுடன் சேர்ந்து, இயற்கைக்காக தமது உயிரைத் தியாகம் செய்தார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கமான லைஃப் இயக்கத்தின் தூதர்களாகவும் இந்திய பெண்கள் உள்ளனர். இந்த இயக்கத்தில் பாரம்பரிய ஞானத்தின் அடிப்படையில் சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பல்வேறு முயற்சிகளின் கீழ், சூரிய சக்தி பேனல்கள் மற்றும் விளக்குகள் தயாரிப்பதில் பெண்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

உலகப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோர் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் பங்கு புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, 1959 ஆம் ஆண்டில், மும்பையில் ஏழு குஜராத்தி பெண்கள் ஒன்றிணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுறவு இயக்கத்தை உருவாக்கினர்.  ஸ்ரீ மகிளா கிரிஹ் உத்யோக் என்ற இயக்கம் அது. அப்போதிலிருந்து, பல லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை அது மாற்றியுள்ளது. அவர்களின் மிகவும் பிரபலமான தயாரிப்பான லிஜ்ஜத் அப்பளம், குஜராத் உணவு வகைகளில் பிரபலமானது! கூட்டுறவு இயக்கத்தின் மற்றொரு வெற்றிக் கதை பால்வளத் துறை. இதுவும் பெண்களால் செயல்படுத்தப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 3.6 மில்லியன் பெண்கள் பால்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தியா முழுவதும் இதுபோன்ற பல உத்வேகமூட்டும் நிகழ்வுகள் உள்ளன. இந்தியாவில், 15 சதவீத யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், குறைந்தபட்சம் ஒரு பெண் நிறுவனர் உள்ளனர். பெண்கள் தலைமையிலான இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இருப்பினும், சாதனையாளர்களாக பெண்கள் மாறுவதற்கு நிலையான தளத்தை உருவாக்குவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். சந்தைகள், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தடைகளை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில், பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் சுமை சரியான அமைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மதிப்பிற்குரியவர்களே,

பெண் தொழில்முனைவு, தலைமைத்துவம் மற்றும் கல்வியில் உங்கள் கவனம் பாராட்டத்தக்கது. பெண்களுக்கான டிஜிட்டல் மற்றும் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்காக நீங்கள் 'டெக்-ஈக்விட்டி பிளாட்ஃபார்ம்' என்ற தளத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' குறித்த ஒரு புதிய பணிக்குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், காந்திநகரில் மேற்கொள்ளப்படும்  அயராத முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மகத்தான நம்பிக்கையை அளிக்கும். இக்கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற வாழ்த்துகிறேன்.

நன்றி.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December

Media Coverage

Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2024
December 17, 2024

Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government