மேதகு அதிபர் இர்பான் அலி அவர்களே,
பிரதமர் மார்க் பிலிப்ஸ்,
துணைத் தலைவர் பாரத் ஜக்தியோ,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ரமோதார்,
கயானா அமைச்சரவை உறுப்பினர்கள்,
இந்தோ-கயானீஸ் சமூகத்தின் உறுப்பினர்கள்,
சீமான்களே, சீமாட்டிகளே,
வணக்கம்!
சீதாராம் !
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.
நண்பர்களே,
கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான 'ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்காக கயானா மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது 1.4 பில்லியன் இந்தியர்களின் கவுரவமாகும். இது 3 லட்சம் வலுவான இந்தோ-கயானா சமூகத்தினருக்கும், கயானாவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
நண்பர்களே,
இருபது ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அற்புதமான நாட்டிற்கு வருகை தந்தது எனது நினைவில் உள்ளது. அப்போது, நான் எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை. நான் ஒரு பயணியாக கயானாவுக்கு வந்தேன், முழு ஆர்வத்துடன். இப்போது, பல நதிகள் ஓடும் இந்த மண்ணுக்கு பாரதத்தின் பிரதமராக நான் திரும்பி வந்துள்ளேன். அன்றும் இன்றும் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால் எனது கயானா சகோதர சகோதரிகளின் அன்பும் பாசமும் அப்படியே உள்ளது! எனது அனுபவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது - நீங்கள் ஒரு இந்தியரை இந்தியாவிலிருந்து வெளியே எடுக்கலாம், ஆனால் ஒரு இந்தியரிடமிருந்து இந்தியாவை வெளியே எடுக்க முடியாது.
நண்பர்களே,
இன்று, நான் இந்தியா வருகை நினைவுச்சின்னத்தை பார்வையிட்டேன். ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு உங்கள் மூதாதையர்களின் நீண்ட மற்றும் கடினமான பயணத்தை இது உயிர்ப்பிக்கிறது. அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தங்களுடன் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டு வந்தனர். காலப்போக்கில், அவர்கள் இந்த புதிய நிலத்தை தங்கள் வீடாக மாற்றிக் கொண்டனர். இன்று, இந்த மொழிகள், கதைகள் மற்றும் மரபுகள் கயானாவின் வளமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தோ-கயானா சமூகத்தினரின் உணர்வுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடினீர்கள். கயானாவை வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்ற நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். எளிமையான தொடக்கத்திலிருந்து நீங்கள் மேலே உயர்ந்துள்ளீர்கள். திரு செட்டி ஜெகன் கூறுவார்: "ஒரு நபர் எங்கு பிறக்கிறார் என்பது முக்கியமல்ல, ஆனால் அவர்கள் யாராக இருக்க விரும்புகிறார்கள் என்று தேர்ந்தெடுப்பதே முக்கியம்." அவரும் இந்த வார்த்தைகளை வாழ்ந்து காட்டினார். உழைப்புக் குடும்பத்தில் பிறந்த அவர், உலக அளவில் உயர்ந்த தலைவராக உயர்ந்தார். அதிபர் இர்பான் அலி, துணை அதிபர் பாரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர், இவர்கள் அனைவரும் இந்தோ கயானா சமூகத்தின் தூதர்கள். ஆரம்பகால இந்தோ-கயானா அறிவுஜீவிகளில் ஒருவரான ஜோசப் ருஹோமோன், முதல் இந்தோ-கயானா கவிஞர்களில் ஒருவரான ராம்சரிதர் லல்லா, புகழ்பெற்ற பெண் கவிஞர் ஷானா யார்டன், இதுபோன்ற பல இந்தோ-கயானா கல்வி மற்றும் கலை, இசை மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
நண்பர்களே,
நமது ஒற்றுமைகள் நமது நட்புக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. குறிப்பாக, இந்தியாவையும் கயானாவையும் ஆழமாக இணைக்கும் மூன்று விஷயங்கள் உள்ளன. கலாசாரம், சமையல், கிரிக்கெட்! இரண்டு வாரங்களுக்கு முன்பு, நீங்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடி இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். சில மாதங்களில், இந்தியா ஹோலியைக் கொண்டாடும்போது, கயானா பக்வாவைக் கொண்டாடும். இந்த ஆண்டு, தீபாவளி சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் குழந்தை ராமர் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு திரும்பினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கயானாவிலிருந்து புனித நீர் அனுப்பப்பட்டது என்பதை இந்திய மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். கடல்களுக்கு அப்பால் இருந்தாலும், பாரத அன்னையுடனான உங்களது கலாச்சார தொடர்பு வலுவானது. ஆர்ய சமாஜ நினைவுச்சின்னம் மற்றும் சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு இன்று நான் சென்றபோது இதை என்னால் உணர முடிந்தது. வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நமது கலாச்சாரம் குறித்து இந்தியாவும், கயானாவும் பெருமிதம் கொள்கின்றன. பன்முகத்தன்மையை நாம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கிறோம். இடமளிப்பது மட்டுமல்ல. கலாச்சார பன்முகத்தன்மையே நமது பலம் என்பதை நமது நாடுகள் காட்டுகின்றன.
நண்பர்களே,
இந்திய மக்கள் எங்கு சென்றாலும், ஒரு முக்கியமான விஷயத்தை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். உணவு! இந்தோ-கயானீஸ் சமூகம் இந்திய மற்றும் கயானீஸ் கூறுகளைக் கொண்ட ஒரு தனித்துவமான உணவு பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. தால் பூரி இங்கு பிரபலமானது என்பதை நான் அறிவேன்! அதிபர் அலியின் வீட்டில் நான் சாப்பிட்ட ஏழு கறி உணவு சுவையாக இருந்தது. அது எனக்கு ஒரு இனிய நினைவாக இருக்கும்.
நண்பர்களே,
கிரிக்கெட்டின் மீதான காதல், நமது நாடுகளையும் வலுவாக இணைக்கிறது. இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. இது நமது தேசிய அடையாளத்தில் ஆழமாக பதிந்துள்ள ஒரு வாழ்க்கை முறை. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் தேசிய கிரிக்கெட் மைதானம் நமது நட்புறவின் அடையாளமாக திகழ்கிறது. கன்ஹாய், காளிச்சரண், சந்தர்பால் அனைவரும் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பெயர்கள். கிளைவ் லாயிட் மற்றும் அவரது குழுவினர் பல தலைமுறையினருக்கும் பிடித்தமானவர்கள். இந்தப் பிராந்தியத்தை சேர்ந்த இளம் வீரர்களுக்கும் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் சிலர் இன்று நம்முடன் உள்ளனர். இந்த ஆண்டு நீங்கள் நடத்திய டி20 உலகக் கோப்பையை எங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ரசித்தனர். கயானாவில் நடந்த போட்டியில் 'இந்திய அணிக்கான' உங்கள் உற்சாகத்தை இந்தியாவில் கூட கேட்க முடியும்!
நண்பர்களே,
இன்று காலை, கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவம் எனக்கு கிடைத்தது. ஜனநாயகத்தின் தாயிடமிருந்து வந்தவன் என்ற முறையில், கரீபியன் பிராந்தியத்தில் உள்ள மிகவும் துடிப்பான ஜனநாயகங்களில் ஒன்றுடன் ஆன்மீக இணைப்பை உணர்ந்தேன். நம்மை ஒன்றாக இணைக்கும் பகிரப்பட்ட வரலாறு உள்ளது. காலனி ஆதிக்கத்திற்கு எதிரான பொதுவான போராட்டம், ஜனநாயக மாண்புகளின் மீதான அன்பு, பன்முகத்தன்மைக்கு மரியாதை ஆகிய துறைகளில் நாம் உருவாக்க விரும்பும் பகிரப்பட்ட எதிர்காலம் உள்ளது. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அபிலாஷைகள், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான உறுதிப்பாடு, நியாயமான மற்றும் உள்ளடக்கிய உலக அமைப்பில் நம்பிக்கை ஆகியவை இதில் அடங்கும்.
நண்பர்களே,
கயானா மக்கள் இந்தியாவின் நலன் விரும்பிகள் என்பதை நான் அறிவேன். இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்து வருவீர்கள். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பயணம் என்பது அளவு, வேகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் சிறப்பானதாக உள்ளது. வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா பத்தாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. விரைவில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம். நமது இளைஞர்கள் நம்மை உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக மாற்றியுள்ளனர். மின் வணிகம், செயற்கை நுண்ணறிவு, நிதிநுட்பம், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியா உள்ளது. செவ்வாய் மற்றும் சந்திரனை அடைந்து விட்டோம். நெடுஞ்சாலைகள் முதல் ஐ-வேஸ் வரை, விமானப் போக்குவரத்து முதல் ரயில்வே வரை, அதிநவீன உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். எங்களிடம் வலுவான சேவைத் துறை உள்ளது. இப்போது, உற்பத்தியிலும் நாங்கள் வலுவடைந்து வருகிறோம். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவின் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக மட்டுமின்றி, அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதி ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மக்களுக்காக 500 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் தொடங்கினோம். இந்த வங்கிக் கணக்குகளை டிஜிட்டல் அடையாளம் மற்றும் மொபைல்களுடன் இணைத்தோம். இதன் காரணமாக, மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவிகளைப் பெறுகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகப்பெரிய இலவச சுகாதார காப்பீட்டு திட்டமாகும். இதன் மூலம் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். தேவைப்படுபவர்களுக்காக 30 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை நாங்கள் கட்டியுள்ளோம். வெறும் பத்தாண்டுகளில், 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளோம். ஏழைகள் மத்தியிலும் கூட, எங்கள் முயற்சிகள் அங்குள்ள பெண்களுக்கு மிகவும் பயனளித்துள்ளன. லட்சக்கணக்கான பெண்கள் அடிமட்ட தொழில்முனைவோராக மாறி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
நண்பர்களே,
இந்தப் பெரும் வளர்ச்சி அனைத்தும் நடந்து கொண்டிருந்தபோது, நாங்கள் நிலைத்தன்மையிலும் கவனம் செலுத்தினோம். ஒரு தசாப்தத்தில், நமது சூரிய ஆற்றல் திறன் 30 மடங்கு அதிகரித்துள்ளது! உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் பசுமை நகர்வை நோக்கி நாங்கள் நகர்ந்துள்ளோம். சர்வதேச அளவிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பல முன்முயற்சிகளில் நாங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளோம். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, இந்த முன்முயற்சிகளில் பல உலகளாவிய தெற்கை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துகின்றன. சர்வதேச பெரும்பூனை கூட்டணிக்கும் நாம் ஆதரவு தெரிவித்து வருகிறோம். கம்பீரமான சிறுத்தைகளைக் கொண்ட கயானாவும் இதன் மூலம் பயனடைகிறது.
நண்பர்களே,
கடந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தின் சிறப்பு விருந்தினராக அதிபர் இர்பான் அலியை நாம் வரவேற்றோம். பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பர்ரத் ஜக்தேவ் ஆகியோரையும் வரவேற்றோம். பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். இன்று, எரிசக்தி முதல் தொழில் முனைவு வரை, ஆயுர்வேதம் முதல் வேளாண்மை வரை, கட்டமைப்பு முதல் புதிய கண்டுபிடிப்பு வரை, சுகாதாரம் முதல் மனித வளம் வரை, தரவு முதல் வளர்ச்சி வரை நமது ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். நமது கூட்டாண்மை பரந்த பிராந்தியத்திற்கும் குறிப்பிடத்தக்க மதிப்பைக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா-கரிகாம் இரண்டாவது உச்சிமாநாடு இதற்கு சான்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற முறையில், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை என்பதில் நாம் இருவரும் நம்பிக்கை கொண்டுள்ளோம். வளரும் நாடுகள் என்ற வகையில், உலகளாவிய தெற்கின் சக்தியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் உத்திசார் சுயாட்சியை விரும்புகிறோம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிக்கிறோம். நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை நீதிக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம்.
நண்பர்களே,
வெளிநாடு வாழ் இந்தியர்களை நான் எப்போதும் தேசியதூதர்கள் என்றே அழைக்கிறேன். அம்பாசிடர் என்றால் ராஜதூதர்தான், ஆனால் என்னைப் பொறுத்தவரை நீங்கள் அனைவரும் ராஜதூதர்கள்தான். அவர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் தூதர்கள். தாயின் மடியில் இருக்கும் சுகத்திற்கு எந்த உலக இன்பமும் ஈடாகாது என்பார்கள். இந்தோ-கயானீஸ் சமூகத்தினராகிய நீங்கள் இரட்டிப்பாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கயானாவை தாய்நாடாகவும், பாரத மாதாவை உங்கள் மூதாதையர் நாடாகவும் கொண்டுள்ளீர்கள். இன்று, இந்தியா வாய்ப்புகள் நிறைந்த பூமியாக இருக்கும்போது, இரு நாடுகளையும் இணைப்பதில் நீங்கள் ஒவ்வொருவரும் பெரிய அளவில் பங்காற்ற முடியும்.
நண்பர்களே,
இந்தியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள் வினாடி வினா தொடங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கயானாவிலிருந்து உங்கள் நண்பர்களையும் இதில் கலந்து கொள்ள ஊக்குவிக்கவும். இந்தியா, அதன் மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
நண்பர்களே,
அடுத்த ஆண்டு, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை, பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும். குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறேன். உங்களில் பலர் பஸ்தி அல்லது கோண்டாவுக்கு நீங்கள் பயணம் செய்யலாம். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கும் செல்லலாம். ஜனவரியில் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர் தின நிகழ்ச்சிக்காக மற்றொரு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது . நீங்கள் வந்தால், பூரியில் மஹாபிரபு ஜகந்நாதரின் அருளையும் பெறலாம். இப்போது பல நிகழ்ச்சிகள் மற்றும் அழைப்புகளுடன், உங்களில் பலரை விரைவில் இந்தியாவில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். நீங்கள் என்னிடம் காட்டிய அன்பு மற்றும் பாசத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
நன்றி.
மிகவும் நன்றி.
என் நண்பர் அலிக்கு சிறப்பு நன்றி. மிகவும் நன்றி.